வியாழன், 4 நவம்பர், 2010

அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒபாமா கட்சி தோல்வி : பொருளாதார கொள்கைகள் நிறைவேறுமா

அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளில், அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்ததே தோல்விக்கு காரணம் என, கூறப்படுகிறது.

அமெரிக்க பார்லிமென்ட், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என, இரு சபைகளைக் கொண்டது. இதில், செனட் சபையே உயரிய அமைப்பாகும். 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 37 இடத்திற்கும், மொத்தம் உள்ள 50ல் 37 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுக்கவும் நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர், 230 இடங்களைப் பிடித்தனர். 164 இடங்களை அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினர் பிடித்தனர். மீதமுள்ள இடங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. குடியரசு கட்சியினர் முந்தைய தேர்தலில் பெற்றதை விட, 57 இடங்களைக் கூடுதலாக பெற்றுள்ளனர். அதேநேரத்தில், செனட் சபைக்கான தேர்தலில், மொத்தமுள்ள 100 இடங்களில், 51 இடங்களை ஒபாமாவின் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினர், 46 இடங்களையும் பிடித்துள்ளனர். இதில், ஒபாமா கட்சி மெஜாரிட்டி பெற்றுப் பிழைத்தது. குடியரசு கட்சியினர் முந்தைய தேர்தலில் பெற்றதை விட, கூடுதலாக ஆறு இடங்களைப் பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில், மாகாண கவர்னர்களுக்கான தேர்தலில், தேர்தல் நடந்த 37 இடங்களில், ஜனநாயக கட்சியினர், 14 மாகாணங்களையும், குடியரசு கட்சியினர் மீதமுள்ள 23 மாகாணங்களையும் பிடித்துள்ளனர். இதில் ஜனநாயக கட்சியினருக்கு ஒன்பது கவர்னர்கள் எண்ணிக்கை குறைந்தது. தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட, 38 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். லூசியானா மாகாண கவர்னராக முன்னர், இந்திய வம்சாவளியைச் பாபி ஜிண்டால் தேர்வு பெற்றார். அவருக்குப் பின், இப்போது ஹாலே வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கி ஹாலே, 52 சதவீத ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வின்சென்ட் ஷீகன், 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.  அதேநேரத்தில், அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற ஆறு இந்தியர்கள் தோல்வி அடைந்தனர். பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி தோல்வி அடைந்ததற்கு, அவரின் பொருளாதார கொள்கைகளே காரணம் எனக் கூறப்படுகிறது. ஒபாமாவின் பொருளாதார கொள்கைகளால் அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள், எதிர்க்கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் எதிர்க்கட்சியான குடியரசு கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஒபாமா பேசினார். அமெரிக்க மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதித்தார். ஒபாமா பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர் செனட் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிட்ச் மெக்கானல். அமெரிக்க பார்லிமென்டின் ஒரு சபை எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்திருப்பது, அதிபர் ஒபாமாவுக்கு பல வகையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மசோதாக்களை நிறைவேற்றுவதும், சலுகைகளை அறிவிப்பதும் அவருக்கு சிரமமாகவே இருக்கும். பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிகளவு மக்கள் வரிப்பணத்தைச் செலவழிக்கும் அரசு என்று குறைகூறி குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆனால், அதிபர் ஒபாமா தன், "வீட்டோ' அதிகாரங்களால் சட்டங்களை செனட்டில் அமல்படுத்த வேண்டிய நிலை இனி வரலாம். தவிரவும், எது அமெரிக்க நலனுக்கு உகந்தது என்று இரு கட்சிகளும் கருதுகின்றதோ அது மட்டும் சட்டமாகும் என்ற நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் ஒபாமா இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இத்தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. இதனால் அவர் சுற்றுப் பயணம் பாதிக்கப்படமாட்டாது என்றாலும், அவருக்கு முன்பிருந்த மக்கள் செல்வாக்கு அமெரிக்காவில் இல்லை என்பதைக் காட்டும் விதத்தில் இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன.

அமெரிக்க இடைத்தேர்தலில் மொத்தம் நிக்கிஹாலே உட்பட மொத்தம் ஏழு அமெரிக்க இந்தியர்கள் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சி சார்பில் பென்சில்வேனியா மாகாணத்தில் மனன் திரிவேதி என்பவரும், கலிபோர்னியா மாகாணத்தில் அமி பெரா என்பவரும், கன்சாஸ் மாகாணத்தில் ராஜ் கோயல் என்பவரும், லூசியானா மாகாணத்தில் ரவி சங்கிஷெட்டி என்பவரும், ஓகியோவில் சூர்யா எலமாஞ்சிலி என்பவரும் போட்டியிட்டனர். இல்லினாய்ஸ் மாகாணத்தில், குடியரசுக் கட்சி சார்பில் அஸ்வின் லாட் என்பவர் போட்டியிட்டார். இவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக