புதன், 10 நவம்பர், 2010

சூதாட்டவரி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இளைஞர்களின் எதிர்காலம் பாழாகும் : ஐ.தே.க. எச்சரிக்கை

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் சூதாட்டவரி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் எமது நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் பாழாவதற்கே வழிபிறக்கும் என கண்டித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தர்மராஜ்யம் விரைவில் சூதாட்டபுரியாக மாறும் அச்சுறுத்தல் உருவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சி ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.அவர் செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது அன்று ஜே.ஆர்.ஜயவர்தன இந்த நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்காக சுதந்திர வர்த்தக வலயங்களாக மாற்றியமைத்தார். அதன் காரணமாக மிகக்குறுகிய காலத்தில் நாடுபொருளாதார ரீதியில் படிப்படியாக முன்னேற்றம் கண்டது.
1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாடு வறுமைக்கோட்டின் கீழ் மட்டத்துக்கே போயிருந்த நாட்டை ஜே.ஆர்.மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கு கட்டியெழுப்பினார். அன்று திறந்த பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தவர்கள் தாங்கள் ஆட்சிப் பீடமேறியதன் பின்னர் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். எமது நாட்டுக்கு சுதந்திர பொருளாதாரத் திட்டத்தின் அவசியத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக்கட்சி எப்போதும் நாட்டை பொருளாதாரரீதியில் கட்டியெழுப்புவதற்கே திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வந்துள்ளது. பொருளாதார வளத்தை மேலோங்கச் செய்த பின்னர். சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டுக் குடும்பம் நாட்டின் வளத்தை அழித்தொழித்து குட்டிச்சுவராக்கி வருகின்றது. தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதனை நாம் ஒருபோதும் எதிர்க்க முற்படவில்லை. ஆனால் அந்த தேசிய உற்பத்தியின் மூலம் நாடு வளமடைய வேண்டுமென்றே வலியுறுத்துகின்றோம்.
யுத்தத்துக்குப்பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாக அறிவித்த அரசு இன்று நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததும் வரவு செலவுத்திட்டத்தில் பெரியஅளவில் துண்டுவிழும் நிலை காணப்படுவதால் அதனை ஈடு செய்வதற்கு வெளிநாட்டுக் கடனுதவியை பெறவேண்டியிருப்பதாக தெரிவித்தது. நாட்டின் இறைமையை பாதிக்காதவகையில் இந்த கடனுதவி பெறப்படும் என்று கூறினர். இன்று திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு வட்டித்தொகை மோசமாக அதிகரித்துக் காணப்படுகிறது. எமது கிராமப்புறங்களில் காணப்படுவது போன்று நெருப்பு வட்டிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. இக்கடனுக்கு நாட்டில் வாழும் ஒவ்வொரு மகனும் ஏன் இன்னும் 10 ஆண்டுகளுக்கிடையில் பிறக்கும் பிள்ளைகள் கூட கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஜனநாயகம், மனிதஉரிமைகளைப்பாதுகாக்கும் 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சுருட்டி குப்பையில்போட்டு விட்டு தான்தோன்றித்தனமாக 18 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்தை நிறைவேற்றி சர்வாதிகார ஆட்சியொன்றை அமைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறான நிலை உருவாகுமென எதிரணிக்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் பலதடவை சுட்டிக்காட்டினர். அன்று மக்கள் இதனை உணரத்தவறினர். இன்று உண்மையை மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
சர்வதேசநாடுகள் கூட இலங்கை ஜனநாயக விரோதப்பயணத்தை மேற்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எவரும் வரத்தயக்கம் காட்டுகின்றனர். உல்லாசப் பயணிகள் கூட வரப்பின்வாங்குகின்றனர்.சிறைச்சாலைகளுக்குக்கூட பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியுள்ளது. ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் கிடையாது. முழுநாட்டினதும் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரச அச்சுறுத்தலே நாட்டை பயங்காட்டிக் கொண்டிருக்கின்றது. மக்கள் வாய்திறக்கப் பயப்படுகின்றனர்.
வெளிநாட்டு டொலர் மோகத்தில் நாட்டை சூதாட்ட புரியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே சூதாட்ட வரி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலத்தைக் கொண்டுவரவுள்ளனர். நாட்டின் ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் அனைத்துமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எமது இளைஞர்கள், யுவதிகளின் எதிர்காலம் பாழாக்கப்படும் அவலம் உருவாகியுள்ளது. தர்ம ராஜ்யம் எனப்பெயர்பெற்ற நாடு அதர்மபுரியாக மாறிவருகின்றது.
ஜனநாயகத்தின் மீதும், தேசத்தின் மீதும் பற்றுக் கொண்ட, எமது எதிர்காலச்சந்ததிக்காக கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க முன்வர வேண்டும். எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக