ஞாயிறு, 3 அக்டோபர், 2010

வெளிநாட்டு கணவர்களை விரும்பும் தாய்லாந்து பெண்கள்

தாய்லாந்தில் இசான் என்ற பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், தங்கள் குடும்பத்தின் வறுமையை போக்குவதற்கும், வெளிநாட்டு கணவர்களை அவர்கள் விரும்புகின்றனர்.

தாய்லாந்தில் உள்ளது இசான் என்ற மாகாணம். வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய பகுதி இது. போதிய தொழில் வளமும் இல்லை. கூலி வேலை செய்து தான், இங்குள்ள பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.இதனால், இங்குள்ள பெண்கள், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.வசதியான வாழ்க்கை, தன்னை மட்டும் அல்லாமல், தனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான், இங்குள்ள பெண்கள், வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இசான் மாகாணத்தில் மட்டும் 11 ஆயிரம் இறக்குமதி கணவர்கள் வசிக்கின்றனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த இந்த கணவர்கள், உடோன் தானி என்ற நகரில் அடிக்கடி உலா வருவது, வழக்கமான காட்சி. இங்கு இவர்களுக்காகவே நட்சத்திர ஓட்டல்கள், பொழுது போக்கு இடங்கள் உள்ளன. இவர்கள் ஒன்று கூடி கும்மாளம் அடிக்கும் தெருவுக்கு பெயர் என்ன தெரியுமா? வெளிநாட்டு மருமகன்கள் தெரு.தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து கொள்ளும் மேற்கத்திய ஆண்கள், தங்கள் மனைவிகள் விரும்புவதை மனம் கோணாமல் நிறைவேற்றுகின்றனர். மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்துக்காக சொந்தமாக வீடு கட்டித் தருவது, அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கித் தருவது போன்ற கடமைகளை நிறைவேற்றுகின்றனர்.

தாய்லாந்து பெண்களை, திருமணம் செய்து கொள்ளும் மேற்கத்திய ஆண்கள் கூறுவதாவது:அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணத்துக்கு மதிப்பு இல்லை. அடிக்கடி விவாகரத்து நடக்கிறது. தாய்லாந்து பெண்கள், கணவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளனர். இங்கு வாழ்க்கையை நடத்துவதற்கு அதிகமாக செலவு செய்யத் தேவையில்லை. பரபரப்பான உலகில் இருந்து விலகி, அமைதியான சூழ்நிலையில் வசிக்க விரும்புகிறோம். அது இங்கு கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.இதன் பின்னணியில் வேறு ஒரு காரணமும் உள்ளது.தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து கொள்ள வரும் வெளிநாட்டு ஆண்களில் பெரும்பாலானோர், 50, 60 மற்றும் 70 வயதை கடந்தவர்கள். அமெரிக்காவில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து, விவாகரத்து பெற்றவர்கள். ஏதாவது ஒரு வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர்கள். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து, அமைதியாக வாழ்வதற்காகவும், கடைசி காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள, மனைவி வேண்டும் என்பதாலும் இங்கு வருகின்றனர்.

இதுபோன்ற தம்பதிகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பிராயூன் என்பவர் கூறியதாவது:இந்த மாகாணத்தில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள், வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்து கொள்வதை ஒரு வர்த்தக நடவடிக்கையாகவே கருதுகின்றனர். இவர்களுக்கு அன்பு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பணம் தான் அவர்களின் முதல் குறிக்கோள். தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக, மேற்கத்திய ஆண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். மேற்கத்திய ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் சில பெண்கள், அவரிடம் உள்ள அனைத்து பணத்தையும் கறந்தவுடன், அவரை கழட்டி விடும் சம்பவங்களும் நடக்கின்றன.இவ்வாறு பிராயூன் கூறினார்.தொடரும் பாரம்பரியம்: அமெரிக்க ஆண்கள், தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து கொள்வது, இப்போது தோன்றிய வழக்கம் அல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடைமுறை இங்கு பின்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 1960ல் வியட்நாம் போர் நடந்தபோது, இசான் மாகாணத்தில் உள்ள உடோன் தானியில் அமெரிக்காவின் விமான தளம் இருந்தது. இங்கு ஏராளமான அமெரிக்க ராணுவ வீரர்கள் வந்து செல்வர். அவர்களில் பலர், தாய்லாந்து பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.சிலர், தங்களது தாய்லாந்து மனைவி களை தங்களுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். பெரும்பாலானோர், தங்களது மனைவிகளை இங்கு விட்டுச் சென்று விட்டனர்.சில காலம் கழித்து, இந்த நடைமுறை இல்லாமல் போய் விட்டது. தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக