ஞாயிறு, 10 அக்டோபர், 2010

மீன்பிடி படகில் 4000 கிலோ மீட்டர் பயணம்: இலங்கை அகதிகளை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றது எப்படி?

கைதான புதுச்சேரி தி.மு.க. கவுன்சிலரிடம் நடந்த விசாரணையில் தகவல்
புதுச்சேரியில் இருந்து 3829 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுக்கு இலங்கை அகதிகளை, தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் எப்படி அழைத்து சென்றார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு, இலங்கை அகதிகளை கள்ளதனமாக, விசைபடகு மூலம் புதுச்சேரி நபர்கள் அழைத்து செல்வதாக மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் சக்திவேலுக்கு சொந்தமான விசைபடகில் இலங்கை அகதிகளை, பலமுறை ஆஸ்திரேலியா நாட்டிற்கு அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் கவுன்சிலர் சக்திவேலுக்கு உடந்தையாக லோகு, அய்யப்பன், ஜீவா, சிலோன் கண்ணன் ஆகியோர் இருந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை சி.ஐ.டி. மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பான தகவல்கள் விவரம் வருமாறு:-கவுன்சிலர் சக்திவேலுக்கு, இலங்கையை சேர்ந்த சில இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இலங்கையை சேர்ந்த அகதிகளை ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு, ரகசியமாக அழைத்து சென்றால் அதிக பணம் தருவதாக அந்த இயக்கம் சக்திவேலிடம் கூறியது.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமாக சுமார் 2000 தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் அனைத்தும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகே இல்லாமல் சுமார் 1000 கி.மீ.க்கு மேல் தொலைவில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தீவு, கிலிங் தீவு ஆகியவைதான் இந்தியாவில் அருகே உள்ளன. இதில் புதுச்சேரியில் இருந்து சுமார் 3829 கி.மீ. தூரத்தில் கிறிஸ்துமஸ் தீவு இருக்கிறது.
கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 750 கி.மீ. தூரத்தில் கிலிங் தீவு அமைந்து உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தீவு இந்தோனேசியா நாட்டிற்கு மிக அருகில் உள்ளது. எனவே இலங்கை அகதிகளை கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விட முடிவு செய்யப்பட்டது. இதற்கு சக்திவேல் சம்மதம் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப வேண்டிய நபர்களை, யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு கவுன்சிலர் சக்திவேல் அழைத்து வந்து விடுவார். பின்பு அங்கு தயாராக இருக்கும் விசைபடகில் அவர்களை ஏற்றிவிடுவார். ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் சக்திவாய்ந்த அந்த படகில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள், டீசல், தண்ணீர் ஆகியவை இருக்கும்.
இந்த படகில் இலங்கை அகதிகளுடன் கவுன்சிலர் சக்திவேலின் ஆதரவாளர்கள் கண்ணன், ஜீவா செல்வார்கள். படகு கடலில் செல்லும் போது யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் இலங்கை அகதிகளை அவர்கள் அழைத்து செல்வார்கள். மேலும் ஏதாவது பிரச்சினை என்றால் செயற்கை கோள் போன் மூலம் புதுச்சேரியில் இருக்கும் தங்களது ஆட்களிடம் அவர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
படகு கிறிஸ்துமஸ் தீவை அடைந்தவுடன் அங்கு தயாராக இருக்கும் மற்றொரு படகில் இலங்கை அகதிகளை இறக்கி விட்டு விட்டு புதுச்சேரிக்கு திரும்பி விடுவார்கள். ஒரு முறை இலங்கை அகதிகளை அழைத்து சென்று இறக்கி விட்டு வந்தால், சக்திவேல் கைக்கு லட்சக்கணக்கான பணம் வந்து சேரும்.
இதில் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வந்தால், அதன் அருகில் உள்ள கிலிங் தீவில் இலங்கை அகதிகளை இறக்கி விடுவார்கள். இங்கு இறக்கி விட்டால் இலங்கை அகதிகளுக்கு ராஜா வாழ்க்கை தான். அங்குள்ள மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள். பின்பு அவர்கள் அந்த நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
கிலிங் தீவு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லபிள்ளையாக கருதப்படுகிறது. சுற்றுலா செல்வதற்கு உகந்த இடம். இங்கு 200 பேர் தான் வசித்து வருகிறார்கள். அங்கு 5 போலீசார் மட்டும் தான் உள்ளனர். 200 பேர் கொண்ட மக்கள் தொகைக்கு மொத்தம் 5 போலீசார் என்றால், அந்த தீவு எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விடும் இலங்கை அகதிகளை, அந்த நாட்டு அரசு அவர்களை திருப்பி அனுப்பி வைக்காது. அங்குள்ள முகாமில் அவர்கள் அடைக்கப்படுவார்கள். அப்போது 90 நாட்களுக்குள் ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு குடியுரிமை கிடைத்தவுடன் அவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது அங்கு குடியுரிமை கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் கிறிஸ்துமஸ் தீவிற்கு சென்றால் எளிதில் குடியுரிமை கிடைப்பதால், இலங்கை அகதிகள் அதிகம் பேர் அங்கு சென்று உள்ளனர்.
மேலும் இலங்கை அகதிகளை யார் கண்ணிலும் சிக்க வைக்காமல், கிறிஸ்துமஸ் தீவிற்கு அனுப்பி வைப்பதால் அகதிகள் மத்தியில் சிறப்பு மிக்கவராக கவுன்சிலர் சக்திவேல் திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் 7-வது முறையாக இலங்கை அகதிகளை அனுப்பி வைக்கும் போது, போலீசாரிடம் சக்திவேல் தலைமையிலான கும்பல் சிக்கி கொண்டது.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக