திங்கள், 25 ஏப்ரல், 2011

காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் முல்லை மாவட்டத்தில் முற்றாக அழிவு: உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை


சுனாமி, யுத்தம் என்பனவற்றின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி, பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் பெருமளவில் அழிந்தும், தொலைந்தும் போய்விட்டன. ஆகையால் அவற்றை உரியவர்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், முல்லைத்தீவு புதிய நீதிமன்றத்தின் நிர்மாணப் பணிகளை நேரில் கண்காணிப்பதற்காக வியாழக்கிழமை (21.04.2011) மாலை அங்கு சென்றிருந்தார். முன்னதாக அன்று முற்பகல் மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அவர் விஜயம் செய்ததோடு நீதிபதி, சட்டத்தரணிகள் மத்தியில் உரையாற்றினார்.

முல்லைத்தீவுக்கு முதல் முறையாக விஜயம் செய்த நீதியமைச்சர் அங்குள்ள மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் நிலைமைகளை ஆராய்ந்தார்.

அங்கு கருத்துரைக்கும் போது அமைச்சர் ஹக்கீம் தெரிவித்ததாவது :-

கொடூர யுத்தத்தின் இறுதிக் கட்டம் இங்குதான் நடந்து முடிந்தது. சுனாமிப் பேரலை அனர்த்தமும் இங்கு நடந்திருக்கின்றது. அவற்றின் விளைவாக இங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதனால் அவர்கள் தமது காணி உறுதிகளையும், பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையும், திருமணப் பதிவுச் சான்றிதழ்களையும் ஏனைய முக்கிய ஆவணங்களையும் இழந்துவிட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான ஆவணங்களை அவற்றிற்கு உரிய மக்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடமாடும் சேவையொன்றை முல்லைத்தீவில் நடாத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அழிந்துபோன அல்லது தொலைந்து போன காணி உறுதிகள், பேர்மிட் என்பனவவற்றைப் பெற காணிப் பதிவகம், நில அளவைத் திணைக்களம் என்பன முறையாக செயல்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக நடமாடும் சேவையொன்றின் அவசியம் உள்ளது.

வன்னிப் பெருநிலப் பரப்பில் ஏனைய பிரதேசங்களின் குறுக்கு வெட்டு முகத் தோற்றத்தை முல்லைத்தீவில் காணலாம்.

இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இருபதாயிரம் வீடுகளுக்கான தேவையிருந்த போதிலும் இரண்டாயிரத்து ஐநூறு வீடுகளுக்கான பெயர்ப் பட்டியல் மட்டுமே உள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். பீ. பாரூக், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பத்திநாதன், பிரதேச செயலாளர் தயானந்தன் ஆகியோரும் மாவட்டச் செயலகத்தில் நடந்த இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

நீதியமைச்சர் ஹக்கீம் நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, வட்ராப்பளை, ஹிஜ்ராபுரம் ஆகிய ஊருகளுக்கும் விஜயம் செய்து மீளக்குடியேறிய மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். நீதியமைச்சரின் முல்லைத்தீவு இணைப்பாளர் எம். எச். எம். நஜாத் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக