செவ்வாய், 9 நவம்பர், 2010

மைனா - சிறப்பு விமர்சனம்



 

           இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும்,  இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா. 

மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது. 

தீபாவளிக்கு முன் தினம்...  போலிஸ் அதிகாரிகள் பாஸ்கர், ராமைய்யா இருவரும் தப்பி ஓடிய கைதி சுருளியை தேடி தேனி அருகில் மூணாறு மலை அடிவாரத்தில் இருக்கும் குரங்கணி மலைக் கிராமத்துக்கு போகிறார்கள். தப்பி ஓடிய சுருளி யாரு?

  

சுருளி சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் ரவுடித்தனம் செய்கிறார். தன் அம்மாவுடன் மைனா நடுத்தெருவில் அழுதுகொண்டிருக்க, அவர்களை கூட்டி வந்து அடைக்கலம் கொடுக்கிறார். மைனாவும் சுருளியும் காதல் பறவைகளாய் குரங்கணி மலையில் வளம் வருகிறார்கள். மைனாவுக்கு கல்யாண வயசு வருகிறது. மைனாவும் சுருளியும் காதலிக்கிற விஷயம் மைனாவின் அம்மாவிற்கு தெரியவர, மைனாவிற்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறார்.சுருளியும் பணியாரக் கடைக்காரி மைனாவின் அம்மாவும் முடியைப்பிடித்து சண்டைப் போடும் அளவற்கு பெரிய ரகளை நடக்கிறது. 

இந்தப் பிரச்சனையில் சுருளி சிறையில் அடைக்கப்படுகிறார். மைனாவிற்கு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க, செய்தி அறிந்ததும் சுருளி சிறையில் இருந்து தப்பி வருகிறார். தலை தீபாவளி கூட கொண்டாடாத கடுப்பில் ஜெயில் அதிகாரி பாஸ்கரும், ராமையாவும் சுருளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குரங்கணி கிராமத்திற்கு போக மலை ஏறுகிறார்கள். ரத்திரியாகிவிட மலையில் வழி தெரியாமல் அலைந்து திரிந்து பல சிரமங்களுடன் ஒரு வழியாக அடுத்த நாள் காலை சுருளியை கைபற்றுகிறது போலிஸ். சுருளி போலிசுடன் வரும்போது மைனாவும் சுருளியுடன் வந்துவிடுகிறார்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் சுருளி ஜெயிலுக்கு போய்விடுவார், அப்போ மைனா? இந்த இடத்தில் இடைவேளை...

 

மீண்டும் மலையில் பாதை தெரியாமல் போய்விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் பாஸ்கரையும் ராமையாவையும் பஸ் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சுருளி. உயிரைக் காப்பாற்றிய அக்யூஸ்ட் சுருளி போலிசுக்கு கடவுளாக தெரிகிறார். சுருளி விடுதலையானதும் தானே கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறார் போலிஸ் பாஸ்கர். நிறைவான சந்தோஷத்தோடு தேனி வந்தடைய... ஒரு கொடுமையான க்ளைமாக்ஸ்! நீங்கள் எதிர்பார்ப்பது எதுவுவே கிளைமாக்ஸாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு சஸ்பென்ஸ்.

படம் பார்த்த ராத்திரி தூங்கவிடாத க்ளைமாக்ஸ்களில் இதுவும் ஒன்று. படத்தின் ஒரு காட்சிக் கூட காரணம் இல்லாமல் காட்டப் படவில்லை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரு காரணத்தோடவே காட்டப்படுகிறது.

 

சுருளியாக வரும் வித்தார்த், மைனாவாக வரும் அமலா பால் என எல்லோரும் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருகிறார்கள். ராமைய்யாவாக வரும் தம்பி ராமைய்யாவிற்கு ஒரு தனி பாராட்டு. காமெடி, வில்லத்தனம், கண்ணீர் என எல்லாம் கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருகிறார். போலிசாக வரும் சேது, புதுமுகமாக இருந்தாலும் நூறு படத்தில் நடித்தது மாதிரி நடிப்பில் அப்படி ஒரு முழுமை. 
படத்தின் முக்கியமான ஒருவர்களில் டி.இமான் ஒருவர். டி.இமான் இசையமைத்த படங்களில் தி பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு தூள். இன்று முதல் முக்கியமான இசையமைப்பாளர்கள் பட்டியலில் டி.இமானும் ஒருவர். இவரின் மைனா இசை எல்லாருடைய நெஞ்சுக்குள்ள வம்புபண்ண போகுது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மலையில் இருந்து பஸ் விழும் காட்சி! படத்தின் உச்சக்கட்ட காட்சி இதுதான். படத்தைப் பார்க்கும் நாமே மலையில் தொங்கும் ஒரு உணர்வு. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இந்த ‘மைனா’ உலகத்தை காண்பித்ததற்காக ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும். 

சமீபமாய் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொந்தப் படம் எடுத்தால் தான் நல்ல படைப்புகள் உருவாகும் நிலை உள்ளது. ஆனாலும் இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களை மறந்துவிட முடியாது.  மைனாவை இன்னும் உயரப் பறக்கச் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.ஜி.எஸ். சகோதரர்களுக்கு ஒரு சல்யூட். 

இனி வரும் படங்களிலும் தன் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பிரபு சாலமோனுக்கு வாழ்த்துகள். 

மைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக