சனி, 13 நவம்பர், 2010

உத்தமபுத்திரன் - விமர்சனம்


          குடும்பத்தோட குதூகலமா படம் பார்க்கலாம். காதல், காமெடி, செண்டிமென்ட், சண்டை காட்சிகள் என எல்லா விஷயங்களும் நிறைந்து இருக்கும் மசாலா மூவி. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த 'ரெடி' படத்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ காட்சிக்கு காட்சி தெலுங்கு வாசம் வீசுகிறது. 



தெலுங்கில் நடித்த ஜெனிலியா இதிலும் வலம் வருகிறார். பாக்யராஜ், அம்பிகா, ரேகா, ஆசிஷ் வித்யார்த்தி என எல்லா கதா பாத்திரங்களையும் கச்சிதமாய் ரீப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஜவஹர். ஆனால் இதில் 'உத்தமபுத்திரன்' தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பு... 

மூன்று அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் பெரிய கூட்டுக் குடும்பம். இதல் ஒருவரின் மகன் சிவா (தனுஷ்). யாருக்காவது ஒரு பிரச்சனைன்னா போதும் உயிரைக் கொடுக்கக் கிளம்பிவிடுவார் சிவா. சிவாவின் நண்பனின் காதலில் பிரச்சனை. நண்பனின் காதலியை கடத்துவதற்கு பதிலா வேறொரு பெண்ணை கடத்திக் கொண்டுவந்து மொக்கை வாங்குகிறார் சிவா.

 

ஆனால் சிவாவின் அதிர்ஷ்டம் அது பூஜாவாக (ஜெனிலியா) இருக்க, அவர் மேல் சிவாவுக்கு காதல் வருகிறது. தன்னை கல்யாணம் செய்துகொள்ள பல சிக்கல்கள் இருப்பதாக பூஜா விளக்கம் தருகிறார். தன் காதலை சிவா எப்படி வெல்கிறார், அதற்கு சிவாவின் மாமா எமோஷனல் ஏகாம்பரம் (விவேக்) எப்படி உதவுகிறார் என்பதே சுபமான க்ளைமாக்ஸ். 

படத்தின் முதல் பாதி சீரியல் கணக்கா ஜவ்வு மாதிரி இழுத்திருப்பது ரொம்ப போர். முதல் பாதியில் காமெடிக்கு கருணாஸை நம்பியிருக்கிறார் இயக்குனர். கருணாஸும் முடிந்த அளவு முயற்சித்திருக்கிறார்... ஆனா சிரிப்புதான் வரலை! சமீபகாலமாக பேசிப் பேசி காதைப் புண்ணாக்குகிற விவேக் இதில் பேசாமல் நடித்து கைதட்டல் வாங்கி இருக்கிறார்.

  

சந்தோஷ் கான் கதாபாத்திரத்தில் மயில்சாமி சிரியோ சிரின்னு சிரிக்க வைக்கிறார். சின்ன முத்து கவுண்டர், பெரிய முத்து கவுண்டர் என அண்ணன் - தம்பிகள் ஆசிஷ் வித்யார்த்தி, ஜெயப்பிரகாஷ். கொடூரமான கொண்டை மண்டைகளோடு அறிமுகமாகி க்ளைமாக்ஸ் வசனங்களில் நெகிழ வைக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் கூட ரோஸ் பவுடர் லிப்ஸ்டிக் என மேக் அப்-போடு திரையில் திரிவது அபத்தம். ஒரே பிரேமில் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பல கேரக்டர்களை சும்மா நிற்க வைத்திருப்பது நியாயமில்லை. 

சண்டைக் கட்சிகள் ஓவர் அலட்டல் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது ஆறுதல். இசை விஜய் ஆண்டனி, தான் பாடுவது வெளியே கேட்கிறதா இல்லையா என்ற வழக்கமான சந்தேகத்தில் தொண்டைக் கிழிய கத்தியிருக்கிறார். இருந்தாலும் மனசு முனுமுனுக்குற வார்த்தை உஸ்ஸமலாரிஸே... 

எது எப்படியோ இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் தனுஷ் - ஜெனிலியா ரொமான்ஸ் சும்மா நச்சுனு இருக்கு! சறுக்கி விழ இருந்த உத்தமபுத்திரனை கைக் கொடுத்துக் காப்பாற்றி இருக்கிறார் 'எமோஷனல் ஏகாம்பரம்' விவேக். 

உத்தமபுத்திரன் - காமெடி ஏகாம்பரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக