பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை புரிந்த பின்னணி பாடகர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
விழாவில், பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.விழாவில் பின்னணி பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா, ஹரிகரன், மனோ, உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா, மாணிக்க விநாயகம், டி.எம்.எஸ்.செல்வகுமார், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சித்ரா, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு பாடினார்கள்.
டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல்களை, சில பாடகர்கள் இணைந்து பாடியபோது, பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் தடுமாறினார்கள்.
அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த டி.எம்.சவுந்தரராஜன், புதிய பாடகர்களை கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது,
’’அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது’’ என்று பேசினார்.
உடனே பி.சுசீலா குறுக்கிட்டு, டி.எம்.சவுந்தரராஜனை சமாதானப்படுத்துவது போல் பேசினார். ’’உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள்’’என்றார்.
பி.சுசீலாவின் பேச்சில் சமாதானம் அடைந்த டி.எம்.சவுந்தரராஜன், ’’புது பாடகர்களிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக