செவ்வாய், 2 நவம்பர், 2010

சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது எப்படி-சிறுவனைக் கடத்தியவர்கள் எங்கே? பரபரப்புத்

சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்திவாசன் மீண்டது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிறுவன் மீட்கப்பட்ட விவகாரத்தில் மொத்தம் 3 விதமான கோணங்களில் தகவல்கள் வருகின்றன.

முதல் தகவல்

நேற்று இரவு வாக்கில் கீர்த்திவாசனின் தந்தை ரமேஷுக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையிலான பேரம் முடிந்துள்ளது. இதில் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை கொடுப்பதாக ரமேஷ் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. போலீஸ் ஆலோசனையின் பேரில் இந்தப் பணத்தைத் தருவதாக ரமேஷ் ஒப்புக் கொண்டாராம்.

இதையடுத்து பணத்தை ஒரு காரில் கொண்டு சென்றுள்ளார் ரமேஷ். கடத்தல்காரர்கள் கூறிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணத்தை காரில் வைத்து விட்டு காத்திருந்தார் ரமேஷ்.

சிறிது நேரத்தில் கடத்தல்காரர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியதாக தெரிகிறது.

அதற்கடுத்த சிறிது நேரத்தில் அண்ணா நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறுவனை விட்டு விட்டு தப்பியுள்ளனர் கடத்தல்காரர்கள்.

2வது தகவல்

பணம் வைப்பது வரை மேற்கூறியபடி நடந்துள்ளதாக தெரிகிறது. சிறுவனை அண்ணா நகரில் ஒரு குறிப்பிட்ட வீட்டுக்கு முன்பாக காரில் கொண்டு வந்து இறக்கியுள்ளனர் கடத்தல்காரர்கள். அப்போது கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர், துணை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் 10 ஆயுதம் தாங்கிய போலீஸ் படை கடத்தல்காரர்களை வளைத்துப் பிடித்ததாக கூறப்படுகிறது.

சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு கடத்தல்காரர்களுடன் போலீஸ் படை அங்கிருந்து பறந்து விட்டதாக அந்தத் தகவல் கூறுகிறது.

3வது தகவல்

சிறுவனை அண்ணா நகரில் விட்ட கடத்தல் கும்பல், போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி விட்டதாக இந்த 3வது தகவல் கூறுகிறது.

தற்போது நாலாபுறமும் போலீஸார், கடத்தல் கும்பலை படு தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடத்தல்காரர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே கடத்தல்காரர்களைப் பிடிக்கும்போது என்கவுன்டர் நடப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் இந்த கடத்தல் நாடகம் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிறுவன் மீண்ட விதமும், கடத்தல்காரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரமும் பெரும் மர்மமாக உள்ளது. ஆனால் இதுவரை சென்னை காவல்துறை ஆணையர் கடத்தல் மற்றும் சிறுவன் மீட்பு குறித்து தகவல் ஏதும் தராமல் உள்ளதால் சஸ்பென்ஸ் கூடிக் கொண்டே போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக