புதன், 17 நவம்பர், 2010

கள் இயக்கத்தின் சார்பில் அசுவமேத யாகம்

ஈரோட்டில் வருகிற 1-ந் தேதி `கள்' இயக்கத்தின் சார்பில் அசுவமேத யாகம் நடத்தப்படுகிறது என்று கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறி உள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’கள் மது அல்ல. உணவின் ஒரு பகுதி என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சங்க காலத்தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. இவைகளை தமிழ்நாடு அரசு மதிக்காமல் கடந்த 23 ஆண்டுகளாக தடை விதித்து உள்ளது.`கள்' இறக்குவது என்பது அரசியல் சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமையை மீட்கும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு `கள்' இயக்கம் அரசியல் அமைப்பு சட்ட உரிமை மீட்பு அறப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழக அரசும் இந்த 5 ஆண்டு கால அறப்போராட்டத்தில் உள்ள நியாயத்தை மதித்து உணர்ந்து செயல்பட்டதாகவும் தெரியவில்லை.
அரசின் தவறான அணுகுமுறையை கண்டிக்கும் விதத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் ஒரு அசுவமேத யாகத்தை ஈரோடு நகரில் நடத்துவது என்று கள் இயக்கம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி வருகிற (டிசம்பர்) 1-ந் தேதி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையில் இருந்து யாகம் தொடங்கி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் முடிவடைகிறது.
இந்த யாகத்தின் பின்னால், பல்வேறு வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்திய வண்ணம் 40 பேர் மட்டுமே செல்வார்கள். சட்டம் ஒழுங்கு கெடாத வகையில், போலீசாருக்கு ஒத்துழைக்கும் விதத்தில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற அடிப்படையில் யாகம் நடைபெறும்’’என்று கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக