ஞாயிறு, 4 ஜூலை, 2010

தீர்வுகள் அனைத்தையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.

மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் அரசியல் கட்சி அங் கீகாரத்துக்காகத் தேர்தல் ஆணையாளரிடம் விண்ணப்பித்திருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் அரங்குக்கு வந்தது.

அரசியல் கட்சியாக அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தேர்தல்களில் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்த புதிய கட்சியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதான தளமாகக் கொண்ட பதினான்கு அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட இரண்டு கட்சிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தால் இவ்விரு மாகாணங்களையும் பிரதான தளமாகக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை பதினாறாக அதிகரித்துவிடும்.

முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947ம் ஆண்டு நடைபெற்ற வேளையிலேயே இனப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. அதன்பின் நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தலிலும் இனப் பிரச்சினையே பிரதான பேசுபொருளாக இருந்தது.

முதலாவது தேர்தலில் ஒரேயொரு தமிழ்க் கட்சி இருந்த நிலையிலிருந்து இன்று பதினாறு கட்சிகளாக அதி கரிப்பு ஏற்பட்டிருக்கின்றதேயொழிய இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்த வரையில் எவ்வித முன் னேற்றமும் இல்லை.

இக்கட்சிகள் அனைத்தும் இனப் பிரச்சினையின் தீர்வுக்காகச் செயற்படப் போவதாக எல் லாத் தேர்தல்களிலும் வாக்குறுதி அளித்த போதிலும் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்னடைவு கண்டிருக்கி ன்றது. மக்களும் தாங்க முடியாத அளவுக்கு இழப் புகளையும் அழிவுகளையும் சந்தித்து விட்டனர்.

இந்த அவல நிலை பற்றி மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இதுதான் தமிழ் மக்களின் தொடர்ச்சி யான அரசியல் வரலாறு என்று ஆகிவிடக்கூடாது. மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். எத்தனையோ கட்சிகள் அரங்குக்கு வந்த நிலையிலும் அரசியல் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்னடைவு கண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.

முன்வைக்கப்பட்ட தீர்வுகள் அனைத்தையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அத்தீர்வுகள் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், முழுமை யான தீர்வை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான அத் திவாரமாக அவற்றை அமைத்துக்கொண்டிருக்கலாம்.

அத்தீர்வுகளுள் ஒன்றையாவது ஏற்றிருந்தால் முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நி லையை உருவாக்க முடிந்திருக்கும். அண்மைக் காலங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் அழிவுகளையும் தவிர்க்கவும் முடிந்திருக்கும்.

தூரநோக்கும் இராஜதந்திரமும் இல்லாத செயற்பாடுகளின் மூலம் தமிழ் மக்களைத் துயரக் கடலில் தள்ளிய வரலாறு தொடராமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியவர்கள் மக்களே. இன்றைய நிலையில் எது சாத்தியமோ அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவதன் மூலம் இதைச் சாதிக்க முடியும்.
-தினகரன் தலையங்கம் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக