புதன், 24 நவம்பர், 2010

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும்.

- தி. ஸ்ரீதரன் - பொதுச்செயலாளர் - பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
பொருளாதார அபிவிருத்தியின் சிகரங்களை தொடுவதற்கான வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துள்ளார். விமான போக்குவரத்து, சமுத்திரம், மின்சாரம், வர்த்தகம், அறிவு ஆகிய ஐந்து துறைகளிலும் இலங்கை எதிர்காலத்தில் பிரகாசிப்பதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சமாதானம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த இலக்குகள் மகிழ்ச்சிகரமானவை. இலங்கையின் சகல இன மக்களுக்கும் தெம்பூட்டுபவை.
எனினும் இலங்கையின் இன சமூகங்களிடையே நிலவும் அரசியல் அதிகாரப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதனூடாகவே இந்த இலக்குகளை எய்த முடியும்.
உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன.
எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும்.
தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும்.
இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது.
இலங்கையில் 30 வருடமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போல் இனப்பபிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலும் ஜனாதிபதி அவர்கள் ஆற்றலுடன் செயற்பட முடியும் என நாம் நம்புகிறோம்.
தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா- ஈ.பி.ஆர்.எல்.எப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக