சனி, 27 நவம்பர், 2010

Subramaniam Swamy: ஒரே ஒரு ஸீட்தானே கேட்டேன். தந்தீங்களா? சாதியைச் சொல்லித் திட்டுறேள்

சுவாமிக்கு தூது விட்டு...

''டெல்லியில் வலம் வந்த சுப்பிரமணியன் சுவாமியை, தமிழக அரசியல் வாரிசுப் பிரமுகர் ஒருவர் சந்தித்து நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். 'நீங்கள் கையில் எடுத்து இருக்கும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கெஞ்சும் குரலில் அவர் கேட்டதுதான் தாமதம், பொரிந்து தள்ளி விட்டாராம் சுவாமி!''



''தன்னை ஆ.ராசா சந்தித்துப் பேசியதைத் தான் ஜூ.வி. நிருபரிடம் பேட்டியாகக் கொடுத்திருந்தாரே சுவாமி. அதன் அடுத்த எபிஸோடா இது?''

''எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நினைப்பவர்கள், யாரையும் சந்திப் பார்கள் அல்லவா? அந்த வாரிசுப் பிரமுகர் கேட்டதும் கொந்தளித்த சுவாமி, 'இப்பத் தான் இந்த சுவாமியை உங்கள் கண்ணுக்குத் தெரியுதா? சுவாமின்னா யாருன்னு கேட்ட வாளாச்சே நீங்க? உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கவே பிடிக்காதே? 95-ம் வருஷத்துல உங்களுக்கு எவ்வளவோ பெரிய ஹெல்ப் பண்ணினேன். கைம்மாறா நான் என்ன கேட்டேன். ஒரே ஒரு ஸீட்தானே கேட்டேன். தந்தீங்களா? அதுக்கு முன்னாடி இருந்தே என்னை நீங்க மதிச்சதில்லை. ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்துற நெருக்கடி கொடுத்த பிறகும், உங்களுக்கு என்னோட மரியாதை எல்லாம் தெரியலே இல்லையா? கேட்டா... என்னோட சாதியைச் சொல்லித் திட்டுறேள். நான் எடுத்த விஷயத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? நான் பொறந்த சாதியில எத்தனை பேரை எதிர்த்து நான் சண்டை போட்டிருக்கேன்னு பட்டியல் தரட்டுமா?’ என்று கேட்டு நிறுத்தினாராம் சுவாமி!''

''என்ன சொன்னாராம் அந்தப் பிரமுகர்?''

''அமைதியாக உட்கார்ந்திருந்தாராம். சுவாமிதான் யாருடைய பதிலையும் எதிர் பாராமல் ஊசிப் பட்டாசாக வெடிக்கும் ரகம் ஆச்சே! இன்னும் என்னென்னவோ பழைய கதைகளை எல்லாம் சொல்லித் தீர்த்திருக்கிறார். கடைசியாக, 'உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றோம்’ என்று சொல்லப்பட்டதாம். 'எனக்கா? நான் பிச்சை எடுத்துக் கட்சி நடத்துறவன்... மண் வித்துக் கட்சி நடத்துறவன் இல்லே. என்னை ஹார்வர்டு யுனிவர்சிட்டி கிளாஸ் எடுக்க எப்ப வர்றேள்... எப்ப வர்றேள்னு கேட்டுட்டு இருக்கு. மரியாதையாப் போய் உட்கார்ந்து ராஜாவா வாழலாம். அதை விட்டுட்டு இங்க ஏன் இருந்து நான் கஷ்டப்படுறேன்’ என்று சொன்னாராம். கடைசியில் இன்னும் கறார் வார்த்தைகளை சுவாமி உதிர்க்க... சந்திப்பு எந்த முடிவும் இல்லாமல் முறிந்துபோனதாம்!''

''அவரை சந்தித்துப் பேசியதே தைரியம்தானே?''

''இந்தப் பிரச்னை எப்படி முடியும்? எப்போது அணையும் என்பதுதான் கருணாநிதியின் கவலையாக இருக்கிறது. டெல்லி பாலிடிக்ஸ் தன்னை இந்த அளவுக்குப் போட்டுத் தாக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையாம் கருணாநிதி. தன்னை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்

டி.ஆர்.பாலுவிடம் மணிக்கணக்காகச் சில விஷயங்களைச் சொல்லி வருத்தப்பட்டாராம். இறுதியாக, 'டெல்லியில் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கு. எதையுமே எனக்கு சொல்லலையே?’ என்று கருணாநிதி சொல்ல, 'எனக்குத் தெரியாமத்தான் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருச்சே. எனக்கே மந்திரி பதவி கிடைக்காமப் பண்ணிட்டாங்களே’ என்று அவர் தன்னுடைய வருத்தங்களைச் சொல்ல... 'டெல்லியில் லாபி பண்ண நமக்கு சாமர்த்தியம் பத்தலைய்யா! அதனால்தான் இவ்வளவு சிரமப்பட்டோம்!’ என்ற கருணாநிதி, 'ஸ்டாலினிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கேன். எதுவா இருந்தாலும் அவர் சொல்றதைக் கேட்டுட்டுச் செய்’ என்று உத்தரவு போட்டாராம். கடந்த சில ஆண்டுகளாக, 'தான் உண்டு... தன்னுடைய இலாகா உண்டு’ என்று இருக்கும் தயாநிதி மாறன் வசம் இனி டெல்லி மீடியேட் வேலைகளை ஒப்படைக்க கருணாநிதி நினைத்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு அழகிரி, ஸ்டாலின் இருவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் ஒரு தகவல்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக