புதன், 18 மே, 2011

மதுரையில் மு.க.அழகிரி திருமண மண்டபம்-ஆதரவாளர் வீடு மீது தாக்குதல்

மதுரை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. அதே போல அவரது தீவிர ஆதரவாளரான பொட்டு சுரேஷ் வீடும் தாக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவில் இந்த மண்டபத்தை சூழ்ந்த சிலர் கல்வீசித் தாக்க ஆரம்பித்தனர். அவர்களை காவலாளிகள் துரத்தியபோது, தாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இனிமேல் உங்களை சும்மா விடமாட்டோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல்:

இந் நிலையில் அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீதும் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ்.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுவதாகத் தெரிகிறது.

நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary
Following the power shift in Fort St George, DMK central minister Azhagiri's marriage hall in Madurai was attacked by unknow assilants yesterday night

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக