அவசரகால சட்டத்தினை உடனடியாக இரத்து செய்வது தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது. ஐ,நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தம் அவசியம் என்பதனை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோருடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்தே இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உண்மையான அபிவிருத்தி, மீள்கட்டுமானப் பணிகள், மீதமுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை விளங்கிக் கொள்வதற்கான சக்தி மற்றும் புரிந்துணர்வு என்பன ஆயுத போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்தைகளின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் துரிதமாக நிறைவேற்றப்படுமென கூட்டறிக்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். உரிய நிபந்தனைகள் அடிப்டையில் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக பகிர்ந்தளிப்பு திட்டங்கள் முன்வைக்கப்படும் என இலங்னை இந்திய கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக