செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மதில் மேல் பூனை: முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பம்

ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 24 மணி நேரமே இருக்கும் நிலையில், எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என முடிவெடுக்க முடியாமல் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் முடிவைக் கணிக்க முடியாமல், கட்சித் தொண்டர்கள் கவலையில் இருக்கின்றனர்.

அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியோடு முடிவுக்கு வந்துவிட்டது. இரு பெரும் திராவிட கட்சிகளும், தங்கள் கொள்கை முழக்கத்தை, முடித்துவிட்டனர். பெரிய கட்சிகளுக்கு இணையாக, பா.ஜ., ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகளும் இழுத்துப் பிடித்தன.பத்திரிகை விளம்பரங்களை அதிகளவில் கொடுத்து, கழகங்களையே வியப்பில் ஆழ்த்தியது ஐ.ஜே.கே., லோக்சபா தேர்தலை விட அதிகளவில் அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து, பிரசாரத்தின் தரத்தையே உயர்த்திக் காட்டியது பா.ஜ.,எல்லாவற்றையும் பார்த்த அப்பாவி வாக்காளர்கள், அமைதியே உருவமாக இருக்கின்றனர். எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பது என்பது தான் அவர்களின் அமைதிக்கான காரணம். வலுவான ஜாதி பின்னணியோடு, சொந்த ஊரில் செல்வாக்கு கொண்டவர்களை களத்தில் நிறுத்தி, பெருமளவு ஓட்டைப் பிளக்கிறது ஐ.ஜே.கே. "நாம் ஒன்று சேர்ந்தால் தான் சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்' என்ற, அவர்களது பேச்சை ஏற்பதா என்பது முதல் குழப்பம்.

அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா, குஜராத், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நல்லாட்சி வழங்கி, தன்னை நிரூபித்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழகத்திலும் அவர்களது பிரசாரம் முனைப்போடு இருந்தது. இந்த முறை இவர்களை நம்பி, மாற்றத்தைக் கொண்டுவரலாமா என்பது இரண்டாவது குழப்பம்.ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க., வால் பலன் பெறாத குடும்பம், ஒட்டுமொத்த தமிழகத்திலேயே இல்லை எனச் சொல்லுமளவு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதேனும் ஒரு வகையில், ஏதேனும் ஒரு இலவசப் பொருளோ, நிலமோ, அரசு வேலையோ, குறைந்தபட்சம் வெள்ள நிவாரணமோ கிடைத்துள்ளது. எப்படி வந்தது இந்தப் பணம் என்ற கேள்வியைப் புறந்தள்ளிவிட்டு, கொடுத்தார்களா, இல்லையா என்ற கேள்வி, வாக்காளர்கள் மனதில் இருக்கிறது.

ஊடகங்களின் வலுவான பிரசாரம் மற்றும் கடந்தகால அனுபவம் காரணமாக, "அந்தம்மா மட்டும் செய்ய மாட்டாங்களா, என்ன?' என்ற எதிர்வாதம் சாமானியர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அச்சம் வேறு. எனவே, ஏன் மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பளித்துவிடக் கூடாது, என்பது மூன்றாவது குழப்பம்.ஆட்சி எப்படி இருந்தாலும், குடும்ப ஆதிக்கம் இதுவரை இல்லாத உயரத்தைத் தொட்டுவிட்டது. எந்தத் துறையை எடுத்தாலும், அவர்களின் பங்களிப்போடு நின்றுவிடாமல், போட்டியாளர்கள் துரத்தப்படுவதும் கண்கூடாக நடக்கிறது. போதாத குறைக்கு, வரலாறு காணாத மின் வெட்டு, விலைவாசி... அவற்றைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் இல்லாதது ஆகியவை ஆட்சிக்கு எதிரான சிந்தனையை வாக்காளர்கள் மனதில் விதைக்கின்றன. இதுவரை எந்தப் புகாருக்கும் ஆளாகாத விஜயகாந்தின் தே.மு.தி.க.,வும் கூட்டணியில் இணைந்திருப்பதால், ஏன் இந்த முறை ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலக் கூடாது என்பது நான்காவது குழப்பம்.

வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ள இத்தனை குழப்பங்களின் விளைவு தான், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என, தொடர்ந்து வந்த மூன்று கருத்துக் கணிப்புகளின் முடிவாக வந்திருக்கிறது. இதையெல்லாம் காணும் கட்சித் தொண்டர்கள், கவலையில் ஆழ்ந்துள்ளனர். காசு வாங்கிக்கொண்டும் நமக்கு ஓட்டு போடாமல் போய்விடுவரோ என்ற கவலை ஒருபுறம். யார் ஆண்டால் நமக்கென்ன என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்களே என்ற கவலை மறுபுறம்.இரண்டுக்கும் இடையில் தெளிவான தீர்மானம் செய்ய முடியாத நிலையில், கட்சித் தொண்டர்கள் இருக்கின்றனர். தங்களுக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என ஆளுக்கொருவரைப் பிடித்து, "எந்தக் கட்சி ஜெயிக்கும்; எவ்வளவு சீட் கிடைக்கும்' என விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைதியான, அதேசமயம் நிதானமான முடிவெடுப்பதில் தேர்ந்தவர்கள் நம் மக்கள். ராஜிவ் கொலை என்ற ஆழிப்பேரலை வீசியபோதே, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தாமரைக்கனியை வெற்றி பெற வைத்தவர்கள் மக்கள். 1996ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியை அப்படியே கவிழ்த்துப் போட்டனர். முதல்வர் ஜெயலலிதாவே தோல்வியடைய நேர்ந்தது. அடுத்த தேர்தலில், சொற்ப இடங்களிலேயே தி.மு.க., வெற்றி பெற்றது. இந்த முறையும் மக்கள் நல்ல முடிவெடுக்கலாம். என்ன முடிவெடுத்துள்ளனர் என்பதை அறிய, இன்னமும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக