திங்கள், 9 மே, 2011

இந்தியாவில் தாக்குதல்களை நிறைவேற்றியது ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம்

வாஷிங்டன், மே 8: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நிறைவேற்றியது பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு உளவு அமைப்புமான ஐ.எஸ்.ஐ.யும்தான் என்பது விக்கி லீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.குவாந்தநாமோ சிறைக் கைதிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவற்றில் 779 விசாரணை அறிக்கைகளை விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது."இந்தியாவில் தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை பாகிஸ்தான் ராணுவம் தேர்வு செய்துள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிலரைக் கடத்திச் சென்றது, சிலரைக் கொன்றது போன்றவற்றை நிகழ்த்த ஐ.எஸ்.ஐ. ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது' என்று அமெரிக்க அதிகாரிகளிடம் கைதி ஒருவர் கூறியதாக ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடைபெறுவது அமெரிக்காவுக்கு நீண்ட காலமாகவே தெரியும் என கைதிகள் பலர் கூறியுள்ளனர்.இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பலர் பாகிஸ்தானில் எவ்வாறு பயிற்சி பெற்றனர் என்பதும் விரிவாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபியா, அல்ஜீரியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது, இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது குறித்து குறிப்பிட்டுள்ளனர்.இந்தியாவில் இந்தியர்களைக் கொல்வதே லட்சியம் என லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த அல்ஜீரியா நாட்டவரான அப்துல் அஸீயா கூறியுள்ளார்.பாகிஸ்தானிய கைதியான முகமது அன்வர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதுக்குச் சென்று அங்கு 1998-ல் 21 நாள்கள் பயிற்சி பெற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளார்.முகமது அன்வர் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ஆப்கனைச் சேர்ந்தவரும், ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையவருமான சமன் குல் என்பவர், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் மஸ்த் குல் என்பவரைப் பற்றிய தகவல்களைக் கூறியுள்ளார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாதில் இருந்துகொண்டே காஷ்மீரில் நடக்கும் எல்லா கொரில்லா நடவடிக்கைகளையும் மஸ்த் குல்தான் ஒருங்கிணைத்தார் என சமன் குல் குறிப்பிட்டுள்ளார்.மேற்கத்திய நாடுகளில் இந்தியர்களை அதிகம் சோதனைக்கு உள்ளாக்குவதில்லை. எனவே, பயங்கரவாதச் செயல்களில் இந்தியர்கள் அதிகம் பேரை ஈடுபடுத்த வேண்டும் என அல் காய்தா தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்று மற்றோர் அறிக்கை குறிப்பிடுகிறது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்கு வெகு அருகிலேயே வசித்து வந்த பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்போது வெளியாகியுள்ள விக்கி லீக்ஸ் தகவல்கள் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக