வியாழன், 19 மே, 2011

மொரிஷியஸ்,லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள்

மொரிஷியஸ் எப்படி இந்தியாவின் செல்லப்பிள்ளையானது ?

அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இளையராஜா தமிழில் கோலோச்சிய 80களில் ஆரம்பிக்கக் கூடிய கதை. சரியாய் 1983. மொரிஷியஸிற்கும் இந்தியாவுக்கும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி மொரிஷியஸில் நிறுவனங்கள் வைத்து, இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் வருமானத்தினை மொரிஷியஸ் அரசாங்கம் வரி விதிக்கும். ஒரு வேளை இந்தியாவில் வரி விதிக்கப்பட்டிருந்தால், அவை மொரிஷியஸில் வரி விதிக்கப்படாது. இதற்கு இரட்டை வரி நிறுத்த உறவு (Double Taxation Avoidance Treaty) என்று பெயர். இந்திரா காந்தி செத்துப் போவதற்கு ஒரு வருடத்திற்கு முன் வந்த இந்த உறவு தான் நம் மொரிஷியஸ் கனவுகளுக்கு ஆரம்பம்.
இப்போது சிபிஐ குடாய்ந்தெடுக்கும் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொரிஷியஸுக்கு தான் பெரிய பங்கு. அங்கிருந்து தான் பல “கைகளுக்கு” பல “டம்மி” நிறுவனங்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது சிபிஐயின் வாதம். மொரிஷியஸ் என்றவுடனேயே எல்லாமே கருப்பு என்பதும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் தங்கள் நிதியினை மொரிஷியஸ் வழியாகவே கொண்டு வருகின்றன. கொஞ்சம் கூர்ந்து எகனாமிக் டைம்ஸ் படித்தால், இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான கையகப்படுத்துதல், நிறுவனங்களை வாங்குதல், விற்றல், லாபத்தினைப் பங்கு போடல் என எல்லா சங்கதிகளிலும் மொரிஷியஸிற்கு ஏதாவது ஒரு பங்கு இருக்கும்.
மொரிஷியஸிலிருந்து மட்டும் 40% அன்னிய முதலீடு நமக்கு வந்திருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கையொன்று சொல்கிறது. மொரிஷியஸ், கேமென் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பெர்மூடா என்கிற குட்டித் தீவுகள் தான் இந்தியாவின் அன்னிய முதலீட்டில் கிட்டத்திட்ட 75-80% வரைக்கும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இந்தியாவின் பிரச்னை, நாம் பெரும்பாலான குட்டித் தேசங்களோடும், இரட்டை வரி நிறுத்த உறவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தான் சிக்கலின் ஆரம்பம். வெறும் அன்னிய முதலீடுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதியானது, பின்னாளில் இங்கே லஞ்சம், ஊழல், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல், கமிஷன் வாங்கிய ஆட்கள் எல்லாம் தங்களுடைய பணத்தினை வெவ்வேறு வழிகளில் இம்மாதிரியான குட்டித் தீவுகளுக்கு கொண்டு போய், நாம்கேவாஸுக்கு பேப்பர் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம், மீண்டும் இந்தியாவிற்கு அரசு மரியாதையோடு பணத்தினை தங்களுடைய பினாமி நிறுவனங்களிலேயே முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் கருப்புப் பண சுழற்சியின் மிக முக்கியமான தொழில்முறை ரகசியம்.
சுலபமாய் அறிந்துகொள்ள உங்கள் ட்ராவல் ஏஜெண்டிடம் சிங்கப்பூர், துபாய், லண்டன், ஹாங்காங் இந்த நான்கு நகரங்களுக்கும் ஒரு நாளில் இந்தியாவிலிருந்து எத்தனை விமானங்கள் போகின்றன என்று கேளுங்கள். அவர் சொல்லும் விடைக்கும் மேலே படித்தவற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தினை இதழோரம் தவழும் புன்னகை சொல்லும்.
So now what?
இரண்டு உலகளாவிய நிறுவனங்கள் இந்த வரிகளற்ற சொர்க்கங்களைப் பயன்படுத்தி எப்படி வரிகளை ஏய்க்கின்றன, அதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய பணம் எப்படி தனியார் நிறுவனங்களுக்குப் போய்ச் சேருகிறது என்று பார்ப்போம்.
கூகிள். இணையத்தின் நெ.1 நிறுவனம். கூகிள் உலகெங்கிலும் கிளை பரப்பிய ஆலமரம். அதன் விழுதுகள் வீழாத இடங்கள் அட்லஸில் இல்லை என்று சொல்லலாம். ஒரு வருடத்திற்கு $30 பில்லியன் டாலர்கள். ஐரோப்பா அதன் மிகப் பெரிய சந்தை. இத்தனை கோடானுகோடி தொகையும் அதன் விளம்பர வருவாயிலிருந்து வருவது. ஐரோப்பாவில் நிறுவன வரி விதிப்பு அதிகம். ஆனால் சாமர்த்தியமாய் கூகிள், தன்னுடைய ஐரோப்பிய வருமானம் அனைத்தையும் அயர்லாந்து > நெதர்லாந்து > பெர்மூடா என்கிற வழிகளைக் கொண்டு, அந்த நாடுகளின் வரி சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகளைப் பயன்படுத்தி வெறும் 2.4% மட்டுமே வரியாகக் கட்டுகிறது. மொத்த ஐரோப்பாவும் இதைக் கசப்பாகப் பார்க்கிறது. இதன் மூலம் கூகிள் வருடத்திற்கு கிட்டத்திட்ட $3.1 பில்லியன் வருமானத்தினை (ரூ.13,950 கோடிகள்)“வரிகளற்று” நேரடியாய் தன்னுடைய பாலன்ஸ் ஷீட்டில் கேஷாக வைத்திருக்கிறது. “Don’t be Evil” என்பது கூகிளின் கொள்கை என்பதறிக.
முதலில் ஹட்ச் நாய், பின் சூசூக்கள் என்று இந்தியாவில் கொண்டாடப்படும் வோடாஃபோன். ஹட்சினை கையகப்படுத்திய வோடஃபோன் ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கும், இந்திய வருமான வரித்துறைக்கும் நான்கு வருடங்களாக டக்கப்-வார் மும்பை நீதிமன்றத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம்: வோடஃபோன் இந்தியாவில் வரியாக செலுத்த வேண்டிய $1.7பில்லியன் ( ரூ.7,650 கோடிகள்). வருமான வரித்துறை அது இந்தியாவை சார்ந்தது என்கிறது. வோடாஃபோனோ, அதன் மொரிஷிய நிறுவனங்களின் வழியே இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட தொகையின் லாப ஈட்டுத்தொகையின் வரியைத் தான் மொரிஷியிஸில் தான் கட்டுவேன் என்கிறது. மொரிஷியஸில் கிட்டத்திட்ட 0% என்பதறிக.
மேலே சொன்ன இரண்டு உதாரணங்கள் தான் ஆரம்பம். வரி ஏய்ப்பு இப்படி தான் உலகளாவிய அளவில் இன்றைக்கு நடக்கிறது. இதன் மூலம் போகும் பணம், நிறுவனங்களுக்கு, தனி நபர்களுக்கு, அரசாங்களுக்கு என பங்கு பிரிக்கப்பட்டு பின்னர் வேறு வழியாக மீண்டும் தன்னுடைய நாட்டுக்கே whiter than white ஆக வரும்.
இந்தப் பணம் எப்படி இந்த வரிகளற்ற சொர்க்கங்களுக்குக் கொண்டு போகப் படுகிறது என்பது அடுத்த வாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக