புதன், 18 மே, 2011

திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது

கரூர்: அரசிடமிருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று அதை தனியார் நிறுவனங்களுக்கு விற்று பல கோடி மோசடி செய்த திருச்சி, கரூர் மாவட்ட விவசாயத்துறை அதிகாரிகள், காகிதபுரம் காகித தொழிற்சாலை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கரூர் மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் காகித ஆலையை மையமாக வைத்து நடந்த இந்த ஊழல் குறித்து புகார் எழுந்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் பாக்கியநாதன், வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்தார். அதில்,

திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடியால் அரசுக்கு ரூ.1.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி்யிருந்தார்.

இது குறித்து வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப் படை அமைத்து தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் செல்லமுத்து (48),திருச்சி டான்பெட் துணை மேலாளர் பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்த மீனாட்சிசுந்தரம் (53), கரூர் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56) ஆகியோர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

திமுக ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களைத் தோண்டியெடுக்கும் வேலைகளில் முதல் பணியாக இந்தக் கைதுகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

டோல்கேட் கட்டண முறைகேடு-ராமேஸ்வரம் திமுக பிரமுகர் சரண்:

இந் நிலையில் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள டோல்கேட்டில் போலி ரசீது மூலம் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்ததாக புகார் வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீசார் நகரசபை ஊழியர் பூமிநாதன் (30), தினக்கூலி ஊழியர் முனியசாமி (40) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக ராமேசுவரம் நகரசபை தலைவர் ஜலீல் (தி.மு.க.), அவரது உறவினர் பகுருதீன் ஆகியோரை தேடி வந்தனர். இத்தனை நாட்களாக போலீசாருக்கு தண்ண் காட்டி வந்த அவர்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராயினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி குமரேசன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
English summary
Sleuths from the Economic Offences Wing (of the police on arrested five high ranking officials in connection with the Rs. 1.34 crore fertilizer scam that rocked the Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) at Kagithapuram near here and the governmental agency TANFED two years back.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக