திங்கள், 25 ஏப்ரல், 2011

81 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட படகு கொக்கோஸ் தீவில் வழிமறிக்கப்பட்டது!

அகதி அந்தஸ்து கோரும் 81 பேரைக்கொண்ட படகொன்று அவுஸ்திரேலிய கடல் எல்லையை நேற்று வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கொக்கோஸ் தீவை இவர்கள் அடைந்துள்ளதாக “ஸ்கை நியூஸ்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

படகு செலுத்துநர்கள் மற்றும் 81 பயணிகளைக் கொண்ட குழுவில் அதிகமானவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் விசாரணைகளின் பொருட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
சட்டவிரோத முறையில் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் வருபவர்களைத் தடுத்து வைக்கும் இடமாகக் கருதப்படும் கொக்கோஸ் தீவில் 600 க்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ளனர். கொக்கோஸ் தீவின் நிர்வாகிகளுக்கு சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினை பெரும் இடையூறுகளை தோற்றுவித்துள்ளமை தெரிந்ததே. கடந்த 48 மணித்தியாலங்களில் அந்தப் பிரதேசத்தில் இரண்டு படகுகள் காணப்பட்டன. அதில் மற்றொன்று கிறிஸ்மஸ் தீவின் வடமேற்கில் நேற்றுக் காலை வழிமறிக்கப்பட்டது.
உள்ளுர் அதிகாரிகளால் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் சமஷ்டிப் பொலிஸார் கொக்கோஸ் தீவில் அந்தப் படகை வழிமறித்ததாக உள்விவகார அமைச்சர் பிறெண்டன் ஓ கொன்னர் கூறியுள்ளார். புகலிடம் கோருவோர் கொக்கோஸ் தீவுக்கு வந்து சேர்ந்துள்ளமை இதுவே முதல் முறையாகும் என்று எதிர்தரப்பின் எல்லைப் பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீனன் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய தீவான கொக்கோஸ் தீவில் உள்ள அதிகாரிகளால் சட்டவிரோத குடியேறிகளை சமாளிக்க முடியுமா என்பது குறித்து தாம் கவலை கொண்டுள்ளோம். அதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுவோர் புது வழிமுறையொன்றினை ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக