ஞாயிறு, 14 நவம்பர், 2010

வெளியாருக்கு பிறந்த இடத்தில் காணி என்றால் கொழும்பில் பிறந்த எனக்கும் அங்கு வழங்குங்கள்-.நல்லிணக்க ஆணைக்குழுவிடம் எஸ்.தாமோதரராஜா கேள்வி!

வலிகாமம் வடக்கில் சொந்தக் காணிகளை உடைய மக்கள் தமது பகுதிகளில் குடியேற முடியாது 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழும் நிலையில் யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் உண்டெனக் கூறிக்கொண்டு அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களை நாவற்குழியில் எவ்வாறு குடியேற்றமுடியுமென வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.தாமோதரராஜா என்பவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொது அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வட்டுக்கோட்டை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிக்கையிலேயே எஸ்.தாமோதரராஜா இவ்வாறு தெரிவித்தார்.
ஆணைக்குழு முன் அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் வலிகாமம் வடக்கைச் சேர்ந்த மக்கள் கடந்த பல ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாகச் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.வலி. வடக்கில் பலபகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து உள்ளன.இவ்வாறான நிலையில் எம்மைச் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு அனுமதிக்கிறார்கள் இல்லை. அதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.ஆனால், யாழ்ப்பாணத்தில் தமக்கு காணி இருப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களைக் குடியேற்றுவதற்கு இரவோடிரவாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
சொந்த இடங்களில் சொந்த மக்களை குடியேற்றாமல் யாழ்ப்பாணத்தில் காணி இருப்பதாகக் கூறிக்கொண்டு அண்மையில் வந்தவர்களை எவ்வாறு குடியேற்ற முடியும்.இனங்களிடையே நாம் பாகுபாட்டைக் காட்டவில்லை. அரசாங்கம் தான் மக்களைப் பிரிக்க முயற்சிக்கின்றது.அத்துடன் யாழ்ப்பாணத்தில் தாம் பிறந்ததாகவும் தமக்கு இங்கு (யாழில்) காணி வழங்க வேண்டுமெனவும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் காணி இருப்பதாகக் கூறிக்கொண்டு வருகிறவர்கள் குடியேற்றப்படுகின்றனரெனில் கொழும்பில் பிறந்த எனக்கு கொழும்பில் காணி வழங்க வேண்டும்.அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட, காணாமல் போன ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்தும் ஊடகவியலாளர்கள் படுகொலை குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக