சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும்.
1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது கட்டுமானத்துறை.
நவீனகால பொருளாதாரக் கொள்கைப்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு பெருகியது. வீடுகள், மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்தது.
1995-ல் தொடங்கிய பொருளாதார ஓட்டம், 2000-க்குப் பிறகு உச்சநிலையை அடைந்தது. வழக்கம்போல மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, நுகர்வுச் சந்தையும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசியப் புலிகள் என்கிற பெயரைப் போன்று "செல்டிக் புலி' என்கிற பெயரை தமது பொருளாதார ஓட்டத்தைப் பிரதிபலிப்பதற்காக அயர்லாந்து வைத்துக் கொண்டது.
ஆனால், 2007-க்குப் பிறகு சரிவு தொடங்கியது. அமெரிக்காவில் உலகப் பொருளாதார மந்தத்தின் அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே அயர்லாந்தின் பொருளாதார மகிழ்ச்சிக் காலம் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவை ஏமாற்றிய அதே கட்டுமானத்துறை அயர்லாந்தையும் ஏமாற்றியது. வீடுகள், மனைகளின் விலைகள் சரிந்தன. கடன் கொடுத்த முக்கியமான 9 வங்கிகள் திவாலாகின. உதவி கேட்டு அரசிடம் கையேந்தின. அவ்வளவுதான் செல்டிக் புலியின் பாய்ச்சல் நின்று போனது.
இப்போது நிலைமை இன்னும் மோசம். கடன் பத்திரங்களுக்கு உரிய வட்டியையும் அசலையும் அரசால் திருப்பித் தர முடியுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. நாளுக்குநாள் கடன்பத்திரங்களின் விலை சரிந்து, அதற்கான வட்டிவிகிதம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க வேண்டுமென்றால் வெளிநாடுகளில் கையேந்துவதைத் தவிர வேறு வழியேயில்லை.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பியக் கூட்டமைப்பிலும், 16 நாடுகள் அடங்கிய "யூரோயூனியன்' எனப்படும் யூரோவை நாணயமாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பிலும் அயர்லாந்து அங்கமாக இருக்கிறது.
யூரோயூனியன் உறுப்பினர் என்பதால் நினைத்த மாத்திரத்தில் அயர்லாந்தால் தன்னிச்சையாக பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நெருக்கடியைச் சமாளிக்க முடியாது. யூரோயூனியன் பொருளாதாரக் கொள்கைகளுடன் இசைந்துதான் செயல்பட முடியும்.
அதேபோல், யூரோழ்ஸப்ன் நாடுகளும், அதில் அங்கம் வகிக்காத பிற ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும் நமக்கென்ன என்று ஒதுங்கியும் இருந்துவிட முடியாது. ஒரு நாட்டை பாதிக்கும் பொருளாதாரப் பிரச்னைகளை ஒரே நாணயத்தையும் இணையான பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றும் அடுத்தடுத்த நாடுகளையும் பாதிக்கும் என்பதால், அயர்லாந்தை நெருக்கடியிலிருந்து மீட்கவே மற்ற நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு கிரேக்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திவாலாகும் தருணத்தில் இருந்தபோது, ஐரோப்பிய கூட்டமைப்பும், யூரோயூனியன்நாடுகளும் உதவிக்கு வந்தன. பன்னாட்டு நிதியத்திடமும் உதவி கோரப்பட்டது. நெருக்கடியிலிருந்து கிரேக்கம் முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்று கருதப்படும் நிலையில், அடுத்ததாக அயர்லாந்து அதே நிலைக்கு வந்திருக்கிறது.
கிரேக்கம் வீழ்ந்தபோதே, அடுத்ததாக பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நாடுகளை மீட்பதற்காக ஐஎம்எஃப் நிதியுதவியுடன் ஐரோப்பிய நிதிநிலைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது. ஐரோப்பாவில் கடைநிலை பொருளாதாரத்தில் இருக்கும் அயர்லாந்து போன்ற நாடுகளைக் காப்பாற்றும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. யூரோயூனியன் இல்லாத பிரிட்டன் கூட உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி பெருமளவு நிதியுதவி செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அயர்லாந்துதான் உதவி பெறும் மனநிலையில் இல்லை. இந்த நெருக்கடியை நாங்களே சமாளித்துக் கொள்கிறோம் என்று அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. சுயமரியாதையைக் காப்பாற்றுவதே அயர்லாந்துக்கு முதல் குறிக்கோள் என்பதுதான் அவர்களது நிலை.
நிதியுதவியை ஏற்றுக்கொண்டால், ஆளும் கூட்டணி மீது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக்கூடும் என்பது போன்ற அரசியல் காரணங்களும் இதற்குப் பின்னணியில் இருக்கின்றன. இதனால் நிதி உதவி செய்ய விரும்பும் அமைப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன. அதேநேரத்தில், பிற நாடுகளின் உதவியில்லாமல் அயர்லாந்தால் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஒருவேளை உதவியே வேண்டாம் என்பதில் அயர்லாந்து உறுதியாக இருந்துவிட்டால், அடுத்த ஆண்டில் சில லட்சம் கோடி வரைக்கும் பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். வரி வருவாயை பலமடங்கு உயர்த்த வேண்டும். ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான அறிவிப்புகளை வரும் 7-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். அந்த வகையில், அயர்லாந்து வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வரி விதிப்பு பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும்.
ஏற்கெனவே, நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வோர் அதிகரித்திருக்கும் நிலையில், கடுமையான வரிவிதிப்பு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
அயர்லாந்துடன் பிரச்னை முடிந்துவிடவில்லை. அடுத்ததாக போர்ச்சுகல் இருக்கிறது. அயர்லாந்தில் ஏற்பட்டிருக்கும் அதே நெருக்கடி அங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி நெருக்கடியில் சிக்கும் யூரோயூனியனில் உள்ள நாடுகள் யூரோ நாணயத்தைக் கைவிட்டு சொந்த நாணயத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால் பிரச்னையிலிருந்து கொஞ்சம் மீள முடியும். அப்படி ஒவ்வொரு நாடும் யூரோவைத் துறந்து வெளியேறினால், டாலருக்கு எதிரான கரன்சி யுத்தத்தில் யூரோ தோற்றுப் போகும். ஏஞ்சலா மெர்கல் கூறுவதைப் போல, யூரோவுக்குத் தோல்வி என்றால் அது ஐரோப்பாவுக்கே தோல்விதான்!
-தினமணி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக