சனி, 13 நவம்பர், 2010

Bihar ஆடைகள் களையப்பட்டு கசையடி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. இதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்டுகள் கழிந்த நிலையில் இறந்து போனார். பின், முகமது இஸ்லாம் என்பவரை அப்பெண் மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

ஆனால் இந்தத் திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சில நாட்களில் சிறுவனது உடல்நிலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. முகமது விவாகரத்தான மனைவியை அழைத்து வந்து மகனை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். சிறுவன் தேறிய பின், இருவரையும் விட்டு விட்டுப் போய்விட்டார். இந்நிலையில், முகமதுவும், அவரது சகோதரர் சம்சுதீனும் சேர்ந்து ஒரு பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வரும்படி, இளம்பெண்ணுக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இம்மாதம் 8ம் தேதி, க்வால்டோலி-கல்யாண் நகர் கிராமத்தில் நடந்த அந்த பஞ்சாயத்தில், இளம்பெண்ணிடம் மறுமணம் செய்யவும் வீடு கட்ட பணம் கேட்டுள்ளனர். அதோடு பஞ்சாயத்துத் தலைவருக்கு கோதுமை மற்றும் அரிசியும் கொடுக்கும்படி நிர்பந்தித்தனர்.

இதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணை, பஞ்சாயத்தார் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து, கசையடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண், இம்மாதம் 11ம் தேதி போலீசில் புகார் அளித்தார். எப்.ஐ.ஆர்.,பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்துத் தலைவரையும், சம்சுதீனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக