புதன், 20 ஏப்ரல், 2011

கோத்தபாய ராஜபக்ஸ: ஐ.நா சில நாடுகளால் பலவந்தமாக கடத்தப் பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.

ஐநா எங்களைப் பாதுகாக்காவிட்டால் பிறகு நாங்கள் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளிடமிருந்து பாதுகாப்பு தேடவேண்டியிருக்கும்”
– கோத்தபாய ராஜபக்ஸ
gothapaya-2ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் அதன் ஆயுதப் படைகள் 2009ல் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக நடத்திய போரின் இறுதிக் கட்டத்தின்போது நடந்து கொண்ட நடத்தை சம்பந்தமாக ஐநா நிபுணர் குழுவினரது அறிக்கைக்கு சாட்டையடி வழங்கும் விதமாக பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ நேற்று கருத்து வெளியிடும்போது இந்த அறிக்கையின் பின்னால் ஒரு நிகழ்ச்சித் திட்டமே இருக்கிறது மேலும் ஐக்கிய நாடுகள் சபை அதன் அங்கத்தவர்களில் ஒருவராகிய எங்களைப் பாதுகாக்காவிட்டால், ஸ்ரீலங்கா ரஷ்யா மற்றும் சீனாவிடம் பாதுகாப்பு தேடவேண்டிய பலவந்தமான நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா சில நாடுகளால் பலவந்தமாக கடத்தப் பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. மற்றும் ஸ்ரீலங்கா ஐநாவின் ஒரு அங்கத்துவ நாடாக உள்ளபோது ஐநா அதற்குப் பாதுகாப்பு வழங்கவேண்டியது அவசியம்.” இது மற்ற நாடுகள் எங்களைப் பாதுகாக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடும். ஐநா சில நாடுகளிடம் தன்னை அடகு வைத்துவிடக் கூடாது” என்றும் சொன்னார்.
நிபுணர் குழு எல்.ரீ.ரீ.ஈயினருக்கு வெள்ளையடித்துள்ளதுடன், எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதையும் அது ஒரு சமயத்தில் நாட்டின் மூன்றிலொரு பகுதியினைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது என்பதனையும் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.
“எல்.ரீ.ரீ.ஈயினர் வான்படை, மற்றும் கடற்படை என்பனவற்றையும் அதற்கும் மேலாகத் தரைவழிப் போராட்டம் நடத்தும் போராளிப் பிரிவினரையும் கொண்டிருந்தது. அது தற்கொலைக் குண்டுதாரிகளைத் தென்பகுதிக்கு அனுப்பி பொதுமக்கள் பயணிக்கும் பேரூந்துகளையும் மற்றும் கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்ததோடு, அரசியல்வாதிகளுக்கும் குறி வைத்திருந்தது. அது இராணுவ முகாம்கள் மீது படர்ந்து பரவி ஒரே இரவில் ஆயிரக்காணவர்களை கொன்று குவித்துள்ளது. காவல் துறையினரால் கட்டுப் படுத்தக் கூடிய ஒரு இயக்கமாக அது இருக்கவில்லை. இத்தகைய கொடூரமான ஒரு எதிரியை எங்களால் எதிர்த்துப் போராட முடியாது என ஐநா, அமெரிக்கா, நோர்வே மற்றும் பலர் எங்களிடம் தெரிவித்தனர். நாம் எங்களுடைய ஆயுதப் படைகளை அனுப்பி அதியுயர் சுடும் - சக்திகளைப் பயன்படுத்தி அவர்களை முறியடித்தோம்”.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையுடனான ஒரு நேர்காணலில் பாதுகாப்புச் செயலர் ராஜபக்ஸ  மேலும் கூறுகையில் ஐநா அறிக்கையானது, ஐநாவின் முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம் (டபிள்யு.எப்.பி) அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ஐ.சி.ஆர்.சி) போன்றவற்றின் அறிக்கைகளைப் புறக்கணித்து விட்டது போலத் தோன்றுகிறது.
“அவர்கள் உலக உணவுத் திட்டம் அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பனவற்றிடம் கேட்டிருந்தால் இறுதிக் கட்டப் போரில் அடைபட்டுக் கிடந்த பொதுமக்களுக்கு உணவு உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எப்படி வழங்கப்பட்டன என்பதை அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கக் கூடும். எல்.ரீ.ரீ.ஈதான் இந்தப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்திருந்தது. இறுதி நாட்களில் எல்.ரீ.ரீ.ஈ இந்தப் பொதுமக்களை ஒரு வாவிப் பகுதிக்குள் பலவந்தமாக அனுப்பி வைத்திருந்தது. அப்போது உணவுத் தொடர்கள் அவர்களைச் சென்றடைய முடியவில்லை, ஏனெனில் தண்ணீர் அவர்களைச் சூழ்ந்திருந்தது,  அப்போதுகூட நாங்கள் கடல் வழியாக உணவை எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு வழங்கவதற்கு எல்.ரீ.ரீ.ஈயினரை அனுமதித்திருந்தோம்.” அரசாங்க உயர்மட்ட அங்கங்களையும் பல வெளிநாட்டுத் தூதுவர்களையும் உள்ளடக்கிய ஒரு மனிதாபிமான உதவிகளைப்பற்றி கலந்தாய்வு செய்யும் குழுவொன்றையும் அமைத்திருந்தோம். அத்தோடு ஐநா முகவர்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் போரின் உச்சக் சட்டத்தின்போது மனிதாபிமான உதவிகளைக் கண்காணித்ததாக அவர் கூறினார்.
“ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியுடன் கூடிய ஒரு சட்ட அமைப்பு எங்களிடம் உள்ளது. தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாமல் உள்ள நிலையில்;, எல்.ரீ.ரீ.ஈயினரால் தங்களுக்காகப் போராடுவதற்காக அவர்கள் கடத்தப்படக் கூடியதாக உள்ள சந்தர்ப்பத்தில், மேலும் எல்.ரீ.ரீ.ஈயினரின் குண்டுத் தாக்குதல்களுக்குப் பயந்து பெற்றோர் இருவருமே ஓரே பேரூந்தில் பயணிக்க முடியாத நிலை உள்ளபோது, அல்லது மசூதிகளில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளபோது கொல்லப் படும்போது மற்றும் மாணவப் பிக்குகள் கொல்லப்படும் போது, தன்னை தெரிவு செய்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரசாங்கத்தின் கடமையாக இருப்பது, அவர்களைப் பாதுகாப்பதற்காக பயங்கரவாதம் என்கிற பெரும் நோயை இல்லாது ஒழிப்பதே.
ஐநா அறிக்கையில் எழுப்பப் பட்டிருக்கும் சில தனித்துவமான விடயங்களுக்குப் பாதுகாப்புச் செயலர் ராஜபக்ஸ பதிலளிக்கையில் அதில் எழுப்பப் படடிருக்கும் ஒரு விடயம் காணாமற்போன அல்லது மறைந்து விட்ட ஆட்களைப் பற்றியது. அவர் குறிப்பிட்டுக் காட்டியது கடந்த நாலு வருடப் போராட்டத்தின்போது 6,000 போர் வீரர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் மற்றும் காயமடைந்துள்ள 20,000 பேர்களில் சுமார் 10,000 பேர் வரையில் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
எல்.ரீ.ரீ.ஈயினரின் இழப்புகள் இதைவிட அதிகமாக இருக்கலாம் ஏனெனில் இராணுவத்தினரிடம் அதி உயர் சுடுகலன் சக்தி இருந்தது என்று அவர் சொன்னார்.” யாராவது காணாமற் போனார்கள் என்று ஆட்கள் முறைப்பாடு தெரிவிக்கும்போது, அது நன்றாகத் தெளிவு படுத்துவது அவர் எல்.ரீ.ரீ.ஈக்காகப் போராடும்போது கொல்லப் பட்டிருக்கலாம் என்பதை. ஆனால் அவர்கள் அதைத் தெரிவிக்க மாட்டார்கள். அவரைக் காணவில்லை என்று மட்டுமே தெரிவிப்பார்கள்.” போரின்போது கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ போராளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30.000 ஆக இருக்கலாம் என அவர் மதிப்பிட்டார்.
இறுதிக்கட்டப் போரின் போது இராணுவம் வைத்தியசாலைகள் மீது துப்பாக்கிச் சூடுகளை நடத்தியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு பகுதியினைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்  தாக்குதல்கள் நடத்தப் படுவதற்கு முன்னரே வைத்தியசாலைகள் யாவும் காலி செய்யப் பட்டன என்பதற்குத் தன்னிடம் எழுத்து மூலமான ஆதாரங்கள் இருப்பதாக பாதுகாப்புச் செயலர் கூறினார். எல்.ரீ.ரீ.ஈயினர் கனரகத் துப்பாக்கிகளை வைத்தியசாலைகளுக்கு மிக அருகாக நகர்த்தி அங்கிருந்து எங்களை நோக்கி சூட்டுத் தாக்கதல்களை மேற்கொண்டார்கள். நோயாளிகளும் வைத்தியர்களும் வெளியேறிய பின்னரே நாங்கள் எதிர்த் தாக்குதல்களை மேற்கொண்டோம். நாங்கள் துண்டுப் பிரசுரங்களைப் போட்டும், ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகளைச் செய்தும், சூட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளாத வலயங்களைப் பிரகடனப் படுத்தியும், கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை மட்டுப் படுத்தியும் தாக்குதல் நடத்தினோம். அந்த அறிக்கை எல்.ரீ.ரீ.ஈயினர் உபயோகித்த கனரக ஆயுதங்களின் அளவினையும் கணக்கிட்டிருக்க வேண்டும்.”
இந்த அறிக்கையானது ஒரு நியாயமற்ற ஆராய்ச்சி என விளக்கமளித்த பாதுகாப்புச் செயலர், இதைப் பற்றிய பூரண விடயங்களிலும் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் நன்றாக இணைந்து கடமையாற்றியிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டார். மேலும் அவர் சில மேற்கத்தைய சக்திகள் இந்த அறிக்கைக்கு பின்னணிவாத்தியம் இசைத்ததாக ஒரு விவாதம் உருவாகியிருந்தது, அதனால்தான் ஸ்ரீலங்கா தனது சட்டபூர்வத் தன்மைக்கும் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கம் எதிராக சவால் விடவேண்டி ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.
“ஐநா வழங்கியதில் மறைமுக நிகழ்ச்சித் திட்டம் எதுவும் இல்லையெனில் நாங்கள் இப்போது ஐநாவுடன் தொடர்பு கொள்வோம்” என அவர் குறிப்பிட்டார். “பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்ததன் விளைவாக மக்கள் அடைந்துள்ள நலன்களை ஐநா நிச்சயம் காணவேண்டும். கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக எல்.ரீ.ரீ.ஈயினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த மக்களினது மனங்களை மாற்றியெடுத்து மாற்றங்களைக் கொண்டுவர சிறிது காலம் செல்லலாம்,ஆனால் ஒரு சமயம் போரினால் நாசமடைந்த வடக்கு மற்றும் கிழக்கில் வழமைநிலை மெதுவாகத் திரும்பிக் கொண்டிருக்கிறது, மேலும் சமாதானம் மீண்டும் திரும்பும் காலம் வரும்போது மக்கள் அதன் பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்” என அவர் மேலும் சொன்னார்.
(நன்றி: Sundaytimes
தமிழில்: எஸ்.குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக