செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தமிழக சட்டசபை தேர்தல் நாள் ஜாதகம்

தேர்தல் என்று வந்துவிட்டால் கணிப்பு, வாக்காளர் மனநிலை, சர்வே என அடுத்தடுத்த விஷயங்களும் சகஜம். சமீபகாலமாக இந்த பட்டியலில் ஜோதிடமும் சேர்ந்துள்ளது. சில கட்சிகளில் வேட்பாளரின் தகுதி பெற இணைக்க வேண்டிய பட்டியலில் ஜாதகமும் கூட இடம்பிடித்துள்ளது.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஜாதகம் பார்ப்பதற்கு பதிலாக, தேர்தல் நடந்த நாள், நேரத்தை வைத்து, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று கணிக்கப்பட்ட செய்தித்துணுக்கு தற்போது, "இன்டர்நெட்'டில் படு பிரபலமாகியுள்ளது. அந்த சுவையான கணிப்பு இது:தமிழக சட்டசபை தேர்தல் புதன்கிழமை 13.4.2011 காலை 8 மணிக்கு சந்திரன் ஓரை, எமகண்டத்தில் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. புதன்கிழமை புதன் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. புதன் நேரடியாக வலுவடையாமல் மறைமுகமாக நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால், தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும். வெற்றி தோல்விக்குரிய ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும்.அதற்கு அடுத்த நாள் 14.4.2011 அன்று பிறக்கும் கர வருடம், மிதுன லக்னத்தில் பிறப்பதாலும், கர வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதாலும், ஓட்டுப்பதிவு தொடங்கும் லக்னம், சுக்கிரனின் லக்னமான ரிஷப லக்னமாக வருவதாலும், லக்னாதிபதி சுக்கிரன் 10ம் இடத்தில் அமர்ந்து, கேந்திராதிபத்ய தோஷம் அடைவதாலும், தமிழக சட்டசபை கடைசி கூட்டம், கடந்த 10.2.2011 அன்று பரணி நட்சத்திரத்தில் நடைபெற்றதாலும், தேர்தல் நாளன்று சந்திரன் ஆட்சிப் பெற்று அமர்வதாலும், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

ஆனால், தி.மு.க., கட்சியின் ஜாதகமும், தி.மு.க., தலைவரின் ராசிக்கு தற்கால கோச்சார கிரகமும், தேர்தல் நாளன்று வலுவாக உள்ளது. எனவே, ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றும். ஓட்டுப்பதிவு அன்று, லக்னம் சுக்கிரனாக வருவதாலும், சுக்கிரனே 6ம் வீட்டிற்கு அதிபதியாக வருவதாலும், கூட்டணி தர்மத்தையும் தாண்டி, உள்பகையால் தோற்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி மாறும். தனிப்பெரும் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினம்.சனி பகவான், குரு, சூரியன், செவ்வாய், புதன், கேது ஆகிய ஐந்து கிரகங்களும் ஐந்து கிரகங்களையும் பார்ப்பதாலும், 7ம் வீட்டையும் சனி பார்ப்பதாலும், கூட்டணி ஆட்சி அமையும். தேசிய கட்சிகள் (காங்கிரஸ் - பா.ஜ.,) மற்றும் ஜாதிக் கட்சிகள் வலுவிழக்கும். தேர்தல் நாளும், ஓட்டு எண்ணிக்கை நாளும் புதனின் ஆதிக்கத்தில் வருவதால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். தபால் ஓட்டுகள் அ.தி.மு.க.,விற்கு சாதகமாகும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, தற்சமயம் புதன் திசை நடைபெறுவதாலும், புதனின் ஆதிக்கத்தில் தேர்தல் நாளும், எண்ணப்படும் நாளும் வருவதாலும், அவரின் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அவர் மூலமாக அ.தி.மு.க., கூட்டணி வலுவடையும். புதிய வாக்காளர்களுக்கு உரிய கிரகமாக புதன் வருவதாலும், புதன் அ.தி.மு.க., தலைமைக்கு சாதகமாக இருப்பதால், புதிய ஓட்டுகள் அ.தி.மு.க., கூட்டணிக்கு 80 சதவீதம் வரை கிடைக்கும்.

கன்னி ராசிக்காரரான வைகோ, புதனின் ராசியில் பிறந்தவர். அவர் அ.தி.மு.க., கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க., கூட்டணிக்கு, புதனின், பாசிடிவ், கதிர்வீச்சு குறைகிறது. இதனால், அ.தி.மு.க., அதிக இடங்களை பெற முடியாது. ஆனால், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்த தி.மு.க., தலைவருக்கு, பூர்வபுண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் தற்சமயம் சனி அமர்ந்திருப்பதால், அவர் தனது பூர்வீக தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவதால், அவருக்கும், அவரது மைந்தனுக்கும் வெற்றி திணறி வரும். இது அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக