திங்கள், 30 மே, 2011

வட மாநிலங்களில் காங். சரிவுக்கு இந்திராவே காரணம்-பிரணாப் தலைமையிலான புத்தகம் கூறுகிறது!

டெல்லி:  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தான் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சரிந்ததாக அக்கட்சியின் 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தக்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு வரலாற்று புத்தகத்தின் 5-வது பதிப்பை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு தயாரித்தது.

இந்த புத்தகத்தில் கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் நோக்கர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் இது ஒன்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ வரலாறு இல்லை என்றும் பிரணாப் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

இதில் 1964-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் வரலாறு பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திரா காந்தி தலைமையில் கட்சியின் செயல்பாடு குறித்து அலசி ஆராயப்பட்டுள்ளது.

1980-களில் இந்திரா காந்தி காங்கிரஸை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எடுத்த சில நடவடிக்கைகள் உள்கட்சி ஜனநாயகத்தை பாதித்தது. அதனால் தான் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி பெரிதும் சரிந்தது. அந்த பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டபாடில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதா பாய் தனது கட்டுரையில், இந்திரா காந்தி கூட்டுத் தலைமை தத்துவத்தின் அடிப்படையில் செயல்படாமல் தனிநபர் தலைமையைத் தான் முன்னிறுத்தினார் என்று கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் பல மாநிலங்களில் பெரும்பான்மையை இழந்தது. குறிப்பாக வட மாநிலங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாகத் தெரியவில்லை. 1990-க்குப் பின் நடந்த தேர்தலில் இந்த பாதிப்புகள் எதிரொலித்தன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நேரு ஆட்சி நடத்தியபோது தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தனர். ஆனால் 1977-ம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு நிலைமை தலைகீழாகிவிட்டது.

அவசர நிலைக்கு முன்வரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அதன் பிறகு சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று புத்தக்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக