செவ்வாய், 2 நவம்பர், 2010

சொரணைக் கெட்ட தமிழன்... - தங்கர் பச்சான் தாக்கு



       மிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.



தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது என்று வார்த்தைகளால் வெடித்தார் தங்கர்.ஒரு திரைப்பட கலைஞன் என்பதை மறந்து, ஒரு எழுத்தாளன் என்பதை மறந்து ஒரு தமிழனாக ஒரு தமிழக விவசாயி மனநிலையில் இருந்து என் தமிழ் சொந்தங்களிடம் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று பேசத் துவங்கினார் தங்கர் பச்சான்.  

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று முடிவெடுத்திருக்கிறது கர்நாடகம். சமீபமாக கர்நாடக அரசின் லட்சணத்தை அனைவரும் பார்த்தோம். அந்த அரசியல்வாதிகளின் சண்டைகளைப் பார்த்து இந்த நாடே பரிகாசம் செய்தது. 

ஆனால் இப்போது காவிரி நீரைப் பற்றி அங்கே பேச்சு வார்த்தை நடைபெறும்போது அங்கே இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று தங்கள் கட்சி, ஜாதி, மதம் மறந்து ஓரணியில் முடிவெடுத்திருக்கிறார்கள். 

இப்போது காவிரி நீரை தங்கள் வாழ்வாக நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு என்ன வழி என்பதே கேள்வி. இதற்காக நாம் போராட வேண்டும் என்பதே பதிலாக இருக்க முடியும். ஆனால் இனிமேலும் இங்கே போராட்டம் நடத்தி பலன் இல்லை. இன்றைய நாளில் இலவசங்களை நம்பியபடி தான் தமிழன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான். அவனை சொல்லி குற்றமில்லை. அவனை அப்படி பழக்கப் படுத்திவிட்டார்கள். என்றைக்காவது ஒரு நாள் இந்த இலவசங்கள் நிறுத்தப்பட்ட பின்பு, தமிழன் சோம்பேறியாகி நடுத்தெருவில் பிச்சைக்காரர்களாய் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 

யாரோ சாமியாருடன் ஒரு நடிகை படுத்துக்கிடந்ததை பரபரப்பாக பேசிக்கொண்டார்கள். ஒரு நடிகன் ஒரு நடிகையை திருமணம் செய்துகொள்வது பற்றி தான் இங்கே விவாதங்கள் நடக்கிறது. ஆனால் தன் உரிமைகள் மறுக்கப்படும் போது தமிழன் சொரணைக் கெட்டவனாய் இருக்கிறான். தமிழனுக்கு தண்ணீர் இல்லை என்றால் குரல் கொடுக்க ஆளில்லை. 

இந்த அரசியல் கட்சிகளாவது ஒன்றிணைந்து இருக்க வேண்டும். மக்கள் இவ்வாறு பிரிந்துகிடப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி. யார் பெரிய ஆள் என்பதற்காக போட்டி போட்டு கூட்டம் திரட்டுகிறார்கள். தமிழனுக்கு ஒரு பாதிப்பு என்றால் அவர்கள் நம்பியிருப்பது அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும்தான். அவர்கள்தான் நமது உரிமைகளை மீட்டுத்தர வேண்டும். விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு யாருக்குமே இல்லாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். 
இன்றைக்கு விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை. தண்ணீரே இல்லை என்ற நிலையில் விவசாயம் எப்படி நடக்கும். இந்தியாவின் எதிர்காலமே விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்தவர்களாய்தான் இருக்கிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தந்தால் தமிழ்நாட்டில் இன்னும் மூன்று மாதத்தில் சாகுபடி நடக்கும்.

எல்லோரும் உழவனின் உழைப்பில் தான் சாப்பிடுகிறோம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதனால் அந்த வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழகத்தின் முக்கிய கட்சி தலைவர்கள் இந்த காவிரி பிரச்சனையை தீர்க்க வழி செய்ய வேண்டும்.

அந்த வகையில் காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், ஆகிய அனைவரும் தலைமைச் செயலகத்தில் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். அதில் அனைவரும் ஒத்த கருத்துக்களுடன் நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். 

பின்னர் மேற்கண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். விவசாயிகள் வாழ்வு நலமாக இருக்கும்... என்று அவர் பேசியது இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையாக இது இருக்கும் என்றே தோன்றியது. 

மேலும் அவர் இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ஒருவேளை இது வெறும் ஆசையாகவே இருந்து விட்டால், தமிழக இளைஞர்களே அரசியல் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். நடிகர்களின் கட்டவுட்டிற்கு பால் ஊற்றி அதை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தது போதும். உங்கள் தலைகள் மத்திய அரசின் கால்களில் அடமானம் வைத்துத்தான் இங்கே அதிகாரங்கள் பிறப்பிக்கபடுகிறது. தமிழகத்தின் புதிய அரசியலை தேடுவதற்கு புறப்படுங்கள் என்று 
உணர்ச்சிவசப்பட்டார் தங்கர். 

ரொம்ப காலத்துக்கு முன்பாக 'அனைத்து தேசிய நதிகளையும் இணைக்க வேண்டும் அதற்கு நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என்று ரஜினி சொன்னது இன்னும் சினிமா பஞ்ச் டயலாக்காகவே இருக்கிறது. இப்போது தங்கர்ப்பச்சான் இப்படி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக