ஞாயிறு, 10 அக்டோபர், 2010

இங்கிலாந்தில, இந்தியர்களில் இருக்கும் சாதி நோய், தீண்டாமை

இங்கிலாந்திலும் தீண்டாமை நோயா?
- தே.இலட்சுமணன்
இந்திய நாடு உலக அரங்கில் மெல்ல மெல்ல ஏறி வருகிறது; முன்னேறி வருகிறது என வாய் பிளக்கக் கூவினாலும், அதன் உடம்பில் சிக்கி இருக்கும் சாதி நோய், தீண்டாமை எனும் நோய் நீடிக்கின்ற வரை இந்தியாவின் முன்னேற்றம் என்பது முழுமையற்றதுதான். என்றைக்கு இருந்தாலும், அது ஓர் அவமானம்தான்.
அந்த சாதி சனியன் இந்தியாவோடு நின்றாலும் பரவாயில்லை, பிழைக்க ஓடும், அதிலும், உழைத்துப் பிழைக்க ஓடும் வெளிநாடுகளிலும் அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அந்தத் தீண்டாமை நோயினை உடன் கட்டிக் கொண்டு ஓட வேண்டுமா? சாதி என்றால் என்ன என்று தெரியாத நாடுகளிலும், அந்த நாட்டு மக்களுக்குப் பிறவிலேயே சாதி பட்டயத்தோடு பிறக்கும் சமூக வழக்கம் ஒன்று இருக்கிறது என்பது பற்றித் தெரிய சமூகத்தில், இந்திய மக்கள் அங்கு போய் தங்களுக்குள் சாதி பேசி, தீண்டாமை வழுவி கேவலப்பட்டு போவது அவமானத்திலும் அவமானம், பிழைக்கச் சென்ற இடத்திலும் சாதி வேற்றுமை பேசி இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள். அண்மையில் வந்த இப்படிப்பட்ட ஒரு செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கை, தன் ஆதிக்கத்தின் கீழ் அடக்கி காலனி நாடுகளாக வைத்து ஆண்ட, தொழிற் புரட்சி நடத்தி, உலக வர்த்தகத்தில் உச்சக் கட்டத்தில் கொடிக்கட்டி வாழ்ந்த இங்கிலாந்து நாட்டில் தான் - ஆங்கிலேயர்கள் வாழும் அந்த வெள்ளையர்கள் நாட்டில்தான் நம் இந்தியர்கள், சாதி பேதம் பேசி தீண்டாமை அனுஷ்டித்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.
இங்கிலாந்தில் வந்தேறிகளாக வாழும் மொத்த இந்தியர்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தலித்துகளும் வாழ்கிறார்கள், பல ஆண்டுகளாக வாழ்கிறவர்களில் வெள்ளையன் நம் நாட்டை ஆண்ட காலத்திலேயே குடியேறிச் சென்ற இந்திய நாட்டவர்களில் தலித்துகளும் அடங்குவர். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக ஏராளமான தலித்துகள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியதில், அவர்களுக்கு இங்கிலாந்தில் குடியேற கூடுதலாக வாய்ப்பையும் கொடுத்தது.
அங்கு நீண்ட நாட்களாக நீடிக்கும் பிரச்சனை என்னவென்றால், தங்களை மேல்தட்டு இந்தியர்களாக நினைத்துக் கொண்டு, அங்கு வாழும் இந்தியர்களை, தலித்துகளை ஓரங்கட்டுவதும், ஒடுக்குவதும் பலவடிவங்களில் நடந்தேறுகின்றன. நம்மவர்களாக ஒரு பகுதியினர் தொழில் அதிபர்களாக, வர்த்தகர்களாக, நடுத்தர வியாபாரிகளாக, தொழில் வல்லுநர்களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக வாழ்கிறார்கள். மற்றொரு பகுதியினர் ஆலைத் தொழிலாளர்களாக, வாகன ஓட்டிகளாக, கட்டிடப் பணியாளர்களாக, கூலித் தொழிலாளர்களாகக் கூட வாழ்கிறார்கள். இங்கிலாந்து நாட்டின் குடி உரிமை பெற்றவர்களாகவும் வாழ்கிறார்கள். வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் சாதிப்பித்து மட்டும் அவர்களை விட்டு வைக்கவில்லை. “கோட்டு”, “சூட்டு”, “டை”, “தொப்பி”, “ஷூ” என வேஷம் மாறினாலும், சாக்கடையாம் சாதியை மட்டும் மறந்து விடாமல் வாழ்கிறார்கள். அங்கேயும் தலித்துகள் நீதி கேட்டு, நியாயம் கேட்டு, உரிமை கேட்டு, போராடுகிறார்கள். தாங்கள் அந்நிய நாட்டிலும் அவமானப்படுத்தப்படுவதை, அதிலும் சொந்த நாட்டு மக்களாலேயே கேவலப்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
ஒரு இந்திய தலித் பெண்மணி வானொலி நிலையத்தில் பணிபுரிகிறார். அது ஓர் இந்திய மேல்சாதியைச் சேர்ந்தவர் நடத்தும் தனியார் வானொலி நிலையம். அந்த அம்மையார் தலித் என்று தெரிந்த உடன், நிலைய மேலாளர்- மேல்சாதியாளர், அந்த அம்மையாரை பதவி இறக்கம் செய்துவிட்டார். இது என்ன கொடுமை?
ஒரு தனியார் பேருந்து நிறுவனம் - இந்தியரால் நடத்தப்படும் நிறுவனம் - நிறுவனச் சட்டத் திட்டங்களை மாற்றி விட்டது. அதன் படி ஒரு மேல்சாதி பேருந்து ஆய்வாளர், ஒரு தலித் ஓட்டுநராக இருந்தால் அவரோடு இணைந்து பணிசெய்ய இயலாது என முடிவு எடுத்து விட்டார்! நிறுவன சட்டம் அந்த மறுப்புக்கு வழி செய்து கொடுத்துள்ளது. இங்கிலாந்து நாட்டில்தான் இப்படி நடக்கின்றது. ஒரு மூதாட்டி தன்னைப் பராமரிக்க ஒரு நபரை நியமித்துக் கொண்டார், ஆனால் அந்த மேல்சாதி இந்தியர், மூதாட்டி தலித் என்று தெரிந்த பிறகு அவரை சிறுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார், அசட்டை செய்ய ஆரம்பித்து விட்டார். இப்படிப்பட்ட இழிவுகள் - அவமானங்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டன. ஆனால் இவைகளை வெளியே சொல்லி பிரச்சனைகளை பெரிதாக்கிட பாதிக்கப்பட்டவர்கள் விரும்பவில்லை, மனம் புழுங்கி வேதனைப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் அமைப்பு என்ற ஒன்று இருக்க வேண்டுமல்லவா? “Caste Watch” என்ற பெயரில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலித் பிரச்சாரக்குழு மட்டும் அன்றாடம் நடக்கும் இந்த இழிவு, அவமதிப்பு, புறக்கணிப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி வருகிறது. ஆனால் இங்கிலாந்து சட்டத்தில் “சாதிப் பாகுபாடு” ஒரு கொடிய தண்டனைக்கு உரிய செயல் எனப் பார்க்கும் விதிமுறை இல்லை. அவர்கள் நாட்டில் சாதி பாகுபாடு இல்லை; ஆகவே அது சட்டத்தில் இடம் பெற வாய்ப்பில்லை. ஆனால் இதை இனப்பாகுபாடு (caste discrimination) சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலித் விழிப்புக்குழு பிரிட்டிஷ் அரசை வற்புறுத்தி வருகிறது. இதை ஒரு இனப்பாகுபாடாகவே (caste discrimination) பார்க்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசு சாதி வித்தியாசம் பார்ப்பதை இன வித்தியாசம் பார்ப்பது போன்ற குற்றம் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் ஐரோப்பியாவிலேயே பிரிட்டிஷ் அரசு தான் முதன் முதலாக அப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்த நாடாக இருக்க வாய்ப்பு உண்டு! அநேகமாக அப்படி திருத்தம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இங்கிலாந்தில் அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சமத்துவ சட்டத்தின் (equal rights) படி சாதியையும், இனச் சட்டத்தின் ஒரு பகுதியாக பிரகடனம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளதாகவும், இதற்கென்று மீண்டும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டியதில்லை என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இரண்டு, மூன்று இனப் பிரிவு சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இந்த இனப்பிரிவு மக்களை பாகுபாடாகப் பார்ப்பது சட்டப்படி குற்றம். அதே போல் சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதும் குற்றம் என அதை இனப்பிரிவில் கொண்டு வர ஒரு சிறு திருத்தம் கொண்டு வந்தால் போதும் என்றும் வியாக்கியானம் செய்யப்படுகிறது.
ஆனால் நம் இந்திய அரசு சாதி வேறு, இனம் வேறு, ஆகவே அதில் இதை இணைக்கக் கூடாது என ஆட்சேபணை செய்யுமோ என அங்குள்ள தலித்துகளுக்கு ஐயமும், அச்சமும் உருவாகியுள்ளது. இந்த அச்சத்துக்குக் காரணமே, சில வருடங்களுக்கு முன்னால் உலக அளவிலான இனப்பாகுபாடு ஒழிப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போது, இந்தியாவில் தீண்டாமை பாகுபாட்டையும் அதோடு இணைத்து பரிசீலிக்க வேண்டும், அந்த மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று குரல் எழுந்த போது அன்றைய இந்திய அரசு அதற்குக் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தது. தீண்டாமை, இனப்பாகுபாடு போன்ற அவ்வளவுக் கொடுமையானது அல்ல என்று வியாக்கியானம் செய்யப்பட்டது. நம் கருத்து இனப்பாகுபாடு கொடுமைகளை விட தீண்டாமை என்பது அதிகபட்சக் கொடுமையானது என்பது தான். எனவே தான் இங்கிலாந்தில் வாழும் தலித்துகளுக்கு இயற்கையாகவே இந்திய அரசைப் பற்றிய இந்த அச்சம் கிளம்பி உள்ளது.
ஆயிரக்கணக்கான குடிமக்கள் (தலித்துக்கள்) பணி இடங்களில், பள்ளிகளில், மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை நடக்கும் போதும் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்றனர். 45 சதவிகித தலித்துகள் அவர்களுடன் பணியாற்றும் மேல்சாதி தொழிலாளர்களால் வேற்றுமையுடன் நடத்தப்படுவதாகவும் கேவலமாக சாதி பெயரைச் சொல்லி அவமானப்படுத்தப்படுவதாகவும் விபரங்கள் கிடைத் துள்ளன. 9 சதவிகித மக்கள் தலித்துகளாக இருப்பதாலேயே பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களாக, பத்து சதவிகித மக்கள் குறைந்த ஊதி யம் பெறுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. சிலர் பயமுறுத்தலுக்கும் ஆளாகிறார்கள்.
கோவென்டரி எனும் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சமூக மற்றும் சாதியின் ஆய்வுமைய ஆய்வாளர் டாக்டர் குர்னாம் சிங் “சாதி குரோதம் அன்றாட நிகழ்ச்சிகளாக நிறைவேற்றப்படுகின்றன. அவர் மொழியிலேயே சொல்ல வேண்டுமென்றால் “நிதம் நடக்கும் நிஜம்” என்பதுதான் சாதிப்பாகுபாடு என்கிறார். சாதி வேற்றுமைகளின் வீச்சை துல்லியமாக அறிய மேலும் நுண்ணிய முயற்சிகள் தேவைப்படுகிறது, நாளுக்கு நாள் இந்த வன்முறை அதிகமாகி வருகிறது என நொந்த உள்ளத்தோடு உரைக்கிறார்.
தலித் அமைப்புகள், இங்கிலாந்து அரசு சாதகமான முடிவு எடுக்கும், சட்ட வரைவு அமலுக்கு வரும், அதைப் பெருவிழாவாகக் கொண்டாடத் திட்டம் தீட்டி வருகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அச்சமும் அலைமோதுகிறது. இந்திய அரசு இந்தச் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பிரிட்டிஷ் அரசு பின்வாங்கி விடுமோ எனவும் அஞ்சுகிறது. ஆனாலும் என்ன? இந்திய அரசின் ஆட்சேபணையால் சட்டம் ஆகாமல் (தீண்டாமைக்கு எதிராக) போனால், அடுத்து ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றத்திற்கு போகவும் தலித் அமைப்பு (Hidden Apartheid, Voice of the Community, Caste and Caste Discrimination in the U.K) தயாராக உள்ளது.
(பி.கு) இந்தக் கட்டுரை பத்திரிகையாளர் அசன் சுரூர் என்பவர் இந்து (THE HINDU 3.9.2010) பத்திரிகையில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக