புதன், 24 நவம்பர், 2010
குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் கல்லூரி இளைஞர்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆதிலாபானு மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் கல்லூரி இளைஞர்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஒரு பெண் சடலத்தையும், அங்கிருந்து மூன்று கிலோ-மீட்டர் தொலைவில் இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் வாடிப்பட்டி போலீஸார் கடந்த 11-ம் தேதி கைப்பற்றினர்.
அடையாளம் தெரியாத நிலையில்,தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு இந்த சடலங்கள் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையம் மூலம், கொலை செய்யப்பட்டுக் கிடந்தது ஆதிலாபானு, அவரது மகள் ஹஜிராபானு, மகன் முகமது அஸ்லாம் எனத் தெரிய வந்தது. மூவரும் குடும்ப நண்பர் ஜெயக்குமார் என்பவரோடு கேஸ் சிலிண்டர் வாங்கச் சென்றபோது காணாமல் போயினர் என ஆதிலாபானுவின் தாயார் தெரிவிக்க, போலீஸார் ஜெயக்குமாரை அழைத்து வந்து விசாரிக்க மளமளவென கைதாகியிருக்கிறார்கள் கொலையாளிகள். ஆதிலாபானு முத்துசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.முத்துசாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் தலைவராக இருந்த சீனிக்கட்டியிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். சீனிக்கட்டியின் தங்கை மருமகன் கொலை செய்யப்பட, நேரில் பார்த்த சாட்சியான அகமது(முத்துசாமி)நீதிமன்றத்தில் பல்டி அடித்துள்ளார்.
இதனால் சீனிக்கட்டியின் தங்கை மகன் சாகுல்,அகமது மீது கடும் கோபம் கொண்டுள்ளார். அவர்களுக்குப் பயந்த அகமது, குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவுக்குச் சென்று, அங்கு ஆதிலாபானுவின் அண்ணன் நடத்திய ஹோட்டலில் வேலைக்கும் சேர்ந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக,மலேஷியாவில் அகமது வேலை பார்த்த ஹோட்டலுக்கு நேர் எதிராக சாகுல் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் மலேஷியாவில் வைத்து அகமதுவை சாகுல் கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுடன் ஊருக்கு வந்த ஆதிலாபானு,அகமதுவின் நெருங்கிய நண்பரான ஜெயக்குமாரிடம் தன் கணவர் தாக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்திருக்கிறார். கூடவே, ‘சாகுலையும் அதுபோல அடித்து கை, கால்களை உடைக்க வேண்டும்’ என ஆவேசப்பட்டிருக்கிறார். இதை பேச்சுவாக்கில் ஜெயக்குமார் தனது மைத்துனர் முனியசாமியிடம் தெரிவிக்க, அவர் சாகுலிடம் சொல்லியிருக்கிறார்.
டென்ஷனான சாகுல்,பணத்தைக் கொடுத்து முனியசாமியையும், ஜெயக்குமாரையும் சரிக்கட்டி ஆதிலாவையும்,குழந்தைகளையும் கொல்லத் திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார். கேஸ் சிலிண்டர் வாங்கித் தருகிறேன் என ஆதிலாவையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஜெயக்குமார் கிளம்பியிருக்கிறார்.வழியில் திட்டமிட்டபடி,சாகுலும் அவரது நண்பர்களும் வந்து ஜெயக்குமாரை அடிப்பது போல் நடித்து, ஆதிலாவையும் குழந்தைகளையும் காரில் கடத்தியிருக்கிறார்கள்.
வழியில் காரில் வைத்தே, மூவரையும் தலையணையால் அழுத்தி கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் சாகுலின் பாட்டி பக்கீரம்மாள் தோட்டத்தில் உடல்களைப் புதைத்துள்ளனர்.காணாமல் போனவர்களை போலீஸ் தேடுவதாக அறிந்ததும் பிணங்களை புதைத்த இடத்தில் இருந்து எடுத்து வாடிப்பட்டி அருகே வீசியுள்ளனர்.இதற்குப் பிறகு சாகுல் மலேஷியா கிளம்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சாகுலோடு சம்பந்தப்பட்டதாக கைதாகியுள்ள ஷேக்தகஜத், தமிமுல் அன்சாரி, ஷா நவாஸ், நாகூர் மீரான் ஆகிய நான்கு பேரும் இருபது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் அதில் இருவர் கல்லூரி மாணவர்கள் என்பதும்தான் இதில் அதிர்ச்சியான செய்தி.
‘‘சாகுல் மீது கொண்ட பாசத்தாலும், அவனது உபசரிப்பாலும், தங்களின் எதிர்காலம் வீணாகுமே என கவலைப்படாமல் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்’’ என போலீஸாரே வேதனைப்படுகின்றனர்.
கொலைக்குக் காரணமான சாகுலைப் பிடிக்க மலேஷிய போலீஸாரோடு தமிழக போலீஸார் தொடர்பு கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கொலைக்குச் சொல்லப்படும் காரணங்களும்,சாகுலின் பின்புலமும் இன்னமும் பரபரப்பு ரகம்.
செல்வாக்கோடு இருந்த சீனிக்கட்டி இறந்து விட, சாகுல் அவரைப்போல் உருவாக முயற்சித்திருக்கிறார். சாத்தான்குளத்தில் இருந்து ராமநாதபுரம் போவது போல் வாரத்திற்கு ஒருமுறை மலேஷியாவில் இருந்து ராமநாதபுரம் வந்து விடுவாராம். மலேஷியாவில் ஹோட்டல்,கடைகள் நடத்தி வருவதால் எப்போதும் கையில் பணம் புரளுமாம்.இந்தி சினிமா ஒன்றில் வேறு நடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு ஏக செல்வாக்காம்.
சாகுலின் ஸ்டைலான தோற்றம்,பணம் இவற்றால் அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர்கள் இருப்பார்கள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். இவர் சொன்னால் எதையும் செய்யுமளவுக்கு இளைஞர்கள் சாகுல் மேல் பைத்தியமாக இருந்திருக்கிறார்கள்.இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சாகுல் தனக்கு வேண்டாதவர்களை கொலை செய்ய கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கொலைகள் தொடர்பாக இன்னொரு செய்தியும் ஊருக்குள் உலா வருகிறது. முத்துசாமி அகமதுவாக மாறினாலும் கூட, தங்கள் ஊரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணை இன்னொரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்தது ஊர்க்காரர்களுக்குப் பிடிக்கவில்லையாம்.வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தால் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் கொலைதான் பரிசாகக் கிடைக்கும் என்பதை உணர்த்த இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.
இதை நம்பவைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணை,வேறு மதத்தைச் சேர்ந்தவர் காதலித்துள்ளார்.அந்தப் பெண்ணின் குடும்பத்தினரே பெண்ணை ‘கவுரவக்கொலை’ (?) செய்து விட்டனராம். இந்தச் சம்பவம் வெளிவராமல் ஊர்க்காரர்களால் பார்த்துக் கொண்ட கதை கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக