சனி, 27 நவம்பர், 2010

இந்தியா அழுத்தம்! தீர்வுக்கு ஒழுங்கமைவான பேச்சை தொடங்குமாறு

யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காண ஒழுங்கமைவான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இலங்கைக்கு இந்தியா நேற்று வெள்ளிக்கிழமை அழுத்தம் கொடுத்திருக்கும் அதேநேரத்தில் சிறுபான்மைத் தமிழருக்கு தீர்வுப் பொதியை வழங்கும் விவகாரம் தனது ராடாரிலிருந்து தூரவிலத்தி வைக்கப்படவில்லை எனவும் பார்வைக்கெட்டிய தூரத்திலேயே அந்த விடயம் இருப்பதாகவும் இலங்கை பதிலுக்கு உறுதியளித்திருக்கிறது.

இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது சந்திப்பிற்கு இணைத்தலைமைத்துவத்தை வகித்து வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் ஆணைக்குழுக் கூட்டம் முடிவடைந்த பின் இருவரும் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த கருத்துகளை முன்வைத்தனர்.
கடந்த வருடம் மே மாதம் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதானது அரசியல் இணக்கப்பாடு மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக தீர்க்கப்படாமல் இருக்கும் சகல விடயங்களுக்கும் பரிகாரம் காண்பதற்குவரலாற்றுபூர்வமான வாய்ப்பை அளித்திருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.புரிந்துணர்வு மற்றும் பரஸ்பரம் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக இவற்றை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை கிருஷ்ணா வெளியிட்டார். இந்த விடயத்தை நிறைவேற்றுவதற்கு கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தை பொறிமுறையானது விரைவில் ஆரம்பிக்கப்படுமென்பது எமது நம்பிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வருடத்தின் இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் நோக்கமென எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ள அதேசமயம், சுமார் 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இப்போதும் முகாம்களில் இருப்பதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் இப்போதும் தமது காலில் நிற்பதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.இதேவேளை, தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கவலை தொடர்பாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா தமிழர்களைக் கொண்ட மாநிலத்திற்கு அவர் பிரதிநிதித்துவத்தை வகிக்கின்றார். இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசு உணர்வுபூர்வமானதாக இருக்குமென்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கு முன்பாக கிருஷ்ணா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை சந்தித்தார். நாங்கள் சில கருத்துகளை பறிமாறிக் கொண்டோம் என்று ஜனாதிபதியுடனான சந்திப்புப் பற்றி அவர் குறிப்பிட்டார். அர்த்தபுஷ்டியுடனான அதிகாரத் தீர்வுப் பொதியானது இலங்கையில் இறுதியானதும் நிலையானதுமான சமாதானத்தை உருவாக்க உதவுமென்று அவர் குறிப்பிட்டதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.இதேவேளை, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சிறுபான்மைத் தமிழருக்காக தீர்வுப்பொதியானது இலங்கையின் ராடரிலிருந்து விலகியிருக்கவில்லை என்று கூறியுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கண்ணிவெடி அகற்றல் மற்றும் புனர்வாழ்வு போன்ற முக்கியமான விடயங்களுக்கு அரசாங்கம் தீர்வைக் கண்டுகொண்டிருப்பதாக பீரிஸ் கூறினார்.
அதேசமயம், இந்த விடயம் குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார் கிருஷ்ணா இதேவேøளை தொடர்ந்து தெரிவிக்கையில்;இந்தியஇலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது அமர்வின் போது பல்வேறுபட்ட பயனுள்ள விடயங்கள் குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் கலந்துரையாடியுள்ளேன்.அதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்து தமிழக முதல்வர் எம்.கருணாநிதி கூறியுள்ள விடயங்களையும் கவனத்தில்கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும்.
இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு தொகையினர் முகாம்களிலேயே உள்ளனர்.மக்களை மீளக்குடியேற்றுவதில் சில பிரச்சினைகள் உண்டு.ஆனாலும் மீள்குடியேற்றம் குறித்து இலங்கை அரசு அக்கறையுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்படவேண்டும்.இந்தியஇலங்கை உறவின் ஆழத்தினை வெளிப்படுத்தும் முகமாக வடக்கு,கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, நாளை (இன்று)யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 500 உழவியந்திரங்கள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.இந்நிலையில் இலங்கையின் தென்பகுதியில் சீன உதவியுடனான துறைமுகம் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்தியத் துணைத் தூதரகம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையுடன் சீனா உறவைப் பேணுவதில் இந்தியாவிற்கு பாதிப்பு உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணா;
வேறு நாடுகளுடன் உறவுகளை பேணுவது இலங்கையின் சொந்த விடயம்.அதில் நாம் தலையிடப்போவதில்லை.சீனாவுடன் இலங்கை பாரம்பரியமாக உறவினைப் பேணி வந்திருக்கலாம்.இந்நிலையில் சீனாவுடன் இலங்கை உறவைப் பேணுவதால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.இலங்கை வேறு நாடுகளுடன் உறவைப் பேணுவதற்கு நாம் மதிப்பளிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண இந்தியா வலியுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணா;
இலங்கையின் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குரிய அரிய சந்தர்ப்பம் இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ளது.
பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள அரசு செயற்படுமென இந்தியா நம்புகின்றதெனத் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கிருஷ்ணா தொடர்ந்து தெரிவிக்கையில்;
கல்வி,கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அபிவிருத்தி ஒத்துழைப்பு,
சேவைகள் மற்றும் முதலீடு,வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
வடபகுதியின் ரயில் பாதை புனரமைப்பிற்கான 416 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்த உடன்படிக்கை இன்று (நேற்று) கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த ரயில்பாதை புனரமைப்புப் பணிகள் நாளை(இன்று) ஆரம்பமாகின்றது.
அதேவேளை, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இதேவேளை பொருளாதார தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையேயான தந்திரோபாய உறவில் அம்பாந்தோட்டையிலும் யாழ்ப்பாணத்திலும் இரு துணைத் தூதரங்களை ஆரம்பித்தமை முக்கிய மைல்கல்லாகும்.
அதேவேளை, கொழும்பு தூத்துக்குடி,தலைமன்னார்இராமேஸ்வரம் கப்பல்சேவையை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதுகுறித்த உடன்படிக்கை பூரணமடைந்துள்ளது.
அதேவேளை, கடந்த வருடம் மே யில் நிறைவடைந்த யுத்தமானது மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த சகல பிரச்சினைகளையும் புரிந்துணர்வுடனும் பரஸ்பர வசதிகளுடனும் தீர்க்கவேண்டிய வரலாற்று சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.
அதேவேளை, சகல இடம்பெயர்ந்த மக்களையும் இவ்வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்துவதென இலங்கை உறுதி அளித்துள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான மீன்பிடி குறித்த ஏற்பாடுகளிற்கான அக்டோபர் 2008 உடன்படிக்கையை பூரணமாக அமுல்படுத்தவேண்டிய தேவை குறித்து இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும் மீன்பிடி குறித்த கூட்டு செயலணிச் சந்திப்பு விரைவில் நடத்துவதற்கும் இன்றைய (நேற்று) சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.
பீரிஸ்அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதாவது;
கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது அமர்வின் போது முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியஇலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அனைத்து விடயங்கள் குறித்தும் பேசப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன் இவற்றின் தரமான செயற்பாடுகளுக்கான பரஸ்பர வழிகள் குறித்து நாம் பேசியுள்ளோம்.
கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் இந்தியா உதவி வழங்க தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு,கிழக்கு மக்களின் விவசாய அபிவிருத்திக்கு உதவுவதற்கும் முன்வந்துள்ள இந்திய அரசு, வடக்கின் மூன்று பிரதான ரயில் பாதைகள் அமைப்பதற்குமான நிதி உதவியையும் வழங்குகின்றது.
மீள்குடியமரும் மக்களுக்கான வீட்டுதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படுகின்றது.
அதேவேளை, இரு நாட்டு மீனவர்களிடையேயுமான பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு இரு செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஒரு குழு தொடர்புகளை நிர்வகிக்கும் அதேநேரம் மற்றைய குழு சுற்றுலாத்துறையை கவனிக்கும்.
மேலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தினை நவீனமயப்படுத்தவும் இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. இதேவேளை, அரசியல் தீர்வு குறித்த விடயம் நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்பொழுது மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மக்களின் உடனடிப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய தேவை உள்ளது.
மக்களின் குடியேற்றம், விவசாயம், நீர் போன்ற அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கவேண்டியுள்ளது. ஆனாலும் அரசியல் தீர்வு விடயத்தை நாம் பின்தள்ளிவைக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்த பேச்சுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி இது குறித்த பேச்சுகளில் ஈடுபட்டார். அத்துடன் ஏனைய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக