திங்கள், 25 ஏப்ரல், 2011

சென்னையின் தாகம் தீர்த்த சத்யசாய் பாபா

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கவும், ஆந்திராவின் வறட்சி மாவட்டங்களில் விவசாயத்தை பெருக்கும் வகையில் தெலுங்கு கங்கை திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, கிருஷ்ணா நதி நீரை கால்வாய் மூலம் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்ல ஆந்திர அரசு முடிவு செய்தது.கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டின் ஒரு பகுதியில் உள்ள போத்திரெட்டுபாடு என்ற இடமும், கடப்பா அருகில் உள்ள சோமசீலா அணையும் பிரமாண்ட கால்வாய் மூலம் இணைக்கப் பட்டன. ஆந்திர மாநிலத்துடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., என்ற அளவில் கிருஷ்ணா நீர் பெற முடிவானது.இதற்காக, சோமசீலா அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு வரும் கிருஷ்ணா நீரை, அங்கிருந்து 164 கி.மீ., தூரத்தில் உள்ள ஊத்துக் கோட்டையில் உள்ள "ஜீரோ பாயின்ட்' வரை கால்வாய் அமைத்து கொண்டு வந்து, பின், 17 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

கண்டலேறு அணையில் இருந்து ஊத்துக் கோட்டை வரை அமைக்கப்பட்ட கால்வாயின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப் பட்ட கிருஷ்ணா நீரில் பல லட்சம் லிட்டர் வீணானது.கிருஷ்ணா நீர் வரும் கால்வாய் பராமரிக்கப் பட்டால் மட்டுமே சென்னைக்கு சீரான குடிநீர் பெற முடியும் என்ற நிலையில், பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உதவியால், ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை மூலம் கால்வாய் சீரமைப்பு பணி துவக்கப்பட்டது. கண்டலேறு முதல் ஊத்துக்கோட்டை வரையிலான கால்வாயை 200 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன.மண் அரிப்பு காரணமாக நீர் ஒழுக்கு ஏற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் கான்கிரீட் பக்கவாட்டு சுவர்களும், அடித்தளமும் அமைக்கப்பட்டது. பாறைகள் உள்ள பகுதிகள் மட்டும் விடப்பட்டன.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பிரமாண்டமான இப்பணியை, இரண்டு ஆண்டுகளில் ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை செய்து முடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு இறுதி முதல் புதுப்பிக்கப்பட்ட சத்யசாய் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது.கால்வாய் புனரமைக்காததற்கு முன், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீர் 10 நாட்கள் பயணம் செய்து ஊத்துக்கோட்டை "ஜீரோ பாயின்ட்'டை வந்தடையும். மேலும், நீர் ஒழுக்கு காரணமாக ஆயிரம் கன அடி என்ற அளவில் திறந்துவிடப்படும் நீர், ஊத்துக் கோட்டைக்கு வரும் போது 450 முதல் 500 கன அடியாக குறைந்திருக்கும். ஆனால், சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பின், திறந்துவிடப் பட்ட ஐந்து நாட்களில் கிருஷ்ணா நீர் ஊத்துக்கோட்டை வந்துவிடுகிறது. மேலும், ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டால், 900 கன அடி நீர் வந்து சேர்கிறது.

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் இந்த பிரமாண்ட திட்டத்தால், இன்றைக்கு சென்னை நகர மக்கள் தங்கு தடையின்றி குடிநீர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணா நதி கால்வாய் புனரமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டமாக "ஜீரோ பாயின்ட்'டான ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரையிலான 17 கி.மீ., தூர கால்வாயும் 100 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர், தங்கு தடையின்றி அடுத்த சில மணி நேரங்களில் பூண்டி ஏரி வந்தடைகிறது. ஸ்ரீசத்யசாய் கால்வாயின் பயனாக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு தரும் கிருஷ்ணா நீர் இன்றைக்கு சிந்தாமல், சிதறாமல் சென்னை வந்து சேர்கிறது.சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது.

சோலை வனமானபாலைவனம் :இருபது ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் வறட்சியால் பாதித்த மாவட்டங் களில் உள்ள தொலைதூர கிராமங்களில், முக்கிய குடிநீர் ஆதாரமாக கிணறுகளே இருந்தன. அந்தக் கிணறுகளில் கிடைத்த தண்ணீரும் சுத்தமான குடிநீராக இல்லாதது மட்டுமின்றி, அதிக அளவில் புளோரைடு கலந்ததாக இருந்தது. இதனால், எலும்புகள் தொடர்பான பல குறைபாடுகள் மக்களை பாதித்தன.ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்கள் பல, கோதாவரி நதி ஓடும் பகுதியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இருந்தும் கடும் குடிநீர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்தன. இதேபோல் தான் மேடக் மற்றும் மெகபூப் நகர் மாவட்டங்களில் உள்ள 320 கிராமங்களும் குடிநீர் பற்றாக்குறையைச் சந்தித்து வந்தன. இந்த மாவட்ட மக்களின், அதாவது ராயலசீமா பிராந்திய மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் தான் ஸ்ரீ சத்ய சாய் குடிதண்ணீர் திட்டம் துவக்கப்பட்டது.

ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை, முதல்கட்டமாக அனந்தப்பூர் மாவட்டத்தில் 731 கிராமங்கள் பயனடையும் வகையிலான குடி தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றியது. 18 மாதங்களில் ரூ.300 கோடி செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள பல நகரங்களும் இதனால் பயனடைகின்றன.அனந்தப்பூர் மாவட்ட குடி தண்ணீர் திட்டத்தை தொடர்ந்து, கோதாவரி, மேடக் மற்றும் மெகபூர் நகர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின், சென்னைக்கு குடி தண்ணீர் தரும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை, நான்கு பெரிய குடி தண்ணீர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 5,020 கி.மீ., தூரத்திற்கு பைப் லைன்களை அமைத் துள்ளது. இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள தூரமான 3,496 கி.மீட்டரை விட அதிகம்.இதுமட்டுமின்றி, பல கிராமங்களில் பெரிய அளவில் டேங்குகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றையும் அமைத்துள்ளது. 1994 முதல் 2006ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்ட இந்த குடி தண்ணீர் திட்டங்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுத்தமான குடி தண்ணீரைப் பெற்று வருகின்றனர். இது காஷ்மீர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு சமமானது.சுத்தமான குடி தண்ணீர் கிடைக்கச் செய்வது ஆடம்பரமான விஷயமல்ல, தர்மமும் அல்ல. உலக சமூகத்திற்கு செய்யும் கடமை என, நினைத்து இந்த குடி தண்ணீர் திட்டங்களை ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிறைவேற்றியுள்ளது.

சிறப்பான மருத்துவ சேவையில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவமனைகள் :ஸ்ரீசத்யசாய் பாபாவுக்கு 20 வயது இருக்கும் போது, அவரின் தாயார் ஈஸ்வரம்மா, உள்ளூர் கிராம மக்களின் நிலைமை குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். புறக்கணிக்கப்பட்ட, தொலை தூர கிராமமான புட்டபர்த்தியில் வசிக்கும் மக்கள், ஏழைகளாக இருப்பதோடு, எளிதில் நோய் வாய்ப்படுகின்றனர் என்றும் கூறினார். ""எப்போதும் மற்றவர்களுக்கு உதவு, யாரையும் ஒரு போதும் புண்படுத்தாதே' என்ற உறுதி மொழியை தொடர்ந்து பின்பற்றி வந்த ஸ்ரீ சாய்பாபா, "தன்னலமின்றி, பிறர் நலனுக்காக வாழ வேண்டும்' என்ற தனது தாயாரின் அழைப்பையும் மறுக்காமல் ஏற்றார்.கடந்த 1954ம் ஆண்டில், ஸ்ரீசத்ய சாய் பொது மருத்துவமனையை துவக்கினார். இப்படித் துவங்கிய சத்யசாய் உடல் நல பராமரிப்பு முறையானது, இன்று பொது மருத்துவமனைகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், மொபைல் மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் என, பெரிய நெட்வொர்க்காக விரிவடைந்தது. மதம், பொருளாதாரம் அல்லது சமூக பின்னணி என்ற பாகுபாடு காட்டப்படாமல் இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், பல நவீன வசதிகளும் இந்த மருத்துவமனைகளில் உள்ளன.மருத்துவ ஆலோசனை, ஸ்கேன்கள், எக்ஸ்ரேக்கள், சிகிச்சை மற்றும் மருந்துகள் என, அனைத்துமே இந்த மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. யாரும் சிகிச்சைக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை. சாய் மருத்துவமனைகளில் இறப்பு நிகழ்வது, உலக அளவில் மிகமிகக் குறைவே.ஸ்ரீ சத்ய சாய் அமைப்பு மூலம் பல பொது மருத்துவமனைகள் நடத்தப்படுவதோடு, அவ்வப்போது மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. 1990 நவம்பர் 23ம் தேதி, சத்யசாயியின் 65வது பிறந்த தினத்தன்று, நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்று புட்டபர்த்தியில் ஒரு ஆண்டிற்குள் அமைக்கப்படும் என, அறிவித்தார். அவரின் வார்த்தையை உண்மையாக்கும் வகையில், ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் மெடிக்கல் சயின்சஸ் என்ற எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 1991ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி துவக்கப்பட்டது.

இதன்பின், பத்து ஆண்டுகள் கழித்து, 2001 ஜனவரியில் பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டில், இதேபோன்ற மற்றொரு மருத்துவமனை துவக்கப்பட்டது. "உண்மையான உடல் நல பராமரிப்புக்கு அன்பும், தன்னலமற்ற சேவையும் அவசியம்' என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில், இந்த மருத்துவமனை துவக்கப்பட்டது.நவீன வசதிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுடன் கூடிய இரண்டு பொது மருத்துவமனைகள் புட்டபர்த்தி மற்றும் ஒயிட்பீல்டில் தொடர்ந்து செயல்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மருத்துவ சேவைகள் அளித்து வருகின்றன. அத்துடன் மொபைல் வேன்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் மூலமும் கிராமப்பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.சத்யசாய் உடல் நல பராமரிப்பு திட்டங்கள் மூலம் அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சேவைகளால், சாய் மருத்துவமனைகளை எல்லாம் நோய் தீர்க்கும் கோவிலாக நோயாளிகளால் பார்க்கப்படுகின்றன.

ஆந்திராவை சேர்ந்த சுனில் வர்மா என்ற மாணவர் ஒரு காலை இழக்கும் நிலையில் இருந்தார். எஸ்.எஸ்.எஸ். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப் பட்ட ஆபரேஷனால், அவர் தற்போது நன்றாக நடக்கும் நிலையில் உள்ளார். "நான் மீண்டும் நடப்பேன் என, நினைக்கவே இல்லை. ஆனால், இப்போது என் இரண்டு கால்களால் நடக்கிறேன்' என, வர்மா கூறியுள்ளார்.

வர்மாவின் தாயார் கூறுகையில், ""என் மகனுக்கு சிகிச்சை அளித்த சாய் மருத்துவமனையில் நான் ஒரு பைசா கூட செலவிடவில்லை. நம்பிக்கை இழந்த எங்களுக்கு தைரியம் கொடுத்ததோடு, என் மகனுக்கும் டாக்டர்கள் புது வாழ்வு அளித்துள்ளனர். அதற்கு சத்யசாய்பாபாவும், அவரின் சிறப்பான சேவையுமே காரணம்,'' என, தெரிவித்துள்ளார்.ஸ்ரீசத்யசாய் உடல் நல பராமரிப்பு முறையானது இன்று, பல நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக ஆதிக்கம் படைத்தவர்களால் கூட, அனைத்து மக்களுக்கும் இலவசமான மருத்துவ சேவைகளை வழங்குவது என்பது இயலாத காரியம். அதை சத்ய சாய் மருத்துவமனைகள் செய்து வருகின்றன. இந்த மருத்துவமனைகள் பல பிரிவினரைக் கொண்ட இந்த பன்முக சமுதாயத்தில், ஒரு மாதிரி மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக