செவ்வாய், 12 ஏப்ரல், 2011

MDMK to ADMK.அதிமுகவுக்கு இழப்பு ஏற்படும் வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்-மதிமுக

நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை. அவரது இந்த துரோகத்தை சாய்க்கும் வகையில் தேர்தலின்போது மதிமுக தொண்டர்கள் முடிவெடுப்பார்கள் என்று மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


நாகப்பட்டிணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக கூட்டணியில் இணைந்திருந்த எங்களை எந்த காரணமும் இல்லாமல் கழட்டிவிட்ட காரணத்தை இதுவரை ஜெயலலிதா கூறவில்லை. அதிமுகவின் துரோகத்தை மறக்காத மதிமுக தொண்டர்கள் தேர்தலில் தக்க முடிவு எடுப்பார்கள்.

எங்கள் மனச்சாட்சிப்படி நாங்கள் வாக்களிப்போம். ஆனால் எங்களை இழந்தவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்படுகிற வகையில் எங்களது தீர்ப்பு இருக்கும்.

எதை வேண்டுமானாலும் நாங்கள் மன்னிப்போம். துரோகத்தை மன்னிக்க மாட்டோம். துரோகத்தை சாய்ப்பதற்கு எங்கள் தோழர்கள் முடிவு எடுப்பார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டரீதியாக போராடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஆலையின் அதிபர் வைகோவை சந்தித்து சரிகட்டிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் அவரை சந்திக்க வைகோ முன்வரவில்லை.

வைகோவின் குரலும், வைகோவின் சகாக்களின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதால், அந்த ஆலை அதிபரின் பணம் சிலருக்கு போயுள்ளது என்றார் சம்பத்.

பாமகவுக்கு ஆதரவாக மதிமுக பிரசாரம்:

இந் நிலையில் தமிழகத்தில் பல இடங்களிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து மதிமுக நகரச் செயலர் வளையாபதி கூறுகையில், நான் தனியாக முடிவெடுத்து பாமகவை ஆதரிக்கவில்லை. எங்கள் மேலிடத்தில் இருந்து பாமகவை ஆதரிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி நாங்கள் பாமகவுக்கு வாக்குச் சேகரித்தோம். கிராமப்புற பகுதிகளில் உள்ள எங்கள் கட்சித் தொண்டர்களும் பாமகவுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார்.

இதே போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
English summary
MDMK cadres will teach lession to ADMK chief Jayalalitha for expelling MDMK leader Vaiko from alliance without reason, said Vaiko's man friday Nanjil Sampath in Nagapattinam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக