ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நக்சலைட்டுகளின் நதி மூலம்

நக்சலைட்டுகளின் நதி மூலம்
இந்திய அரசாங்கம் பல முனைகளில் தீவிரவாதத்துக்கு முகங்கொடுக்கின்றது. நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள் பிரதான அச்சுறுத்தலான தீவிரவாதிகளாக வளர்ந்திருக்கின்றனர். மற்றைய தீவிரவாத அமைப்புகள் ஓரிரு மாநிலங்களையே தங்கள் செயற்பாட்டுத் தளமாகக் கொண்டிருக்கின்ற அதேவேளை, நக்சலைட்டுகள் ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் செயற்படுகின்றனர். இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இவர்களே இந்தியாவின் பிரதான எதிரிகள் எனக் கூறியிருக்கின்றார்.
நக்சலைட்டுகள் என்ற பதம் அரசியல் அகராதியில் பொதுவான ஒரு பதமாக மாறிவிட்டது. இலங்கையில் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் விஜய குமாரதுங்கவை சிறையில் அடைப்பதற்காக நக்சலைட் என்று அவருக்கு முத்திரை குத்தியது. இப்பதம் ஒரு கிராமத்தின் பெயரிலிருந்து தோன்றி இன்று எல்லோரும் பயன்படுத்தும் பொதுப் பதமாக அரசியலில் நிலைத்துவிட்டது.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் 1967ம் ஆண்டு பதவிக்கு வந்தது. சில மாதங்கள் மாத்திரமே இந்த அரசாங்கம் நிலைத்தது. கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் டார்ஜீலிங் மாவட்டத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சாரு மஸும்தார் என்பவரின் தலைமையில் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
விவசாய நிலமும் விளைச்சலும் அவர்களால் அபகரிக்கப்பட்டுக் கூலி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. விவசாயிகள் நீதிமன்றம்என்ற நீதிமன்றங்களில் நிலச்சுவாந்தார்களுக்கு எதிரான விசாரணைகள் நடைபெற்றன. கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. வர்க்க எதிரிகள் அழிக்கப்பட வேண்டும் என்று சாரு மஸும்தார் பகிரங்கமாக அறிவித்தார்.
கிளர்ச்சி நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை சாரு மஸும்தார் குழுவுக்கு அறிவித்த போதிலும், அவர்கள் நிறுத்தாததால் அவர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைக்கு மாநில அரசாங்கம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாரு மஸும்தார் குழுவினர் கட்சியிலிருந்து வெளியேறினர். எல்லா மாநிலங்களிலும் கட்சி பிளவுபட்டது. பிரிந்து சென்றவர்கள் தீவிரவாதக் கோஷங்களுடன், ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுஎன்ற பெயரில் செயற்படத் தொடங்கினர். இவர்கள் தங்கள் அமைப்பை 1969ம் ஆண்டு அரசியல் கட்சியாக அறிமுகம் செய்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற பெயரில் செயற்படத் தொடங்கினர்.
சிறிது காலத்தின் பின் மீண்டும் பிளவு ஏற்பட்டு நக்சலைட்டுகள் மூன்று குழுக்களாகப் பிரிந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற பெயரில் ஒரு குழுவும், மக்கள் போராட்டக் குழு என்ற பெயரில் மற்றைய குழுவும், மாவோயிஸ கம்யூனிஸ்ட் கேந்திரம் என்ற பெயரில் மூன்றாவது குழுவும் இயங்கின. மாவோயிஸ கம்யூனிஸ்ட் கேந்திரமும் மக்கள் போராட்டக் குழுவும் 2004ம் ஆண்டு ஒன்றிணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயற்படத் தொடங்கின. பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அவற்றுடன் இணைந்தது.
மூன்று குழுக்களும் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியதும் நக்சலைட்டுகளின் நடவடிக்கை தீவிரமடைந்ததோடு, வியாபிதமும் அடைந்தது. பத்து வருடங்களுக்கு முன் 56 மாவட்டங்களில் மாத்திரம் செயற் பட்டுவந்த நக்சலைட்டுகள் இப்போது 236 மாவட்டங்களில் வலுவான நிலையில் செயற்படுகின்றனர். நக்சலைட்டுகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றது.
(சங்கர சேயோன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக