சனி, 27 நவம்பர், 2010

வடக்கில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளில் 1551 பேர் மாணவர்களாவர் : அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!


யுத்தத்தினால் வடக்கில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். அவர்களில் 1551 பேர் பாடசாலை மாணவர்கள் என அரசாங்கம் தெரிவித்தது.பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு ஆற்றுப்படுத்திய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தில் அனுரகுமார திஸாநாயக்க மீள்குடியேற்ற அமைச்சரிடம் வடக்கு பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை, இப்பிள்ளைகளில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்காகவும் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் என்ன? போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு மன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலின் பிரகாரம் யுத்தம் காரணமாக வடக்கில் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களில் 1608 பேர் பாடசாலை மாணவர்கள் எனினும் 1551 பேரே பாடசாலை செல்கின்றனர். இவர்களுக்காக அவுஸ்திரேலிய உதவி வழங்கும் அமைப்புகள் நிதி உதவி வழங்கி வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, சப்பாத்து, தைத்த ஆடை என்பன வழங்கப்படுகின்றன. மாலை வேளைகளில் விசேட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொழிற் பயிற்சி வழங்க 17 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுயதொழில் அறிவை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக