ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தினமுரசு நாளிதழ் ஆரம்ப நிகழ்வு!

மக்களுக்கு சரியான பாதையைக் காட்டும் அதேவேளை நடுநிலைமையான பத்திரிகையாக தினமுரசு நாளிதழ் தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

தினமுரசு தினசரி பத்திரிகையின் அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தினமுரசு பத்திரிகையை கடந்த 17 வருடங்களாக நாளிதழாக வெளிக் கொணர இருந்தவேளையில் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றிய அற்புதன் ரமேஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதனால் அம்முயற்சி கைகூடாமற்போன நிலையில் வார இதழாக அதனை கடந்த காலங்களில் வெளியிட்டு வந்தோரால் அன்று தொட்டு இன்றுவரை தினமுரசு பத்திரிகையின் தரம் இன்னமும் குன்றாத நிலையில் இருப்பது வரவேற்கத்தக்கது. முக்கியமாக மக்களுக்கு சரியான பாதையைக் காட்டும் பத்திரிகையாக இப்பத்திரிகை விளங்க வேண்டும் என்பதுடன் பக்கச்சார்ப்பு இல்லாத நடுநிலைமையுள்ள பத்திரிகையாக தினமுரசு தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தினமுரசு பத்திரிகைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கன் உரையாற்றும் போது

பத்திரிகைத் துறையின் பாரம்பரியத்தை தொடக்கி வைத்த பெருமை யாழ் குடாநாட்டையே சேரும் என்பதுடன் கலை கலாசாரம் என்பவற்றை வளர்ப்பதுடன் அறிவையும் ஜனநாயகத்தையும் வளர்க்கின்ற சிறப்பான பணியை தினமுரசு பத்திரிகை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் யாழ் மாநரக முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பத்திரிகையாளர் ருஷாங்கன் ஆகியோரும் உரையாற்றினர்.

முன்பதாக முதலாவது நாளிதழ் பத்திரிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து ஏனைய பிரதிகள் அதிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பத்திரிகைத் துறைசார்ந்தோர் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக