செவ்வாய், 19 அக்டோபர், 2010

அனுராதபுரம், கெக்கிராவை போன்ற இடங்களில் பாரம்பரியமாக இருந்து இனக்கலவரங்களால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் தாம் விட்டு வந்த காணிகளை

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவகையில்
மீள்குடியேற்றம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும்.
(சாகரன்)
தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத் தில் மீண்டும் குடியமர்த்தக் கோரி யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியிருக்கும் 100 சிங்கள குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன்று (18) யாழ்ப்பாணம் செல்கிறார். யாழ்ப்பாணம் அரச அதிபர் இமெல்டா சுகுமார், வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோருடன் அமைச்சர் மில்ரோய் இம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக் கொடுப்பாரெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறு இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்டுள்ள மக்கள் யாவரும் யாழ்பாணத்தில் மீண்டும் குடியமர்வதற்கு பூரண உரிமை உண்டு. அது தமிழருக்கும் பொருந்தும், முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தும், ஏன் சிங்கள மக்களுக்கும் பொருந்தும். இதே போல் அனுராதபுரம், கெக்கிராவை போன்ற இடங்களில் பாரம்பரியமாக இருந்து இனக்கலவரங்களால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் தாம் விட்டு வந்த காணிகளை உரிமை கோருவதற்கும், உடமையாக்கி கொள்வதற்கும் அரசு ஆவன செய்து கொடுக்க வேண்டும்.
அனுராதபுரம் போன்ற கிராமங்களிலிருந்து பேரினவாதத்தினால் ஏற்பட்ட கலவரத்தால் தமிழ் மக்கள் அங்கிருந்த தமது நிலங்களை விட்டு ஓடி வந்தது எவ்வளவு உண்மையோ இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமலே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குறும், சிறுபான்மை தேசிய வெறியினால் யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து மிக சிறிய அளவிலாக இருந்தாலும் சிங்கள மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குறியேற வேண்டியேற்பட்டது. இதில் இனச் சுத்திகரிப்பு நிகழ்வாக முஸ்லீம் மக்கள் புலிகளால் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்டது ம் வரலாறு. இதனைக் கொடுப்புக்குள் சிரித்தவாறு அனுமதித்ததும் யாழ்பாண மேலாதிக்கவாதிகளின் கொடுமையான செயற்பாடுகளின் உச்சக்கட்டம்.
ஆனால் அரசு காணிகளில் புதிதாக யாரையாவது திட் டமிட்டு குடியேற்றும் நடவடிக்கையாக சிறப்பாக தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்ற முயலுதல் என்ற செயற்பாடு இனங்களுக்கு இடையில் மேலும் ஐயப்பாடுகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும். அது மாத்திரமல்ல இலங்கை அரசின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு குந்தகமாகவும் அமையும். இலங்கையில் உள்ள சகல இனங்களும் சமூகக் குழுக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய அரசியல் நிலமைகளை குறைந்த பட்டசமாவது சட்ட மூலமும், நடைமுறை மூலமும் ஏற்படுத்தாமல் இலங்கை அரசு வலிந்த குடியேற்றங்களை ஏற்படுத்துமாயின் மீண்டும் இளைஞர்கள் 1970 களில் கிராமங்களை நோக்கி வகுப்பு எடுக்க புறப்படும் நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என்பதை உறுதி செய்ய முடியாது. இது வரைகாலமும் ஆட்சி செய்து வந்த அரசுகள் விட்ட தவறுகளை தற்போதைய அரசு பாடங்களாகக் கொண்டும் செயற்படும் என்று நம்பவைக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு தற்போது உண்டு.
இந்த வகையில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன் யாழ் விஜயமும் புகையிரத நிலையல்தில் தங்கியிருக்கும் சிங்கள் மக்களை அணுகும் நடைமுறையும் அமைய வேண்டிய நெருக்கடியான நிலையில் இலங்கை அரசு உள்ளது என்பதை சம்மந்தப்பட் தரப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சர் சிங்கள மக்களின் பிரதிநிதியாக மட்டும் செயற்படாமல் முழு இலங்கை மக்களின் பிரதிநிதியாக செயற்பட வேண்டிய கடப்பாட்டில் உள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மீள்குடியேற்றம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும் . இதில் நாம் யாவரும் குறைந்த பட்ச புரிந்துணர்வுகளையும், பாடங்களையும் அதன் அடிப்படையிலான செயற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதே போல் போராளிகளுக்கு புனர்வாழ்வு என்று வரும் போதும் அது புலிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. 1985 களிலிருந்து இலங்கை அரசாலும், புலிகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஏனைய அமைப்பு போராளிகளுக்கும் இது பொதுவானது. யுத்தம் என்ற நிகழ்வால் புலி அமைப்பினர் மட்டும் அல்ல ஏனைய விடுதலை அமைப்பினரும் பாதிக்கப்பட்டுள்னர். புலிகளால் பல ஆயிரம் மாற்றுக் கருத்துள்ள போராளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் நலன்களும் போராளிகளின் புனர்வாழ்வு என்ற வரையறைக்குள் இணைக்கப்பட்டு புனர்வாழ்வழிக்கப்பட வேண்டும். புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் பெரியளவில் உள்ளனர் என்பது இங்கு கவனிக்கப்படத் தக்கது.
அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து தாம் வாழ்ந்த பூமியை உரிமைகோரும் தைரியம் தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்களுக்கான தைரியத்தின் முதுகெலும்பை புலிகள் வலிந்து உடைத்து விட்டார்கள். புலிகளை விடுவோம் இதை இலங்கை அரசு அனுமதிக்குமா? அல்லது இலங்கையிலுள்ள இனவாத சக்திகள் அனுமதிக்குமா...? இப்படி ஏட்டிக்கு போட்டியாக செயற்படாமல்  மீள்குடியேற்றம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். இதனை இலங்கை முழுவதும் இலங்கை அரசு உறுதி செய்யுமா? இதே போலவே பாதிக்கப்பட்ட சகல இயக்க போராளிகளுக்கும், மூவின மக்களுக்கும் சமத்துவமாக செய்யுமா? என்பதே இவ்விடயங்கள் பற்றிய தற்போதைய கேள்விக்குறி.
(சாகரன்) (ஐப்பசி 18, 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக