திங்கள், 18 அக்டோபர், 2010

இலங்கையில் சட்டவிரோதமாக 20 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர் : பெரும்பாலானவர்கள் இந்தியா,பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்!

இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆங்கில ஊடகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.உரிய அங்கீகாரமில்லாமல் இவர்கள் தொழிலாளர்களாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் பரிசாரகர்களாகவும் பணிபுரிவதாகவும் பல்வேறு நகரங்களிலுள்ள உணவுச் சாலைகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புள்ளி விபரம் “உத்தியோகபூர்வ மதிப்பீடு என்று கூறியுள்ளஅந்த ஊடகம் அதேசமயம் உண்மையான தொகையை நாட்டின் குடிவரவுத்துறைத் தலைவர் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.”நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் தொடர்பாகக் குறிப்பிட்ட சோதனைகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம் என்று குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் சூலாலநந்த பெரேரா கூறியதாக அந்த ஊடகம் மேற்கோள்காட்டியுள்ளது.
“மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நான் விபரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதே இது கடினமானதாக்கிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகள் 85 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிலர் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் முன்கூட்டியே விசா அனுமதி பெற்று வந்த வெளிநாட்டவர்கள் விசா முடிந்த பின்னரும் அதிக காலம் தங்கியிருப்பதும் பணியாற்றுவதும் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் போன்ற துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் உல்லாசப் பயணிகள், சேவைத் துறையை நாடுவோர் அதிகளவுக்குச் செல்லும் இடங்களாக இருப்பதுடன் அந்நாடுகளைச் சென்றடைந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளன. தெற்காசியாவுக்கான சுற்றுலா, சேவைத்துறையை வழங்கும் நாடாக வருவதற்கான அபிலாஷைகளை இலங்கையும் கொண்டுள்ளதுடன் சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்துவருகிறது.
சட்ட ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பணியாளர்கள் செல்வத்தை விருத்தி செய்ய உதவுகின்றனர். பரஸ்பர அனுகூலமான ஒப்பந்தத்தின் பிரகாரம் சேவைகளை வழங்க அவர்கள் முன்வருகின்றனர்.
விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் அதிக காலத்துக்குத் தங்கியிருப்பது குற்றமாகும். ஆனால், வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. பாதிப்பில்லாத குற்றங்களை குற்றமற்றவையாக்க வேண்டுமென சுதந்திரமான சமூகங்கள் விரும்புகின்றன.
இத்தாலி போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் சட்டவிரோதமாகப் பணியாற்றி பெருந்தொகைப் பணத்தை தாய்நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் சட்ட ரீதியாக வேலை செய்து வரியும் செலுத்துகின்றனர். வரிக் கணக்கைத் திறப்பதற்கு குடியேற்றவாசி என்ற அந்தஸ்தைப் பிரகடனப்படுத்த வேண்டிய தேவை இல்லை. சட்டத்திற்கு அமைவாகச் செயற்படுவோரின் குடிவரவுத்துறை அந்தஸ்தை
விசாரிக்க வேண்டும் என அமெரிக்காவிலுள்ள பொலிஸாரிடம் எதிர்பார்க்கப்படவில்லை. தொழிலாளரின் சுதந்திரமான நடமாட்டத்துக்குத் தடையாக வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரமே உள்ளது.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகள் விசாவில் நாட்டை வந்தடையும் வெளிநாட்டு பாலியல் வர்த்தகப்பணியாளர்களுக்கு எதிராக இலங்கைக் குடிவரவுத் துறை அதிகாரிகள் காலத்துக்குக்காலம் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
புறக்கோட்டை பகுதியில் சில வர்த்தகத் துறையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கடுமையாக உழைப்பதாலும் மதுபாவனை போன்றவற்றால் தொழிலுக்கு வருகை தராமல் இருப்பதில்லை என்பதால் மற்றும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் அவர்களைப் பணிக்கமர்த்துவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் அவற்றின் சனத்தொகையிலும் பார்க்க வெளிநாட்டு பணியாளர்கள் அதிக தொகையினராக உள்ளனர். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் சட்டரீதியாக வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக