ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நடுவானில் இந்திய விமானி மாரடைப்பால் மரணம்

கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இந்திய விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கத்தார் தலைநகர் தோஹாவுக்கு புதன்கிழமை புறப்பட்டது.  அந்த விமானத்தில் 260 பயணிகள் இருந்தனர். விமானத்தை மும்பையைச் சேர்ந்த விமானி அஜய் குக்ரேஜா (43) உள்ளிட்ட விமானிகள் குழு இயக்கியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக விமானியிடம் கூறினார் அஜய்.  இதையடுத்து வழியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூரில் உள்ள செர்தாங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 4 1/2 மணி நேரம் தாமதமாக தோஹா சென்றடைந்தது.  கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் அஜய் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அஜய் நீண்ட நாளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவர் எப்போதும் இன்ஹேலர் வைத்திருப்பார் என்றும் தெரியவந்துள்ளது.  உயிரிழந்த அஜய் குக்ரேஜாவின் பெற்றோர் மற்றும் மனைவி, மகன், மகள் ஆகியோர் மும்பையில் உள்ளனர். இது பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜயின் உடலை கோலாலம்பூரில் இருந்து மும்பைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக