புதன், 24 நவம்பர், 2010

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல்

இராணுவம் எச்சரிக்கை
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் “மேஜர் சீலன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில பாடசாலை அதிபர்களையும் நம்ப வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் குறித்து மிகவும் விளிப்பாக இருக்குமாறும் இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ. ஏ. பி. மெதவல விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காணாமல் போனோர் 300 பேர் தன்னுடைய பாதுகாப்பில் இருப்பதாக கூறி அவர்களை விடுதலை செய்வதற்காக பணம் பறிக்க திட்டமிட்ட மூவர் கிளிநொச்சி காந்தபுரம் பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் இவர்கள் மோசடி முறையில் பணம் பறிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றும் “மேஜர் சீலன்” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு காணாமல் போன 2000 பேர் தன்னுடைய பொறுப்பில் இருப்பதாக கூறியதுடன் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு பணத்தை செலுத்தினால் இவர்களை விடுவிப்பதாக உறவினர்களிடமும் பெற்றோரிடமும் தெரிவித்ததாக தகவல் 2010-11-07 ம் திகதி 57 ஆம் பாதுகாப்பு படைத் தலைமையகதத்திற்கு கிடைத்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் அந்த பாடசாலை அதிபர்களுடன் இக் கும்பல் சம்பந்தமாக தொடர்பினை மேற்கொண்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸார் இந்த மூவரையும் உடனடியாக கைது செய்துள்ளனர். பின்பு பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டும் அதேபோல் தனியாகவும், கும்பலாகவும் இணைந்து மோசடிகளையும் கடத்தலையும் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மானிப்பாய், அராலிப்பளை, வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எல்லபன்மராதன்குளம், வவுனியா, மல்லாவி ஆகிய பிரதேசங்களிலும் புரிந்துள்ளதாக பதிவாகிவுள்ளது எனவும் பொலிஸார் இது சம்பந்தமாக கிடைத்த முறைப்பாடுகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறான மோசடி குற்றச் செயல்களை செய்வதற்கு எத்தனிக்கும் நபர்கள் சம்பந்தமாக கவனமாக இருப்பதுடன் இவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதாவது தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பாதுகாப்பு முகாம் தொலைபேசி இலக்கங்களான 0773952175, 024-2222567, 025-3898812 (வன்னி), 021-2229693 (யாழ்ப்பாணம்) மற்றும் 027-2259126 (கிழக்கு) உடனடியாக அறிவிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக