வெள்ளி, 29 அக்டோபர், 2010

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை அம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்கறையின்றியிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 80,000 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் 1990  ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.   யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு  நாட்டில் அமைதி நிலை தோன்றியுள்ள போதிலும் இம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை தொடர்பு கொண்டு கேட்டபோது….,    வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 67,000  வரையிலான  முஸ்லிம்கள் இன்னும் புத்தளத்தில் உள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி  மாவட்டங்களில் சிலர் குடியமர்ந்தும்  உள்ளனர்.  பலர் வடக்கிற்கு சென்று தமது சொந்த  இடங்களை பார்த்துவிட்டு வருகின்றனர். மீள்குடியேறியோருக்காக நாம் பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளையும் மீள இயக்குவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் .
இவர்களின் மீள் குடியேற்றத்தில் பல சிக்கல்கள் உள்ளன.   இந்த  விடயங்களை தீர்ப்பதற்காக  புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரையும்    யாழ். மாவட்ட அரசாங்க அதிபரையும் இணைத்துள்ளோம்.  அதேபோல மன்னார், முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சி  மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும்.
மீள் குடியேறி  செல்பவர்கள்  தற்காலிகமாக இருந்த  இடங்களில் தமது பதிவுகளை நீக்கி விட்டு செல்ல வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான  நிவாரண  தொகை  வழங்கப்படும்.  இரு இடங்களிலும் பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இரு இடங்களிலும் நிவாரணங்கள் பெறுவார்கள். அப்படி வழங்க முடியாது.
இதேவேளை முஸ்லிம்களுக்கு  காணிகள் தொடர்பிலான  பல பிரச்சினைகள் உள்ளன.  இவை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே  அதிகமாக உள்ளன. இந்த  மாவட்டங்களின் பெரும்பாலான  ஆவணங்கள் இறுதி யுத்தத்தின் போது அழிவடைந்துள்ளன. ஆகவே  இது தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  தொடர்ந்தும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றோம்.   யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை அவர்களின் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.
இடம்பெயரும்போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை  தற்போது 4 முதல் 5 மடங்காக பெருகியிருக்கின்றன. இது விடயம் தொடர்பாக நாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.    முதலில் தாய்க் குடும்பத்தை மட்டும் குடியேற்றுமாறு    ஜனாதிபதி கூறியிருந்ததாக  மீள் குடியேற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுக் குடும்பமொன்றில் தனிக் குடும்பம்  மட்டும் சொந்த இடத்திற்கு போகும் போது ஏனையோரின் நிலை பற்றி பிரதியமைச்சரிடம் கேட்டபோது,
‘அவர்கள்  தற்போது  தற்காலிகமாக இருக்கும் இடங்களிலேயே  இருக்கலாம்.     சொந்த இடங்களுக்கு  செல்வது அவர்களது விருப்பம்.  இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்வதென்றால் பதிவு நீக்கியே  செல்ல வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான  நிவாரணங்கள் வழங்கப்படும். சொந்த இடங்களுக்கு  செல்லும்போது  அவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று வகுக்கப்படுகின்றது.
இதேவேளை 1990  ஆம் ஆண்டு  காலப் பகுதிகளில் மன்னாரிலிருந்து 10,000  குடும்பங்கள்  வெளியேற்றப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சனத்தொகை  மேலும் அதிகரித்திருக்கும் நிலையில் மன்னாரில் 6500 குடும்பங்கள் மீள் குடியமர்ந்துள்ளனர்.   யாழ்ப்பாணத்திலிருந்து 2500  குடும்பங்கள்  வெளியேற்றப்பட்டிருந்தன.  மேலும்  பல மடங்குகளாக அதிகரித்திருக்கும் இவர்களின் சனத் தொகையில் 250  குடும்பங்கள் மட்டுமே தற்போது யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து 1200  குடும்பங்கள்  90 களில் வெளியேற்றப்பட்டன.  பெரும் தொகையாக அதிகரித்துள்ள  இவர்களில் 160  குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளன.   வவுனியாவில் இந் 1500 குடும்பங்கள்  வெளியேறியிருந்தனர்.    அதிகரித்திருக்கும் இவர்களின்  சனத் தொகையில் 350  குடும்பங்கள் வவுனியாவின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 250  குடும்பங்கள் 1990 களில் சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.       பல குடும்பங்களாக   பெருகியிருக்கும்  இவர்களில் தற்போது  150  குடும்பங்கள் மீள சொந்த  இடங்களுக்கு  சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.    இதேவேளை புத்தளத்தில் கற்பிட்டி  பகுதியில் உள்ள 101  அகதி முகாம்களில் 8357 குடும்பங்கள்  இருக்கின்றன.   புத்தளம் பிரதேசத்தில்  38 முகாம்களில் 6420 குடும்பங்கள்  வாழ்கின்றனர்.
வண்ணாத்திவில்லு  பிரதேசத்திற்குட்பட்ட  11 முகாம்களில் 827  குடும்பங்கள் உள்ளன.  முந்தல் பிரதேசத்திற்கு உட்பட்ட  பகுதிகளில் 18 முகாம்களில்  1642 குடும்பங்கள்  வாழ்கின்றனர்.    அனுராதபுர மாவட்டத்தில் நாச்சியாதீவு மற்றும் மதவாச்சி போன்ற  பகுதிகளில் உள்ள 9 முகாம்களில் 1500  குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
குருணாகல்   மாவட்டத்தின் ஹொரம்பாவ  மற்றும்  பண்டுவஸ்நுவர பகுதிகளில் 16 முகாம்களில் 285  குடும்பங்கள்  வாழந்து வருகின்றன.  பாணந்துறை பிரதேசத்தில்  225 குடும்பங்களும்   நிட்டம்புவையிலும் 60 குடும்பங்களுமாக இருக்கின்றன.
இதேவேளை  கொழும்பின் பல இடங்களிலும்  நாட்டின் பல பாகங்களிலும்  வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக  1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எல்.ரீ.ரீ.ஈ. னரால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள்  தொடர்பான உத்தியோகபூர்வ  பிரஜைகள் ஆணைக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக