ஐந்தாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின், மூத்த முதல் போராட்ட தியாகிக்கு இப்படியொரு அவல நிலையா?! உள்ளூர்க்காரர்கள் வீசியெறியும் சில்லறைகளையும், ‘அய்யா’வழிக் கோயில் ஒன்றில் கிடைக்கும் ஒரு வேளைக் கஞ்சியையும் மட்டுமே நம்பி நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார், ‘அய்யா’வின் (தந்தைப் பெரியார்) கொள்கைகளைப் பற்றி அரசியலுக்கு வந்த அந்தப் பெரியவர்!
கன்னியாகுமரி பக்கமுள்ள தென் தாமரைக்குளம் ‘அய்யா’ வைகுண்டர் கோயிலில் தினமும் மத்தியானம் ‘தர்மக் கஞ்சி’ வழங்கப்படுகிற நேரத்தில் அந்தப் பெரியவரை அங்கு தவறாமல் காணலாம், அவரது சக தோழர்களோடு (வேறு யார்..? தர்மம் எடுப்பவர்கள்தான்!). வரிசையில் நின்று ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கஞ்சியை வாங்குகிறார். பிறகு, கோயிலின் ஓர் ஓரமாக உட்கார்ந்து, கையிலுள்ள டம்ளரில் கஞ்சியை ஊற்றி மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறார். நம்மைப் பார்த்ததுமே, “நான் தி.மு.க. காரனய்யா! நாஞ்சில் மனோகரனோடு ஜெயிலில் இருந்தவன்’’ என்கிறார், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு! ‘தி.மு.க.காரன் என்கிறீர்கள். நெற்றியில் நாமம் இட்டி ருக்கிறீர்களே?’ என கேட்டதும், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என அண்ணா அப்பவே சொல்லிவிட்டாரே!’ என்கிறார், வயிற்றுப் பாட்டுக்காக தான் மாறிக்கொண்டதை வெளிக்காட்டாமல்! எப்படி இருப்பினும், தங்கச்சாமி என்கிற இந்த எண்பத்தைந்து வயதுப் பெரியவர், தி.மு.க.வின் வரலாற்றில் புறம்தள்ள முடியாத வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.
1950களின் தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டில் நடந்த திருவிதாங்கூர் அரசக் கொடுமைகள், பலரும் அறிந்த விஷயம்தான். அரசின் கொடுங்கோன்மையைப் பொறுக்க முடியாமல் குமரி மாவட்டப் பகுதிகளை தாய்த் தமிழகத்தோடு இணைக்க உக்கிரமாக போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரம் அது. அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கிக் கொண்டிருந்தது. 1951 செப்டம்பர் 2-ம் தேதி திருவிதாங்கூர் அரசைக் கண்டித்து தென் தாமரைக்குளத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க.வினர் ஏற்பாடு செய்தார்கள். இதுபற்றி போஸ்டர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலமாக அவர்கள் பிரசாரத்தைத் தொடங்கியதுமே, திருவிதாங்கூர் அரசு கோபத்தில் கொதித்தது. தி.மு.க. முன்னணியினர் கடுமையாக மிரட்டப்பட்டனர். அந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த முடியாத அளவுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, போலீஸையும் பெருமளவில் குவித்தது அரசாங்கம்.
உடனே அன்றைய மாவட்ட தி.மு.க. முன்னோடியான நாஞ்சில் மனோகரன், அறிஞர் அண்ணாவைத் தொடர்பு கொண்டு, ‘பொதுக்கூட்டத்தை நடத்தலாமா?’ எனக் கேட் டிருக்கிறார். அண்ணாவோ, ‘உங்கள் முடிவு என்ன?’ என திருப்பிக் கேட்டாராம். அதற்கு நாஞ்சில் மனோகரன், ‘நீங்கள் சொல்வதைச் செய்வதாக முடிவெடுத்திருக்கிறோம்’ என பதில் கொடுத்திருக்கிறார். அப்போது தி.மு.க. தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த காலகட்டம்! கட்சியினர் கைதாகிற அளவுக்கு பெரிய போராட்டங்கள் எதையும் அதுவரை தி.மு.க. நடத்தியிருக்கவில்லை. ஆனாலும் குமரி தி.மு.க.வினரின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, ‘கழகத்தின் கன்னிப் போராட்டம் கன்னியாகுமரியில் இ ருந்து தொடங்கட்டும். தடையை மீறுங்கள். கூட்டத்தை நடத்துங்கள்’ என போனிலேயே உத்தரவு வழங்கியிருக்கிறார் அண்ணா. அன்றைய தி.மு.க. மாவட்டச் செயலாளர் வி.எம்.ஜான், நாஞ்சில் மனோகரன், பின்னாளில் ம.தி.மு.க.வின் சட்டத்துறைச் செயலாளராக இருந்த தோப்பூர் சுப்பிரமணியம், கவிஞர் நக்கீரன் என்கிற குமாரசுவாமி மற்றும் இந்தக் கட்டுரையின் நாயகர் தங்கச்சாமி உள்பட ஒன்பது பேர் மேடையேறியதுமே போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே கோர்ட்டில் எப்படி பதில் சொல்வது? என்றும் இவர்கள் தரப்பிலிருந்து அண்ணாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அண்ணா, ‘நாங்கள் செய்தது சட்டப்படி குற்றமானால் எந்த தண்டனையையும் ஏற்கத் தயார்’ என சொல்லச் சொன்னாராம். இவர்களும் கோர்ட்டில் அப்படியே சொல்ல, ‘ஆளுக்கு பதினைந்து ரூபாய் அபராதம் கட்டுங்கள். அல்லது, பதினைந்து நாட்கள் ஜெயில் தண்டனை அனுபவியுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார் மாஜிஸ்திரேட். இவர்களோ அபராதம் செலுத்த மறுத்து, பதினைந்து நாட்கள் நாகர்கோயிலில் மிகக் கொடுமையான சிறைவாசத்தை அனுபவித்திருக்கின்றனர்.
பின்னாளில் இந்தப் போராட்டத்தை அண்ணா கவுரவித்த விதமும் சிறப்பானது. தி.மு.க.வுக்கு தலைமை அலுவலகம் தேவை என்பதற்காக தேனாம்பேட்டையில் முப்பத்தேழு லட்ச ரூபாய்க்கு ஒரு கட்டடத்தை அண்ணா விலைக்கு வாங்கினார். ‘அறிவகம்’ எனப் பெயரிடப்பட்ட அந்தக் கட்டடத்தை 1957-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி திறந்து வைத்தவர், அன்றைய நாஞ்சில் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த வி.எம்.ஜான்தான். (தற்போது அது தொ.மு.ச. அலுவலகமாக இயங்கி வருகிறது). இந்த வரலாற்றையெல்லாம் கோர்வையாகச் சொல்லும் அளவுக்கு தங்கச்சாமிக்கு நினைவுகள் இல்லை என்றாலும், அவரால் இன்னமும் தனது சிறை அனுபவங்களை நினைவுகூர முடிகிறது. ‘‘அப்பெல்லாம் தி.மு.க.காரன்னு சொன்னாலே விரட்டி விரட்டி அடிப்பாங்கய்யா!. பொதுக்கூட்ட மேடையில் ஏறிட்டு கல்லெறி வாங்காம தப்பி வர முடியாது. காலம் செல்லச்செல்ல, ‘பணம் இருந்தால்தான் அரசியல்’ என்கிற நிலை வந்ததால் நான் ஒதுங்கிட்டேன். ஆனால், இன்னமும் என் ஓட்டு தி.மு.க.வுக்குத்தான். கலைஞர் நாகர்கோயிலுக்கு வர்றாராமே! அங்கு போனால் அவரைப் பார்க்க முடியுமா? என்றபடி... வருகிற 20-ம் தேதி நாகர்கோயிலில் நடக்க இருக்கும் தி.மு.க.வின் முப்பெரும் விழா பற்றி ஆர்வமாக விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.
மெல்ல பேச்சைத் திருப்பி அவரது குடும்ப விவரங்களைக் கேட்டோம். “எனக்கு மூணு பெண் பிள்ளைங்கதான்யா. இருந்த கொஞ்சம் நிலம், ஒரு வீடு ஆகியவற்றை விற்று அவர்களை கரையேத்திட்டேன். எனது வீட்டுக்காரி உடம்புக்கு முடியாமல் அவளோட சொந்த ஊரான பணக்குடிக்குப் போயிட்டா. நமக்கு இங்கு சொத்து இல் லாட்டியும் சொந்தக்காரன் இருக்கான். அவனுக தர்ற காசுல டீ, வடை சாப்பிட்டுக்குவேன். அப்புறம் இந்தக் கோயிலில் மத்தியானம் ‘தர்மக் கஞ்சி தவறாம போட்டுடுவாங்க. யார் வீட்டுலயும் போய் மட்டும் கையேந்தி கேட்கிறதும் இல்லை; சாப்பிடுவதும் இல்லை. அதுதான் நம்ம கொள்கை! என்றவரிடம், ‘கட்சிக்காக சிறைக்குப் போனவர்தானே நீங்கள். இங்குள்ள கட்சி வி.ஐ.பி.க்களிடம் ஏதாவது உதவி கேட்கலாமே? எனக் கேட்டோம். அதற்கு, “இனி நான் என்ன பங்களாவா கட்டப் போறேன். என் மகள்கள் அழைத்துமே நான் போகவில்லை. அதாவது, யாருக்கும் நான் இடைஞ்சலாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான் என்றார் தீர்க்கமாக.
தங்கச்சாமியுடன் சிறையில் இருந்தவர்களில் இன்னமும் எஞ்சியிருப்பவர் கவிஞர் நக்கீரன் என்கிற குமாரசுவாமி மட்டுமே. நாகர்கோயில் வடிவீஸ்வரத்தில் உள்ள வீட்டில் அவரை நாம் சந்தித்தோம். “நானும் சமீபத்தில் தங்கச்சாமியை போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அவரது நிலைமையைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. சைக்கிளில் பெட்ரோமாக்ஸ் லைட்டை கட்டிக்கொண்டு பொதுக்கூட்டங்களுக்கு அலைந்தவர்கள் நாங்கள். அப்படி கட்சிக்காகப் பாடுபட்ட ஒருவர் இன்று பிச்சையெடுக்கிறார் என்பது எவ்வளவு பெரிய அவலம்! கடந்த ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவை நாகர்கோயிலில் கொண்டாடப் போவதாக அறிவிப்பு வெளியானது. உடனே கட்சியின் ஆரம்பகால முன்னோடிகள் முப்பத்திரண்டு பேரை பட்டியலிட்டு, ‘அவர்களை விழாவில் கவுரவிக்க வேண்டும் என கலைஞருக்குக் கடிதம் அனுப்பினேன். பின்னர் கலைஞரின் உடல்நிலை காரணமாக அந்த விழா ரத்தானது. தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 20-ம் தேதி நடப்பதாகத் தெரியவந்ததும், அந்த முப்பத்திரண்டு பேரையும் தொடர்புகொள்ள முயற்சித்தேன். எனக்கே பேரதிர்ச்சி..! அவர்களில் பதினேழு பேர் ஒரே வருடத்தில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். எஞ்சியுள்ள பதினைந்து பேரையாவது இந்த முப்பெரும் விழாவில் கவுரவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் கலைஞருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இல்லாவிட்டால், இன்னும் ஒரு வருடத்தில் இவர்களும் காணாமல் போய்விடுவார்கள். கவுரவிப்பது என்றால், பணத்தைக்கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கலைஞர் கையால் ஒரு சால்வை கிடைத்தால் ஜென்மத்திற்கும் அது போதுமே!. இதுபற்றி குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தும் பலமுறை வலியுறுத்திவிட்டேன். யாரும் இதில் அக்கறை காட்டு வதாகத் தெரியவில்லை. மேலே சொன்ன பதினைந்து பேரும் தினந்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு, ‘கலைஞரைப் பார்க்க முடியுமா? எனக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல?! என ஏக்கப் பெருமூச்சோடு முடித்தார், கவிஞர் நக்கீரன் என்ற குமாரசுவாமி.
கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும், முப்பெரும் விழாவில் ‘கலைஞர் விருது பெறப்போகிறவருமான ஜி.எம்.ஷாவிடம் இதுபற்றி நாம் கேட்டபோது, “கட்சியின் முதல் போராட்டத்தில் பங்கேற்ற தென்தாமரைக்குளம் தங்கச்சாமியையும், இதர முன்னோடிகளையும் கவுரவிக்க தலைமைக் கழகம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார். நமக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.
ச.செல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக