செவ்வாய், 2 நவம்பர், 2010

India Japan America அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்; அதன்மூலம் பயன் பெறமுடியும்?

அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

சீனா, இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளாது. அதன் அரசியல் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு வழி ஏற்படாதவண்ணம் திபெத், அருணாசலப் பிரதேசம், அக்சாய் சின், பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பற்றிய சீனாவின் கருத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மேலும், சீனா, இந்தியாவை தன்னுடைய போட்டியாளராகவே பார்க்கும். கம்யூனிச அல்லது ஒற்றை ஆட்சி சீனா, ஜனநாயக இந்தியாவைத் தன் நெருக்கமான அரசியல் உறவாகப் பார்க்க எந்த வாய்ப்பும் இல்லை.

அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகொள்ள வாய்ப்புகள் உள்ளன; ஆனால் இது நடக்காது என்று தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தைச் செலுத்தும். ஆஃப்கனிஸ்தானில் கழுத்துவரை சிக்கியுள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனாலேயே அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படாமல் எக்கச்சக்கமான சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கும் கலாசாரரீதியில் உறவுகள் குறைவு. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, வரும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படப்போகும் காரணத்தால் ஏழை அமெரிக்கர்கள் இனவெறியுடன் நடந்துகொள்ளக் காரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் வளமான இந்தியர்கள் இந்த ஏழைகளின் இன்வெறிக்கு ஆளாக நேரிடும் அபாயங்களும் உள்ளன. இந்திய அரசு அமெரிக்க உறவை விரும்பினாலும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிஸ்டுகள், சுதேச இந்துத்துவர்கள், பொதுவான அறிவுஜீவிகள் என அனைவருமே அமெரிக்காவை வெறுப்பவர்கள்! அமெரிக்காவுடனான எந்தவித நல்லுறவுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு ஏற்படாவண்ணம் இவர்கள் நடந்துகொள்வார்கள்.

ஆனால், இந்தவிதமான பிரச்னைகள் ஏதும் ஜப்பான் உறவில் இல்லை. ஜப்பான் 1950-கள், 1960-களில் அணுகுண்டுத் தாக்குதல், இரண்டாம் உலகப்போர் தோல்வி ஆகியவற்றிலிருந்து மீண்டு, 1970-களிலும் 1980-களிலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், பிரிசிஷன் மெஷினிங் போன்ற பலதுறைகளில் உலகின் நம்பர் ஒன் நாடாகத் திகழ்ந்தது. விளைவாக ஏற்பட்ட டிரேட் சர்ப்ளஸ், அதன் விளைவாக கையில் எக்கச்சக்கமான பணம். இதன் காரணமாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பானின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கியுள்ளது. டிஃப்ளேஷன் ஒரு பெரிய பிரச்னை. ரியல் எஸ்டேட் முதல் பங்குச்சந்தை வரை கடுமையான வீழ்ச்சி. வயதானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகமாதல். இதனால் ஏற்படப்போகும் பென்ஷன் பிரச்னைகள். வருங்கால ஜப்பானியத் தலைமுறை நம்பிக்கை இழத்தல்.

இவற்றுடன், ஜப்பானின் ஜனநாயகத்தில் பொதிந்துள்ள அரசியல் குழப்பம் காரணம். ஜப்பானின் இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால் பொதுவாகவே நீங்கள் தடுமாறுவீர்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவரே பிரதமராக இருப்பாரா என்பதும் தெரியாது.

ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான சச்சரவுகள் எழப்போகின்றன. இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இத்தனூண்டு ஜப்பான் சீனாவைக் காலனியாக்கி சீன மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. நடந்தது 20-ம் நூற்றாண்டில். இதனைச் சீனர்கள் மறக்கப்போவதில்லை. ஜப்பான் தன் மூலப் பொருள்களுக்கு சீனாவையோ ஆஸ்திரேலியாவையோதான் பெருமளவு நம்பியிருக்கவேண்டும். சீனா இப்போதே தன் கச்சாப்பொருள் ஏற்றுமதியைக் குறைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டது. மறுபக்கம் ஆஸ்திரேலியா விரைவாக சீனாவின் சப்சிடியரி சுரங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.

அமெரிக்கா, ஜப்பானுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அமெரிக்கா தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டும்.

இந்த நிலையில் ஜப்பான் இயல்பாகப் பார்க்கவேண்டிய நாடு இந்தியா. ஜப்பானிடம் இப்போதும் நிறையப் பணம் உள்ளது. அதனை மேலும் மேலும் அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதில் பிரயோஜனம் இல்லை. அதை அவர்கள் இயல்பாக முதலீடு செய்யவேண்டியது இந்தியாவில்தான். அதையும் மிக அழகாக, தங்களுக்கும் இந்தியாவுக்கும் லாபம் வரும் வகையில் செய்யலாம்.
இந்திய, ஜப்பானிய உறவுக்குள் பிரச்னை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஜனநாயகரீதியாக, மதரீதியாக, ஏன் மொழிரீதியாகக்கூட. இந்தியர்கள் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது. (மேலும் பதிலாக நாம் அவர்களுக்கு ரஜினிகாந்த் படங்களையும் மீனாவின் கண்களையும் கொடுத்துவிடலாம்! இதுமட்டும் ஜோக்!)

இப்போது மன்மோகன் சிங் ஜப்பான் பிரதமருடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே இந்தியாவிலோ, நாம் அடுத்து ஒபாமா இரண்டு நாள்கள் இங்கு வருவதைப் பற்றி அதிசயித்துக்கொண்டிருக்கிறோம். ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.

நன்கு வளர்ந்த இந்தியாவால், ஜப்பானுக்கு அரசியல்ரீதியிலும் லாபம் உண்டு. அப்போது சீனா வேறுவழியின்றி இந்தியாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிவரும். அதனால் ஜப்பான்மீது கொஞ்சம் கவனத்தை எடுக்கும். இன்னும் சிலாக்கியமானது அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆக்ஸிஸ். ஆனால் இது நடக்க வாய்ப்புகள் குறைவு. குறைந்தது ஜப்பான்-இந்தியா உறவையாவது மேம்படுத்த நாம் முயற்சி செய்யவேண்டும்.
 
http://thoughtsintamil.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக