செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சம்பந்தர் ஐயா முழுப்பூசணிக்காயை இடியப்பத்திற்குள் மறைக்க

இலங்கைத் தமிழர் போராட்ட வரலாற்றில் சில கேள்விகளை, உங்கள் மனதுக்குள்ளேயே எழுப்புங்கள். அப்போது, இந்தப் போராட்ட வீழ்ச்சியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும். இலங்கைத் தமிழினத்தை, முல்லை நிலப்பரப்பில் கொன்று குவித்த புலி தனித் தமிழீழ விடுதலை என்ற கோசத்தை நேர்மையுடன் பரப்புரை செய்தார்களா என்றால், இல்லை என்றே தெரிகிறது. மாறாக, புலம் பெயர்ந்த உலகு வாழ் தமிழர் ஊருக்காக – தலைமையின் உறவுக்காக வால் பிடித்தோர், அரசியல் என்றால் என்னவென்று புரியாதோரின் (வக்கற்ற) சண்டித்தனப் போக்குகளாலும்,  இந்தப் புலம் பெயர் மண்ணிலே வாழ்கின்ற பல்லினச் சமூகங்கள் வெறுக்கின்ற வகையில், தமது சொந்தப் பிள்ளைகளையே சமூக விரோதிகளாய் வளர்த்திருக்கின்ற நிலையை நாம் பல இடங்களிலும் பார்க்கின்றோம். சர்வதேச சதுரங்க அரசியலுக்குள் சிக்கி, சின்னஞ்சிறிய முள்ளிவாய்க்காலில் செத்துப் போச்சு புலித்தலைமை.
கருத்தைக் கருத்தாகப் பார்க்காமல், மாற்றுக் கருத்துக் கூறியோரை வதைத்தும், சுட்டும் கொன்றமை.
2. அறிவியலாளரை அழித்துத் தொலைத்து சமூகத்தின் புதிய தேடல்களை, தலைமைத்துவங்களை தோற்கடித்தமை.
3. இளையோரைச் சிந்திக்கவிடாது ஏமலாந்திகளாக்கி, அவர்களது உடலில் குண்டுகட்டிக் கொன்று தொலைத்தமை.
4. உள்முரண்பாடுகளை துவக்கு முனையில் தீர்த்துக்கட்டியமை.
5. இவர்களைவிட்டு பிரிந்து போனோர்களை மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்களையும் கொலை செய்து பழிவாங்கியமை.
6. பணப் பங்களிப்பாளர்கள் – அல்லாதோர் என பதிவு இலக்கங்கள் வழங்கிப் பழிவாங்கியமை.
7. அன்றாடம் வாழ வழியில்லாத சிறு உழைப்பாளிகளிடமுங்கூட வரி அறவிட்டமை.
8. ஆழிப்பேரலை அனர்த்தங்களால் சீரழிந்த மக்களுக்கென, புலம்பெயர் மக்களால் சேர்த்துக் கொடுத்த நிதித் திரட்டுக்களில் மாபெரும் ஊழல் செய்தமை.
9. தாங்கள் பயங்கரவாதத் தவறுகளைப் புரிந்தவாறே, மக்களின் சிறிய தவறுகளுக்கும், அவைக்கான அர்த்தமற்றோருக்கும், சமூகச் சீர்திருத்தங்கள் என ஏதோ சட்டங்களால் தண்டனைகள் வழங்கியமை.
10. தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, சமூகச் சீரழிவு என்ற பொதுக் குற்றங்களைச் சுமத்தி, தண்டனை வழங்கிப் பழிவாங்கியமை.
11. தாங்கள் சார்ந்த மதத்தில் காணக்கூடிய மூடநம்பிக்கைகளை – ஒடுக்குமுறைகளை களையாது, அவற்றை சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு போற்றி வந்தமை.
12. பணமும் – ஆயுத பலமும் – தாக்குதல் தந்திரமும் – குண்டுகள் சுமந்து தங்களை வெடிக்கும் இளம் போராளிகளும், தங்களிடம் மிகையாக இருக்கென்ற மனிதாபிமானமற்ற திமிர்த்தனப் போக்குகளை மட்டும், உலகுக்கு துல்லியமாக வெளிப்படுத்தியமை.
13. அதிசிறந்த – மிகப்பயங்கரமான – அறிவாற்றல் மிக்க – உலகப் போராட்ட இயக்கங்களிலேயே முதன்மையான – யாராலும் அழிக்கவோ, நெருங்கவோ முடியாத – பன்முகப்படுத்தப்பட்ட இராணுவ கட்டமைப்புகளைக் கொண்ட அமைப்பு என, சர்வதேசம் இவர்களைக் கூறிக் குசியேத்தி, சர்வதேசத்தின் வல்லாண்மை அரசியல் வலைக்குள் இவர்களை மாட்டிய வேளைகளைப் புரியாத அசமந்தப் போக்குடன் இருந்தமை.
14. தமிழீழம் தவிர்ந்த வேறு எந்தவித தீர்வுத் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ளாமை.
15. தீவிரமாக நடக்கும் ஒரு போராட்ட காலத்தில் ஜனநாயகத்தினை முழுமையாக எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலோ பேரின வாதத்தின் தமிழின அழிப்பினை விடவும் புலிகள், மாற்றுக் கருத்துக்கொண்ட இயக்கங்களை அடக்கி – ஒடுக்கி – சுட்டெரித்து – அழித்த பாசிசத்தினை எந்த மக்களுக்கான ஜனநாயகத்தில் வைத்துப் பார்ப்பது.
16. மக்களின் – கருத்தாளரின் கோரிக்கைகளை இறுதிவரை ஏற்காமலே, எருமை முதுகில் மழை பெய்ததுபோல, அவர்களை போர்நிலையின் பகடைக்காய்களாக மட்டுமே நகர்த்தப் பாவித்தமை.
இப்படி எத்தனையோ விடையங்களை அடுக்கிச் செல்லலாம். புலிகளின் போராட்டம் என்பது எந்த வகையான அடிப்படையில் ஆரம்பித்ததோ, அதேவகை அழிவாலேயே முடிந்திருக்கின்றது. அதாவது வினை விதைத்தவன் அதனையே அறுப்பான் என்பது இதைத்தான் எனலாம்.
முள்ளிவாய்க்கால் முட்டுச் சந்தில் முடக்கி அழிக்கப்பட்டிருக்கின்றது.
இனி நாம் என்ன செய்யவேண்டும்..?
இலங்கைவாழ் தேசிய இனங்களின் ஜனநாயக வாழ்வுக்கான விடுதலைக்காக, நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக