செவ்வாய், 2 நவம்பர், 2010

சென்னையில் அதிகரித்து வரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள்-பீதியில் பெற்றோர்கள்

தமிழகத்தில் பணத்திற்காக குழந்தை [^] கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களிடையே பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள், குறிப்பாக பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவையில் இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தி, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விதம் அத்தனை பெற்றோர்களின் வயிற்றிலும் நெருப்பை அள்ளிப் போட்டுள்ளது. இப்படி ஒரு சாவா இந்த அப்பாவிப் பிஞ்சுகளுக்கு என்று அத்தனை பேரும் குமுறிக் கொண்டுள்ளனர்.

இருவரையும் கடத்திச் சென்றதோடு மட்டுமல்லாமல், அந்த சிறுமியை கொடூரமாக கற்பழித்த கயவர்களின் செயல் அத்தனை பெற்றோர்களையும் நொறுங்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் 14 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்களை நிலை குலைய வைத்துள்ளது.

இப்படிப்பட்ட கடத்தல் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. சில வாரங்களுக்கு முன்பு கொடுங்கையூரில் ஒரு சிறுவன் கடத்தப்பட்ட பின்னர் மீட்கப்பட்டான். அதேபோல கோவையிலும் ஒரு குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்டது.

சமீப காலமாக இதுபோல குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. வசதி படைத்த குழந்தைகளைக் கடத்திச் சென்று பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டகாசமும், நடவடிக்கையும் அதிகரித்து வருவது பெற்றோர்களை பதைபதைக்கச் செய்கிறது.

இதுகுறித்து சில பெற்றோர்கள் கூறுகையில்,காலையில் போய் குழந்தையை பள்ளியில் விடுவது வரைதான் அவர்களது பாதுகாப்பு [^] உறுதியாக உள்ளது. அதன் பின்னர் மாலையில் வீடு திரும்பும் வரை எங்களது பதைபதைப்பை விவரிக்க வார்த்தையே இல்லை.

ஆட்டோக்கள், டாக்சிகள் என வாகனங்களில் குழந்தையை அனுப்பி வைப்போரின் நிலை மிகவும் சோகமானது. பிள்ளைகள் பத்திரமாக வரும் வரை அவர்களது பதட்டத்தை விளக்க முடியாது.

நாமே கூட்டி் சென்று மீண்டும் கூட்டி வருவதே சிறந்தது என்று எண்ண வைக்கிறது தற்போதைய நாட்டு நடப்பு என்றார்கள்.

பள்ளிகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் [^] கடத்தல் அதிகரித்து வருகிறது. 2007ம் ஆண்டு 1097 பேரும், 2008ல் 1155 பேரும், கடந்த ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க மிகத் தீவிரமான, கடுமையான நடவடிக்கைகளை காவல்துறையும், அரசும் எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக