ஞாயிறு, 22 மே, 2011

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவாரா யாழ். வம்சாவளித் தமிழர்?

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பொன்று யாழ்.வம்சாவளித் தமிழரான சிங்கப்பூர் துணைப் பிரதமரை நாடி வந்துள்ளது.
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடப்பிடமாக கொண்ட தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் நியமித்துள்ளார்.
இந்நிலையில் இவரை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவராகவும் பொருளாதார நிபுணராகவும் உள்ள சண்முகரட்னம் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில் அப்பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தெற்காசிய நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருகின்றனர். இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.
இதற்கிடையே தர்மன் சண்முகரத்தினம் தற்போதைக்கு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஆனால் உலகின் முன்னணி பொருளியியல் வல்லூனர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி அமைச்சர்கள் என பலரும் இப்பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியா தென்னாபிரிக்க போன்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்த பதவியை பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவியை எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சில ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர். ஜெர்மனி அதிபர் அங்கெலா மார்க்கல் ஐரோப்பியர் ஒருவர் தான் நாணய நிதியத்தின் தலைவராக வேண்டுமென்று தீவிரமாக செயற்படுகின்றார்.
இந்த பதவி ஐரோப்பிய நாடு ஒன்றிற்கே வழங்கப்பட வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதிலும் இம்முறை இப்பதவிக்கு தென்னாபிரிக்கா, இந்தியா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் போட்டி எழுந்துள்ளது.
அவ்வாறு செல்வாக்கு மிக்க நாடுகளின் தெரிவாகவுள்ள உலகத்தலைவர்களுடன் சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தின் பெயரும் முன்மொழியப்படுகிறது. ஆயினும் நாணய நிதியத்தின் தலைமைத்துவப் போட்டியை அடையும் நோக்கம் தனக்கு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக