திங்கள், 9 மே, 2011

ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?

vaiko-20தி.மு.க.,வால், "கொலைப்பழி' சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ, "லட்சியத்தில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை; அரசியலில் நேர்மை' என்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து, 1994ல் துவங்கிய இயக்கம், ம.தி.மு.க., அப்போதைய ஒன்பது தி.மு.க., மாவட்ட செயலர்கள் உட்பட, தமிழகத்தில் பல தி.மு.க., தொண்டர்கள் வைகோவின் பின்னால் அணி திரள, தி.மு.க.,வில் பிரளயம் ஏற்பட்டது. வைகோவின் இந்த எழுச்சியை கண்ட நடுநிலையாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஒரு மாற்று சக்தியாக வைகோ திகழ்வார் என்றே நம்பினர்.
அதற்கேற்ப, கட்சி துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில், தி.மு.க.,வை பின் தள்ளி, ம.தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்தது. தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கூட்டணியில், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 168 ஓட்டுகளும், லோக்சபா தேர்தலில், 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ஓட்டுகளும் ம.தி.மு.க., பெற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களிலும், 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களிலும், ம.தி.மு.க., வெற்றி பெற்று, தேசியளவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 13 லட்சத்து, 4 ஆயிரத்து, 469 ஓட்டுகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் நின்றது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, நான்கு தொகுதிகளில் ஜெயித்தது.
கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே ம.தி.மு.க., ஜெயித்தது. இதில், திருமங்கலம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., மரணமடைந்தார். கம்பம், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு தாவினர். தனி பெரும் சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்த்த ம.தி.மு.க.,விற்கு, இந்த சம்பவம் ஒரு சரிவை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை வெற்றியும் பெற்றன. கட்சியை பலமாக வைத்திருந்தால் தான் பொறுப்புக்கு வர முடியும்; அதன் மூலம் மட்டுமே சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., தலைமையிடம் விசுவாசம் காட்ட துவங்கினார் வைகோ. இதனால், ம.தி.மு.க., தனித்தன்மை இழந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
தி.மு.க., ஆட்சியை அகற்றுவதில், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று வைகோ கூறிக் கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க., அவரை ஓரம் கட்ட துவங்கியது. தொகுதி ஒதுக்கீட்டில், அ.தி.மு.க., இழைத்த அவமானத்தை பொறுக்க முடியாமல், கூட்டணியை விட்டு விலகியதோடு, தேர்தலையும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இதனால், சட்டசபை தேர்தல் களத்தில் விளையாட வேண்டிய ம.தி.மு.க., "கேலரி'யில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியது."விழ விழ எழுவோம்' என்பதற்கேற்ப, தன் அஸ்திவாரத்தை மீண்டும் பலமாக்கும் வகையில், ம.தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்களின் நன்மதிப்பு எப்போதும் எங்களுக்கு உண்டு. அதை ஓட்டு வங்கியாக மாற்றும் வகையில் எங்களது செயல்பாடு இனி அமையும். தேர்தல் முடிவுக்கு பின், யார் ஆளுங்கட்சியாக வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து, மக்களுக்கு பணியாற்றப் போவது நாங்கள் தான்.ம.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டுவர காரணமாய் இருந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னையில் நாங்கள் காட்டிய உண்மையான உணர்வு ஓட்டு வங்கியாக தற்போது மாறியுள்ளது.அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள்தோறும், ம.தி.மு.க., கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு, வைகோவின் தலைமையில் புத்துயிர் கொடுக்கப்படும். கல்லூரிகள் தோறும் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களின் ஆதரவை திரட்டவுள்ளோம். எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள், முதல் முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஆதரவை நாங்கள் எளிதாக பெறுவோம்.இதுவரை ம.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, கட்சியை பயன்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். எஞ்சியிருக்கும் நிர்வாகிகள், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத உண்மையான தொண்டர்கள். இவர்கள் ம.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தினமலர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக