ஞாயிறு, 10 அக்டோபர், 2010

குழந்தைகளுடன் தீக்குளிப்பேன்!– மட்டு மாநகர சபை உறுப்பினர்

 இராணுவத்தினரால் கடத்தப்பட்ட   எனது கணவர் கை,   கால்கள் விலங்கிடப்பட்ட  நிலையில் மட்டக்களப்பிலுள்ள  இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனது கணவரை இராணுவம் விடுதலை செய்யாவிடில் நானும் எனது பிள்ளைகளும் தீக்குளித்து   தற்கொலை செய்து கொள்வோம் என காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்   சகாயமணியின் மனைவி ஜோசப்  மேரி சகாயமணி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றுக் கொண்ட  பாடங்கள் மற்றும்   நல்லிணக்க  ஆணைக்குழுவின்  முன்னிலையில் நேற்று  சாட்சியமளித்த  போது தெரிவித்தார்.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிய மளித்தபோது   இவர் மேலும் தெரிவித்ததாவது, எனது கணவர் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு உறுப்பினர். கடந்த 23.8.2010 ஆம் திகதி காணாமல் போனார்.   இவரை மட்டக்களப்பிலுள்ள  இராணுவத்தினர் வெள்ளை வானில் கடத்திச் சென்றதாக அறிகின்றேன்.
எனது கணவரை மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாமில்  கை,  கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் வைத்துள்ளனர்.   தயவு செய்து அவரை விடுவிக்க உதவுங்கள். இல்லையேல் நானும் எனது பிள்ளைகளும் தீக்குளித்து உயிரை மாய்க்க வேண்டி ஏற்படும். எனது கணவர் குற்றம் செய்திருந்தால், நீதிமன்றத்தினூடாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
எனது கணவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஓர் அங்கத்தவர். அரசாங்கம் நினைத்தால் எனது கணவரை விடுவிக்கலாம்.  தயவு செய்து விடுவிக்க உதவுங்கள் என்றார்.   அப்போது  ‘உங்கள் கணவரை இராணுவம் கடத்திச் சென்றதை  எப்படி நீங்கள் அறிந்தீர்கள்’ என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேட்ட னர்.
இராணுவம் தான் எனது கணவரை கடத்திச் சென்றது எனும் தகவல் கிடைத்துள்ளது. அதை நான் நன்கு அறிவேன் எனக் கூறினார்.  ஜோசப் மேரி சகாயமணி தனது இரண்டு குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொண்டே ஆணைக்குழு முன்னிலையில் சாட் சியமளித்தார்.
தமக்கு எந்தவிதமான நிவாரணங்களும் தேவையில்லை. தமது கணவன்மார்களையும் உறவுகளையும் தேடித் தந்தால் போதுமென்றே ‘இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.  மேலும் பலர் தமது உறவுகள் இராணுவ தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்து தருமாறும் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தமது கைக்குழந்தைகளுடனேயே வந்திருந்தனர்.
இவர்களில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக பேச்சாளர் இளந்திரையன், மட்டக்களப்பு புலனாய்வு பொறுப்பாளர் பிரபா ஆகியோரின் மனைவிமாரும் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக