புதன், 18 மே, 2011

Tata to Mamata ஒத்துழைப்பு கொடுங்க!' -மம்தாவுக்கு டாடா எழுதிய கடிதம்

கொல்கத்தா: அரசியல், சினிமா, வர்த்தகம் ஆகிய துறைகளில் எப்போதும் நிரந்த பகைவனோ நண்பனோ கிடையாது என்பார்கள்.

இதற்கு இன்னொரு உதாரணம் டாடா - மம்தா மோதல்.

மேற்கு வங்கத்தில் தங்களது முதலீடுகள் தடங்களின்றி மேற்கொள்ளப்பட மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்கவுள்ள மம்தா பானர்ஜி ஒத்துழைப்பு தரவேண்டும் என டாடா குழுமம் சார்பில் அவருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனை மம்தாவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது புதிய ஆட்சியாளர்களுக்கு வழக்கமாக எழுதப்படும் கடிதம்தான் என்று டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தின் நானோ தொழிற்சாலை சிங்கூரில் அமைந்தபோது, விவசாயிகளைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தி, அந்த தொழிற்சாலை அமையவிடாமல் செய்தவர் மம்தா பானர்ஜி.

இதைத் தொடர்ந்து டாடா குழும முதலீடுகள் மேற்கு வங்கத்தில் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் டாடா மெடிகல் சென்டரை கொல்கத்தாவில் அறிமுகம் செய்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, இந்த கடித விவகாரத்தை உறுதிப்படுத்தினார். ரூ 350 கோடியில் அமைந்துள்ள இந்த சென்டர், வரும் செப்டம்பரில் பிரதமர் மன்மோகன் சிங்கால் முறைப்படி துவக்கி வைக்கப்படுகிறது.

முன்பு டாடாவை வெளியேற்றியதால், முதலீட்டாளர்கள் மேற்கு வங்கத்துக்கு வர அச்சப்படும் நிலை உருவானது. அதுலும் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியமைவதால் இனி, அனைத்து திட்டங்களுக்கும் சிங்கூர் கதி நேருமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த அச்சத்தை போக்கும் வகையில், மம்தாவும் அதிக முதலீட்டாளர்கள் மேற்கு வங்கத்துக்கு வரவேண்டும், தாராள சலுகைகள் கிடைக்கும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில் டாடாவும் மம்தாவுடன் இணைங்கிப் போக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

ஆக நானோ தொழிற்சாலை வரவிருந்த அதே சிங்கூரில் டாடா குழுமத்தின் புதிய தொழிற்சாலை அமையப் போவது உறுதி என்கிறார்கள் தொழில்துறையினர்.

அப்படியெனில் சிங்கூரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், மம்தாவின் உண்ணாவிரதம், நானோ திட்டம் குஜராத்துக்கு விரட்டப்பட்டதெல்லாம்... அர்த்தமற்ற அரசியல்தானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக