திங்கள், 30 மே, 2011

திஹார் சிறையில் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார் ராசா?

டெல்லி: முன்னாள் அமைச்சர் ராசா திஹார் சிறைக்கு உள்ளே வந்து மூன்று மாதங்களாகி விட்டது. வெளியில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது. உற்ற நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்து விட்டார்.ஆட்சி பறி போய் விட்டது. சக எம்.பி. கனிமொழியும் கைதாகி உள்ளே வந்து விட்டார். இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சுறுசுறுப்பாக இயங்கி வந்த ராசா, இன்று ஒரு குட்டி அறையில் டிவி, செய்தித் தாள்கள், புதிதாக கிடைத்த நண்பர்கள் சகிதம் முடங்கிக் கிடக்கிறார்.

காலையில் சின்னதாக ஒரு வாக்கிங், மாலையில் சக கைதிகளுடன் பேட்மிண்டன் என்று பொழுது போய்க் கொண்டிருக்கிறது ராசாவுக்கு. ஆரம்பத்தில் மகா இறுக்கமாக காணப்பட்ட ராசா இன்று சற்று ரிலாக்ஸ்டாக தெரிகிறார். சிறை வாழ்க்கை இப்போது அவருக்குப் பழகி விட்டது.

ராசா குறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற விஐபி கைதிகளைப் போல அல்லாமல், வெகு விரைவிலேயே சிறை வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு விட்டார் ராசா. ஆரம்பத்தில் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை. அமைதியாக இருந்தார். பிற கைதிகளுடன் பேச மாட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை. நன்றாகப் பேசுகிறார். பிற கைதிகளுடன் சகஜமாக பேசிப் பழகுகிறார். சிலர் அவருக்கு நண்பர்களாகி விட்டனர். அவரிடம் நண்பர்களாகியுள்ள பலரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாவர் என்றார்.

பிப்ரவரி 17ம் தேதி ராசா திஹார் சிறைக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர் படு சமர்த்தாக இருந்து வருகிறாராம். எந்தவிதமான பிரச்சினையும் செய்வதில்லை. மிகமிக ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறாராம்.

மிக மிகப் பெரிய ஊழல் புகாரை தன் தலை மீது வைத்திருந்தாலும், ராசாவின் பழக்க வழக்கம், படு எளிமையாக உள்ளதாம். திஹார் சிறையின் முதலாவது சிறையில், 9வது வார்டில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அதே சிறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள மேலும் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறைக்குள் வாக்கிங் போகிறார் ராசா. தான் அடைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளேயே இந்த வாக்கிங். அந்த வார்டில் உள்ள 14 கைதிகளுடனும் அவர் நண்பராகப் பழங்குகிறார்.

முதலில் சிறை சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார் ராசா. ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மட்டும் சாப்பாடு வரும். பின்னர் நண்பர்கள் அதிகமாகவே அவருக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டு பாத்திரத்தின் சைஸ் பெரிதாகி விட்டது. இப்போது தனக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டை தனது சக கைதிகளுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார் ராசா.

இட்லி, வடை, சாம்பார், ரசம், தயிர்ச் சாதம் என தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார் ராசா.

தனது அறையில் கொடுக்கப்பட்டுள்ள டிவியைப் பார்க்கும் ராசா, செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறார். மாலையில் சக கைதிகளுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடுகிறார்.

பிற கைதிகளுடன் ஒப்பிடுகையில் ராசா மிக மிக ஒழுங்குடன் இருக்கிறார் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

அவர் எந்த சிறப்புச் சலுகைகையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தமிழ் செய்தித் தாள்களை தாருங்கள் என்பது மட்டுமே அவர் வைத்த ஒரே கோரிக்கை. மற்ற எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக சிறை சாப்பாட்டையே மீண்டும் சாப்பிட ஆரம்பித்துள்ளார் ராசா.

சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்கும் ஸ்னாக்ஸ் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடிக்கடி அதை வாங்கிச் சாப்பிடுகிறார். அப்படி வாங்கும்போது சக கைதிகளுக்கும் சேர்த்தே வாங்குகிறார்.

திஹார் சிறைக்குள் பணப் புழக்கத்திற்குத் தடை உள்ளது. கூப்பன் கொடுத்துதான் பொருட்களைப் பெற முடியும். அதாவது கைதிகளை வாரத்திற்கு 2 முறை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி வரும்போது ஒரு முறைக்கு 1000 ரூபாயை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குப் பதில் கூப்பன்களாகப் பெற்று அதை கைதிகளிடம் தரலாம். கைதிகள் அந்த கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஸ்னாக்ஸ் போன்றவற்றை சிறை கேன்டீனில் பெற முடியும்.

ராசா அடைக்கப்பட்டுள்ள வார்டில் மேலும் இரு விஐபிக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் மூத்த போலீஸ் அதிகாரிகள். ஒருவரது பெயர் எஸ்.எஸ். ராத்தி. இவர் டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் ஆவார். 1997ல் கன்னாட் பிளேஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்னொருவர் ஆர்.கே.சர்மா. இவர் பத்திரிக்கையாளர் ஷிவானி பட்நாகரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராசா எப்போது வெளியே வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கனிமொழியை முதலில் பெயிலில் எடுக்கவே திமுக தரப்பு படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக திமுகவினரே கூறுகிறார்கள். எனவே ராசா இப்போதைக்கு வெளியே வரும் வழி தெரியவில்லை என்பது அவர்களின் கருத்து. ராசாவுக்கும் இது தெரிந்திருக்கும். எனவேதான் அவர் முன்பை விட இப்போது மிகுந்த ரிலாக்ஸ்டான மன நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்.

வெளியே வரும்போது மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரராக ராசா உருவெடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

English summary
It has been over three months since former Telecom Minister A.Raja has been cooling his heels in the capital's Tihar Jail for his suspected involvement in the 2G spectrum scam. Now, in place of the sullenness and shock of his initial days are friendly chats with fellow inmates, morning walks and evening sessions of badminton, jail sources say. "Unlike many other high-profile accused stationed in Tihar, Raja seems to have adapted to jail life easily in a short period. Initially, in the first week, he was not talkative or interacting with other inmates, but now he seems to have become friendly with the other inmates in his ward," a jail official told on condition of anonymity.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக