புதன், 10 நவம்பர், 2010

என்ன சொல்லப் போகிறார்கள் சமூக சேவகியும் சட்டத்தரணியும்?


-ஜானகி
தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய  தமிழ் இனவெறி அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் ‘தரித்திர’ நிலைமையை தாமும், தம் உற்றார் உறவினரும், உடன்பிறப்புகளும் பயன்பெற பாவித்து வந்ததேயன்றி தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகள் எவற்றுக்கும் எந்தவொரு தீர்வையும் இதுவரையில் எடுத்துத்தந்ததில்லை. இன உரிமைப் பிணக்குகளை ஊதிப் பெருப்பித்து, ஏழை, வறிய தமிழரின் எதிர்காலத்தில் தமக்கு நல்லதொரு வாழ்வையும், தமது சந்ததிக்கு வளமானதொரு எதிர்காலத்தையும் ஏற்படுத்திக்கொண்டதே இந்த இனவெறித் தமிழ்; தலைமைகளின் இதுவரைகால அரசியல் வரலாறு. தமிழ் ஊடகப் போலிகளின் உதவியுடன் தமிழர் பிரச்சினையை எண்ணை ஊற்றி ஊதி எரித்து வளர்த்து தமது வயிற்றை நிரப்பி வந்ததேயன்றி இந்த இனவெறித் தமிழ் பாராளுமன்ற அரசியல் பிரகிருதிகள் எமது மக்களுக்குச் செய்தது எதுவுமேயில்லை.
இவர்களின் ‘பாழாய்ப்போன’ ‘அரசியல் பரப்புரை’களுக்குப் பலியானவர்களுள் பரிதாபத்திற்குரியதொரு பெரும் பிரிவினராய் தமிழ் பெண்களே இருந்துள்ளனர். பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதியாக இவர்களிட்ட ‘பிச்சை’யான பத்மினி சிதம்பரநாதன் செய்ததெல்லாம் ‘பொங்கு தமிழ்’ நிகழ்வுகளில் புடவைகட்டிக்கொண்டு ‘பொம்மலாட்டம்’ போட்டதும், புலம்பெயர் தமிழரிடம் ‘பொறுக்கி’த் திரிந்ததும்தான். ஆனால், இந்த ஏழைத் தாய்களின் ஓட்டுக்களைப் பொறுக்க இவர்களுக்காக ஒப்பாரி வைக்க மட்டும் இந்தத் தலைமைகள் என்றுமே தயங்கியதில்லை.
இந்தச் சூழ்நிலையில், பெண்களின் - குறிப்பாக ஏழைத் தமிழ் விதவைத் தாய்களின் - இந்தத் ‘தலை விதி’யை பயன்படுத்தி ‘புதையல்’ எடுக்க தமிழ் பெண்கள் அமைப்புகள் பல புற்றீசல்போல் முளைத்திருந்தன. பெரும்பாலும் ‘தமிழ் ஈழ’த்திற்கு வெளியேயே ‘தளம்’ அமைத்திருக்கும் இந்தத் தன்னார்வத் தமிழர்  குழுக்கள் பல, இடையிடையே வட கிழக்குக்கு வருகை தந்து ‘கணக்குக் காட்ட’ இரண்டொரு கருத்தரங்குகள் வைப்பதுடன் திருப்தியடைந்து ‘கடையை மூடி’ திரும்பி விடுகின்றன. இவைகளுக்கு இரண்டொரு புறநடைகள் இல்லாமலில்லையெனினும், இவைகள் எவையுமே எமது பெண்கள் தமது தலைவிதியைத் திருப்பி அமைக்க உதவியதில்லை.
இவைகளுள் ஒருவரே சாந்தி சச்சிதானந்தம். சாந்தி சச்சிதானந்தம் ஒரு சமூக சேவகியாகவும் தெரியப்பட்டவர். தலைநகரிலுள்ள ‘விழுது’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவி இவர். ‘அகவிழி’, ‘கூடம்’, ‘இருக்கிறம்’ என இரண்டொரு பத்திரிகைகளையும்  நடத்தி ‘தமிழ்; பணி’ செய்து வருபவர். இதைவிட, ‘பப்ளிசிட்டி’க்கு பத்திரிகை, டீ.வி., வானொலி பேட்டிகள் வேறு. இவற்றுடன், இடையிடையே, தத்துவப் போதனைகளும் செய்து தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டு ‘விழுந்து எழும்ப’ இவர் தவறியதில்லை.
உதாரணத்திற்கு, புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளுள் ஒன்றாக புலம்பெயர் நாடொன்றிலிருந்து இயங்கும் ‘தமிழ் நெற்’ இணையத்தளத்தில், இரண்டாயிரத்து எட்டு பொங்கல் தினத்தை அடுத்து பிரசுரமாகியிருந்த இவரது பேட்டியொன்றில் இவர் பிதற்றியிருந்த ‘அரசியல் ஆய்வு’கள் இவரது அரசியல் அறிவுக்கு நல்லதொரு அளவுகோல். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுடன்; ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ தமிழீழ விடுதலைக்கனவு தகர்ந்து கொண்டிருந்த தருணமது. சண்டாளர்கள் சமாதியாவது எப்போது என ஏழை மக்கள் ஏங்கித்திரிந்த நேரம். வெறுமனே தனது தலைமையைத் தங்கவைக்க மட்டுமே, போராட்டமென்ற பெயரில் ஒரு போரை நடத்தி வந்துகொண்டிருந்த தலைவரின் ‘போதாத வேளை’.    ஏழை வறிய மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்து கதற கதற  பருவமடையாத பிள்ளைகளைக்கூட புலிகள் பலவந்தமாகப்பிடித்து பயிற்சிக்கு அனுப்பிக் கொண்டிருந்த காலம்.  அந்த நேரமே, மேற்படி பேட்டியில், பிரபாகரனே அர்ப்பணிப்புள்ள ஒரேயொரு அரசியல் தலைவரெனவும், 50களிலும், 60களிலும், 70களிலும் தமிழ் அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களுக்கு உருவமும், உரத்த குரலும் கொடுத்தவர் அவரே எனவும் தமிழ் இனவெறி உறவுகளை குசிப்படுத்த அம்மணி அவர்கள் அருளியிருந்த ஆய்வுரை, தமிழர் அரசியல் ஆர்வலர்கள் பலரின் கொதியைக் கிளறியிருந்தது. இதன் பின்னர், இப்போதுங்கூட, ‘யங் ஏசியா டெலிவிசன்’ என்னும் இணையத் தொலைக்காட்சி ஒன்றில்   ‘ஆஜராகியிருந்த’ அம்மையார் அவர்கள், யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருந்த கடத்தல்கள்பற்றி கருத்துத் தெரிவிக்கையில், இந்தக் கடத்தல்கள் அனைத்தின் பின்னணியிலும் இங்குள்ள அரசியல் கட்சியொன்றே இருப்பதாகவும், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு ஒரு பாடம் புகட்டுமாறு தான் இந்தக்கடத்தல்கள்பற்றி தன்னிடம் முறையிட வந்தவர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் திருவாய் மலர்ந்தருளியிருந்தார். ஏறத்தாழ இந்தக் கடத்தல்கள் அனைத்துமே, தனிப்பட்ட காரணங்களுக்காக, உறவுகளுக்கிடையில் நடந்த ‘உள் வீட்டுப்’ பிரச்சினைகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும்கூட, இவரது இந்தப் பிதற்றல்கள் பலருக்கு வியப்பை அளித்திருந்தது.
நிலைமைகள் இப்படியிருக்க, இவரை சந்திக்கு இழுத்து வந்திருக்கிறார் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். புலம்பெயர் தமிழ் பெண்ணியவாதிகளுள் மூத்தவரென புகழ்பெற்ற எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமே ‘தேனீ’ இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொனறில் இந்த சாந்தி சச்சிதானந்தத்தின் சாயத்தை கழற்றியுள்ளார்.
வெளிச்சத்திற்கு வந்துள்ள விடயம் இதுதான்.
2005ல் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பதின்மூன்று வயது பாலகி ஒருவரை புலிகளின் அரசியல் ஆலோசகர்களுள் ஒருவரென அறியப்பட்டிருந்தவரும், ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கம் என பரவலாக தெரிந்திருந்தவருமான யாழ் பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் ஒருவர் பல தடவைகள் பாலியல் வலோத்காரம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார். இந்தக் குற்றம் தொடர்பில் இந்தப் ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கம் கைது செய்யப்பட்டிருந்ததும், பின்னர் விடுதலை செய்யப்பட்டு, தொடர்ந்து தற்போதும் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது தொழிலைத் தொடர்ந்து வருவதும், இவர் மீதான குற்றம்  மறக்கப்பட்டு விட்டதும், பழைய கதை. அத்துடன் இந்தப் படுபாதக பாலியல் வன்முறைக்குப் பலியான பாலகிக்கு என்ன நடந்தது என்பதும் மறைக்கப்பட்டு விட்டது.
இனப் பிரச்சினைகளென புரிந்துகொள்பவற்றைத்தவிர, நேற்று நடந்தவைகளையே இன்று மறந்து விடுகின்ற எமது மக்கள், இந்தப் பாதகத்தையும் பாராமுகமாகவிட்டதில் வியப்பேதுமில்லை.  ஆனால் எமது மக்கள் எல்லோருமே மடையர்கள் என ‘சமூக சேவகி’ சாந்தி சச்சிதானந்தமும், ‘பொங்கு தமிழ்’ புகழ் கணேசலிங்கமும் புரிந்துகொண்டிருந்ததுதான் தவறு என இருவரையும் சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சாந்தி சச்சிதானந்தமும் பத்திராதிபர்களுள் ஒருவராகவுள்ள அவரின் ‘விழுது’ நிறுவனத்தின் ‘கூடம்’ என்னும் சஞ்சிகையில் மேற்படி ‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கமும் தொடர்ந்து பங்களித்துவர பெண்ணியவாதி சாந்தி சச்சிதானந்தம் எப்படி அனுமதித்தார் என்பதே இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுப்பியுள்ள கேள்வி. 
கேள்வி நியாயமானதுதான்.
என்ன சொல்லப் போகிறார் எங்களுடைய சமூக சேவகி ?
2. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்திடம் மாட்டிக்கொண்டிருக்கும் இன்னொருவர், மனித உரிமைகள் சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ் அவர்கள். மனித உரிமைகள் சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ் யாழில் பிரபலமான ஒருவர். தமிழ் தேசியப் பற்றாளரென போசிக்கப்படுபவர். யாழ் மாநகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு  மாநகர சபையில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருப்பவர். அபிவிருத்தி வேண்டாம், உரிமைதான் வேண்டும் என இன்னமும் உரத்துக் குரலெழுப்பி தமிழ் உறவுகளைக் குசிப்படுத்திவரும் ஒரு கொள்கைக் குன்று. வரும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட பொருத்தமானவர்களுள், இவரே முதலாமவர்.
இந்த மனித உரிமை சட்டத்தரணி முன்னர் இலங்கை மனித உரிமை ஆணையத்திலும் பின்னர் யாழ் மனித உரிமைகள் மேம்பாட்டு மையத்திலும் முழுநேர சட்டத்தரணியாக ஊதியம்பெற்று பணியாற்றியவர். ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களுக்காக தான் இலவசமாக கோடேறி இறங்கியதாக பகிரங்கமாகப் பொய் சொல்லி பலரின் புருவத்தை உயர்த்தியவர். இவரே இந்த பாலியல் வல்லுறவுக்குள்ளான பாலகி யோகேஸ்வரி முத்தையாவுக்காக வழக்காடிய சட்ட வல்லுனர்.
‘பொங்கு தமிழ்’ கணேசலிங்கத்தை காப்பாற்றுவதற்காக புலிகள் பாலகி யோகேஸ்வரி முத்தையாவை கொலைசெய்துள்ளதாக குற்றஞ் சாட்டியுள்ள பெண்ணியவாதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பாலகி யோகேஸ்வரி முத்தையாவுக்கு என்ன நடந்தது என சட்டத்தரணி முடியப்பு றெமீடியசிடம் கேட்குமாறு பகிரங்கமாகக் குரல் எழுப்பியுள்ளார்.
முடியப்பு றெமீடியஸ் என்ன சொல்லப் போகிறார் ?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக